சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (09.03.2021) காலை 11 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக கொடுக்க இருக்கும் குறைந்த தொகுதிகளை ஏற்பதா? அல்லது தனித்து நிற்பதா? என மாவட்டச் செயலாளர்கள் உடனான அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம், அவரது முடிவை ஏற்போம் என ஒருமித்தக் கருத்தை மாவட்டச் செயலாளர்கள் வெளியப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தேமுதிகவை பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான தேர்தல். கட்சி சின்னத்தை தக்கவைக்க வேண்டுமெனில் குறைந்தது 6 தொகுதிகளில் தேமுதிக வெற்றிபெற வேண்டும் என்ற நிலை உள்ளதால், தற்போது அதிமுக கொடுக்கும் இடங்களை ஏற்பதா? அல்லது தனித்து போட்டியா? என்பதை முடிவெடுக்கும் சூழலில் தேமுதிக உள்ள நிலையில் தற்போது, அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த முடிவால் வரும் தேர்தலில் தேமுதிக தனித்து நிற்குமா? அல்லது வேறு யாருடனேனும் கூட்டணி இருக்குமா என நாளை தெரியவரும் எனக் கூறப்படுகிறது.