
நாட்டின் சில பகுதியில் மத தொடர்பான பிரச்சனைகளும், சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வரும் இதே இந்தியாவில், தமிழ்நாடு மட்டும் சற்று தனித்தே நிற்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் கோவில், மசூதி, தேவாலயம் என பாகுபாடு இன்றியும் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என எந்த வித வேறுபாடின்றியும் அனைத்து தரப்பு மக்களும் இறைவழிபாடு செய்துவருவது தமிழ்நாட்டிற்கே உண்டான தனிச்சிறப்பு.

அந்த வகையில் மதங்களை கடந்த நல்லிணக்கத்திற்கு சான்றாக மீண்டும் ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரையொட்டி உள்ள கிராமம் வைரி வயல். இந்த கிராமத்தில் கட்டுமாவடி சாலையோரம் உள்ள வீரமுணியாண்டவர் மிக சக்தியுள்ள தெய்வமாக அந்த வழியில் பயணிப்பவர்களே கூறுகின்றனர். அதன் காரணமாக வீரமுணியாண்டவர் கோயிலை கடக்கும் போது அவ்வழியாக செல்லும் பக்தர்கள் ஒரு நிமிடம் நின்று வணங்கி விட்டு காணிக்கை செலுத்திச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வீரமுணியாண்டவர் கோயில் குடமுழுக்கு இன்று காலை நடந்தது. அதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று குடமுழுக்கு நிகழ்வை கண்டுகளித்தனர். அப்போது கருப்பு புர்கா அணிந்து வீரமுணியாண்டவர் கோயிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் ஒருவர், புனித நீர் குடம் தூக்கி வந்ததை பார்த்து பக்தர்கள் இருகரம் கூப்பி வணங்கிய போது தன் கையை நெஞ்சில் வைத்து நெஞ்சுருக வணங்கினார்.

அங்கிருந்த பக்தர்களோ, வீரமுனியாண்டவர் ரொம்ப சக்திமிக்கவர். இஸ்லாமிய பெண்ணின் வேண்டுதல் நிறைவேறியதால் இன்று ஒற்றை ஆளாய் குடமுழுக்கில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல இதேபோல் ஏராளமான மாற்றுமத பக்தர்கள் வந்து வீரமுணியாண்டவரை வணங்கிச் செல்கின்றனர் என்றனர் பெருமையாக.