
தென் கொரிய அதிபராக இருந்த யூன் சுக் யியோல் கடந்தாண்டு டிசம்பர் 3ஆம் தேதி இரவு அந்நாட்டில் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை அறிவித்தார். நாட்டின் நிர்வாகத்தை எதிர்க்கட்சிகள் குறுக்கீடு செய்வதாகவும், வடகொரியாவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், எதிர்நிலை செயல்பாடுகளை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டி யூன் சுக் யியோல், அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தினார். இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்ததால், இந்த அவசரநிலை ராணுவச் சட்டத்தை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யியோல் அறிவித்தார்.
ராணுவ நிலை அவரச சட்டம் அமல்படுத்தியதற்கு தென்கொரிய அதிபர் யூன் சுக் யியோல் பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தினர். அதனை தொடர்ந்து, தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் ஆளுங்கட்சி உள்பட 204 உறுப்பினர்கள், அதிபரின் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால், பெரும்பான்மை கிடைத்த பட்சத்தில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த விவகாரத்தில் யூன் சுக், சதி தீட்டம் தீட்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் பதவி நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையில், அவசர நிலை பிரகடனபடுத்தியால் யூன் சுக் யியோலை கைது செய்ய தென்கொரியாவில் உள்ள சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 15ஆம் தேதி தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோலை ஊழல் விசாரணை அதிகாரிகள் கைது செய்தனர். அதன் பிறகு, அவர் விடுவிக்கப்பட்டார். ஆட்சியில் இருக்கும் போதே கைதாகும் முதல் தென் கொரிய அதிபர் இவர் தான் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதால் அதிபர் யூன் சுக் யியோல் மீதான வழக்கு அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று (04-04-25) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நாட்டின் மிக மோசமான அரசியல் நெருக்கடியைத் தூண்டிய குறுகிய கால இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதற்காக நாடாளுமன்றத்தின் பதவி நீக்கத் தீர்மானத்தை உறுதி செய்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பதவி நீக்கம் உறுதி செய்யப்பட்ட செய்தியை அறிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் கொண்டாடி ஆரவாரம் செய்து வருகின்றனர்.
அதிபர் யூன் சுக் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தென் கொரிய நாட்டின் அரசியலமைப்பின்படி, 60 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.