Skip to main content

அன்று எக்னாமி ரேட் 10, இன்று உலகின் நம்பர் 1 பவுலர்...

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
bumrah


 

ஜஸ்ப்ரிட் பும்ராஹ். ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசை பட்டியலில் பந்து வீச்சில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் பவுலிங் நம்பிக்கை நட்சத்திரம். அதே ஐ.சி.சி. ஒரு நாள் தர வரிசை பட்டியலில் பேட்டிங்கில் முதல் இடத்தில் இருப்பவர் விராட் கோலி. கோலியை நாம் கொண்டாடிய அளவில் பத்தில் ஒரு பங்கு அளவு கூட நாம்  பும்ராஹ்வை கொண்டாடவில்லை என்பதே உண்மை. 
 

ஒரு நாள் போட்டிகளில் 2016 முதல் இன்று வரை கிரிக்கெட் உலகில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு முக்கிய பங்காற்றியவர் பும்ராஹ். தன்னுடைய கிரிக்கெட் வாழ்வில் சாதாரணமாக இன்றுள்ள இந்த இடத்தை அவர் அடைந்து விடவில்லை. மிகப்பெரிய சோதனைகளையும், சில இறக்கங்களையும் சந்தித்து, அதை கடந்துதான் உலகின் நம்பர் 1 பவுலர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இன்றுள்ள வேகபந்து வீச்சாளர்களில் யாரும் இவரை போல யார்கர் வீச இயலாது. ஓவரின் ஆறு பந்துகளையும் யார்கர் பந்துகளாக வீசுவதில் இவருக்கு இந்த தலைமுறையில் ஈடுஇணை கிடையாது. வாசிம் அக்ரம், லசித் மலிங்கா வரிசையில் இவரும் யார்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கபடுகிறார்.


2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றார் பும்ராஹ். தனது முதல் ஐ.பி.ல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக களமிறங்கினார். விராட் கோலி, க்ரிஸ் கெயில் போன்ற உலகத்தரம் வாய்ந்த அதிரடி வீரர்களுக்கு பந்துவீச நேர்ந்தது. தனது முதல் ஓவரை இன்று நம்பர் 1 பேட்ஸ்மேனாக உள்ள கோலிக்கு வீசினார். முதல் இரண்டு பந்துகள் பவுண்டரி. மூன்றாவது பந்து டாட். நான்காவது பந்து மீண்டும் பவுண்டரி. ஐந்தாவது பந்தில் கோலியை எல்.பி.டபள்யூ. முறையில் ஆட்டமிழக்க செய்தார். அவரின் மூன்றாவது ஓவரில் கெயில் 1 சிக்ஸ், 1 பவுண்டரி. இப்படி சோதனைகளை சந்தித்தாலும் 4 ஓவரில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்த போட்டியில் 3  ஓவரில் 38  ரன்களை கொடுத்தார். விக்கெட் ஏதும் விழவில்லை. 2013-ல் விளையாடிய இரண்டு போட்டிகளில் எக்னாமி ரேட் 10.

 

bumrah


 

2014-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 11 போட்டிகளில் விளையாடிய பும்ராஹ் 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார். 2015-ல் 4 போட்டிகளில் 3 விக்கெட்கள், எக்னாமி ரேட் 12.  தனது பந்து வீச்சில் உள்ள குறைபாடுகளை கணடறிந்து அதை மாற்றுவதில் பயிற்சி எடுக்க தொடங்கினார். அதற்கு பிறகு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் 9 போட்டிகளில் 21 விக்கெட்களை வீழ்த்தினார். மற்ற உள்ளூர் போட்டிகளிலும் மிகசிறப்பாக விளையாடினார். இதன் காரணமாக தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்தார். 

2016-ன் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் முஹம்மது சமியின் காயம் காரணமாக பும்ராஹ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தினார். அன்று முதல் இன்று வரை அவருக்கு ஏறுமுகம் தான். அந்த தொடரில் கிடைத்த 1 ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். டி20-ன் 3 போட்டிகளில் 6 விக்கெட்களை கைபற்றினார். பிறகு இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் 3 விக்கெட்கள், எக்னாமி ரேட் 4.60.  அடுத்து நடைபெற்ற ஆசிய கோப்பை டி20-ன் 5 ஆட்டங்களில் 6 விக்கெட்கள், எக்னாமி ரேட் 5.22.  

 

bumrah


 

கடந்த மூன்று வருடங்களில் நடந்த ஐ.பி.ல்.-லில் 44 போட்டிகளில் 52 விக்கெட்கள், எக்னாமி ரேட் 7. ஐ.பி.ல்.-ன் சிறந்த பவுலராக உருவெடுத்துள்ளார். இதுவரை 44  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 78 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார், எக்னாமி ரேட் 4.45. சர்வதேச டி20-ல் 37 ஆட்டங்களில் 46 விக்கெட்கள்,  எக்னாமி ரேட் 6.74.  இப்படி விக்கெட்கள் வீழ்த்துவதிலும், ரன்களை கட்டுபடுத்துவதிலும் வல்லவரான இவர் இந்திய அணிக்கு கிடைத்தது பாக்கியம். இந்திய அணிக்கு ஜாகிர் கானுக்கு பின்பு சிறந்த பவுலர்கள் இல்லாமல் தவித்த உலகத்தரம் வாய்ந்த புவனேஷ் மற்றும் பும்ராஹ் கிடைத்துள்ளனர். 


இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறும்போது கேப்டனின் முதல் அழைப்பு பும்ராஹ்க்கு தான் இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு துணைபுரிவார். ஒருநாள் போட்டிகளில் 40-50 ஓவர்கள், டி20-ல் 15-20 ஓவர்கள் என இறுதி கட்ட ஓவர்களில் ரன்களை கட்டுபடுத்தி, விக்கெட்களை வீழ்த்தி எதிரணியை தடுமாற செய்வதில் இன்றைய காலகட்டத்தில் இவருக்கு இணை யாரும் இல்லை. பேட்ஸ்மேன்களுக்கு இணையாக, சில சமயம் அதிகமாக ஆற்றலை வெளிபடுத்தும் பவுலர்களுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவது கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.