![த](http://image.nakkheeran.in/cdn/farfuture/jGUOa5bzXkxCuUL9AQNlb9UoEcIoPhpdk8j9PJhXbBk/1671118695/sites/default/files/inline-images/jkl_110.jpg)
தமிழக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவரின் இந்த அமைச்சரவை நுழைவை எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த மூத்த தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதியிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரைப் பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து எதிர்க் கட்சியினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக பாஜக, அதிமுக தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கிடையே நேற்று ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றதைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். குறிப்பாகக் கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின், அவருக்குப் பிறகு உதயநிதி என்று முடிசூட்டு விழா நடைபெற்று முடிந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு எதிர்க்கட்சியினுடைய வேலை முதலில் என்னவாக இருக்க வேண்டும். ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் திட்டங்கள், நடவடிக்கைகளில் குறைகள் ஏதும் இருந்தால் அதுபற்றி பேசுவதற்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் ஆளும் கட்சியில் யாரை மந்திரியாக்க வேண்டும், யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு எதிர்க்கட்சியினர் பேச வேண்டிய அவசியமில்லை. இந்த அரசியலமைப்பு, சட்டமன்ற உறுப்பினராக உள்ள யாரையும் அமைச்சராக்க வழிவகை செய்துள்ளது. எனவே அதை ஒரு அரசிடம் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்பது எப்படிச் சரியாகும். முதல்வருக்கு யாரையும் அமைச்சராக்க உரிமை உள்ளது.
அதேபோல நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவர் ஒன்றிய அரசில் அமைச்சராக எல்லா தகுதியும் பெற்றுவிடுகிறார். இதுதான் இந்திய அரசியலமைப்பு ஒருவருக்கு அமைச்சராக நிர்ணயித்துள்ள தகுதி. அதைத்தாண்டி இவர்கள் சொல்லும் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அமைச்சராக இவர் இப்படி இருக்க வேண்டும், வேட்டிக் கட்டியிருக்க வேண்டும், பேண்ட் போட்டிருக்கக் கூடாது என எந்தத் தகுதியும் இல்லை. குற்றம் சுமத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எதையும் அப்படியே பார்ப்பார்கள். எனவே அவர்களுக்கு அந்த நோக்கமே பிரதானமாக இருக்கும். இல்லை எடப்பாடி மாதிரி ஏன் யோகா பண்ணி பதவி வாங்கவில்லை என்று அவர் நினைக்கிறாரோ என்று தெரியவில்லை. நாங்கள் அந்த மாதிரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை, தங்களுக்குத் தாங்களே பரிவட்டம் கட்டிக்கொள்கிறார்கள், அதிமுகவிலிருந்து போனவர்கள் எட்டு பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை அதே பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
1972ல் மொத்தமாக திமுகவிலிருந்து போனவர்கள்தான் அண்ணா திமுக என்ற கட்சியே. எம்ஜிஆர் அவர்களே திமுகவின் பொருளாளராக இருந்தவர்தான். எனவே திமுகவின் பொருளாளராக இருந்தவர் உருவாக்கிய இயக்கம்தான் அதிமுக என்பதை எடப்பாடி பழனிசாமி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி எல்லாம் எம்ஜிஆர் அவர்களைப் பார்த்திருப்பாரா என்று கூடச் சொல்ல முடியாது. நமது தலைவர் எம்ஜிஆர் அவர்களோடு தினமும் தொடர்பில் இருந்தவர்; மடியில் விளையாடியவர். இவரைப்போல் பின்புற வழியில் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. எனவே திமுக தொண்டர்களைப் பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
ஒரு எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறை இருக்கிறது. ஆளும் அரசில் ஏதேனும் குறை இருந்தால் அதைப்பற்றிப் பேசலாம். ஆனால் அவர் என்னவோ திமுக செய்தித்தொடர்பாளர் போல திமுகவுக்காக இந்த அளவுக்குக் கவலைப் படுகிறார் என்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. இல்லை, தொண்டர்கள் யாராவது நீங்கள் இப்படிப் பேசுங்கள் என்று அவரிடம் வேண்டுகோள் வைத்தார்களா? இவர்களைப் போல் தமிழகத்தை டெல்லியில் நாங்கள் அடமானம் வைக்கவில்லை. எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எங்களால் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ அதைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.
திமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் செய்வோம். அதிமுக போலப் பொய் வாக்குறுதிகளை எதையும் நாங்கள் கொடுக்கவில்லை. நிதி நிலை விவகாரங்களுக்காக சில திட்டங்கள் தொடக்கப்படாமல் இருக்குமே தவிரத் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன அனைத்தையும் நாங்கள் நிச்சயம் செய்வோம். அதில் யாருக்கும் எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி திட்டங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அரசுக்கு ஆலோசனை தரலாமே தவிரக் கட்சியில் யாரை அமைச்சராக்க வேண்டும் என்பதெல்லாம் அவருடைய வேலை கிடையாது.