ஜூன் 2, 2023 வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையம் அருகே ஷாலிமர் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் அதன் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. அதே நேரத்தில் பெங்களுரூ - ஹவுரா விரைவு ரயிலும் வந்துகொண்டிருக்க, கோரமண்டல் ரயிலில் இருந்து தடம் புரண்ட பெட்டிகள் மீது ஹவுரா விரைவு ரயில் மோத நாட்டையே உலுக்கிய கோரவிபத்து நடந்தது. இந்த விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதேபோல், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்த ஆளும் பா.ஜ.க. அரசுக்கும் நெருக்கடிகள் எழுந்தன.
இந்த விபத்தின் போது, இரு விஷயங்கள் இந்தியா முழுக்க பரவலாகப் பேசப்பட்டது. ஒன்று ரயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மற்றொன்று ரயில் விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்பமான கவாச் எங்கே எனும் கேள்வி எழுப்பப்பட்டது. ரயில் விபத்து ஏற்பட்டு பல நூறு மக்கள் பரிதாபமாக பலியாகி, ஆயிரக்கணக்கான மக்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசுக்கு நெருக்கடியைத் தர பா.ஜ.க. அரசு இந்த ரயில் விபத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியது. பிறகு ஒரு மாதம் கழித்து பாலசோர் ரயில் விபத்திற்கு தென்கிழக்கு ரயில்வே பொதுமேலாளராக இருந்த அர்ச்சனா ஜோசி பணி நீக்கம் செய்யப்பட்டு அந்தப் பொறுப்புக்கு அணில் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
கடந்த காலங்களில் ரயில் விபத்துகளின் போது ஒன்றிய ரயில்வே அமைச்சர்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலகியதாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது. குறிப்பாக 1956ம் ஆண்டு 140க்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய அரியலூர் ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அன்றைய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். அஸ்ஸாம் கெய்சல் ரயில் விபத்துக்கு ஒன்றிய அமைச்சராக இருந்த நிதிஷ் குமார் பதவி விலகினார். 2000ம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அதே ஆண்டில் நடந்த இரு ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அன்றைய ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். ஆனால், அதனை பிரதமர் வாஜ்பாய் நிராகரித்தார். பா.ஜ.க. ஆட்சியிலேயே பா.ஜ.க.வைச் சேர்ந்த சுரேஷ் பிரபு ஒன்றிய ரயில்வே அமைச்சராக இருந்த 2017ல் நடந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். அந்த வகையில் அஷ்வினி வைஷ்ணவ் தனது ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், அவர் அந்தப் பதவியில் தற்போது வரை தொடர்ந்து வருகிறார்.
அந்த ரயில் விபத்தின் போது பெரிதாகப் பேசப்பட்டது ‘கவாச்’ தொழில் நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் கொண்டு ரயில் விபத்துகளை பெரும் அளவில் தடுக்கலாம். இரு ரயில்கள் ஒரே பாதையில் பயணிக்கும் போது குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பே ரயிலின் வேகம் தாமாகக் குறைக்கப்படும். இதன் மூலம் வேகமாக வரும் ரயிலை எளிதில் நிறுத்தி விபத்தைத் தவிர்க்கலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டது.
இது குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த திரிணாமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேட், “மொத்த இந்திய ரயில் பாதைகளில் 2% மட்டுமே கவாச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது. மம்தா பானர்ஜி (2011 -2012) ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது Train Collision Avoidance System என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் வழக்கம்போல் அதிகாரத்துக்கு வந்ததும் கவாச் என்று பாஜக அந்த திட்டத்துக்கு பெயர் மாற்றி அதற்கான பெருமையை ஏற்றுக் கொண்டது” என்று தெரிவித்திருந்தார்.
ஒடிசா, பாலசோர் ரயில் விபத்து நடந்து சில மாதங்களிலேயே பீகாரில் ஒரு விரைவு ரயில் தடம் புரண்டு 4 பேர் பலியாகினர். அப்போதும் கவாச் குறித்தான கேள்விகள் எழுந்தன. இப்படி ஜூன் முதல் அக்டோபர் வரையிலான நான்கு மாத இடைவெளியில் இரு ரயில் விபத்துகள் நடந்திருந்த நிலையில், கடந்த 29ம் தேதி ஆந்திரா மாநிலத்தில் மீண்டும் ஒரு கோரச் சம்பவம் நடந்தது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கண்டகாபள்ளி ரயில் நிலையம். இந்த ரயில் நிலயத்திற்குச் சற்று முன்பாக மேலே செல்லும் ரயில் கேபிளில் பழுது ஏற்பட்டுள்ளது. இந்தப் பழுதை சரி செய்வதற்காக அந்த வழியாக வந்த விசாகப்பட்டினம் - பாலசா பயணிகள் ரயில் இரவு 7.10 மணி அளவில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள் பழுதை நீக்கிக் கொண்டிருந்த போது அதே பாதையில் வேகமாக வந்த விசாகப்பட்டினம் - ராயகடா விரைவு ரயில் பயணிகள் ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் மொத்தம் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ஒரு பெட்டியின் பாதி வரை முழுமையாக நசுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் தற்போது வரை 19 பேர் பலியாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீஸ், தீயணைப்புத் துறை, ரயில்வே போலீஸ், ஆம்புலன்ஸ் ஆகியவற்றிற்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களும் வந்து ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு விஜயநகர அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் உடல்களையும் மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, ஒன்றிய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், ''ஜூன் 2023ல் சோகமான பாலசோர் ரயில் விபத்து நடந்த சில மாதங்களுக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் ரயில் மோதிய விபத்து ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் தங்கள் பயணத்திற்காக ரயில்வேயை நம்பியுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் மத்திய அரசும், ரயில்வேயும் அவசரமாக மறுமதிப்பீடு செய்து, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தி, பயணிகளின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு 10 லட்சமும், கடுங்காயம் உற்றவர்களுக்கு 2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலசா பயணிகள் ரயிலின் 11 பெட்டிகளும் அலமண்டா ரயில் நிலையத்திற்கும், ராயகடா விரைவு ரயிலின் 9 பெட்டிகள் கண்டகாபள்ளி ரயில் நிலையத்திற்கும் எடுத்து செல்லப்பட்டன. மேலும், தடம் புரண்ட பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மட்டும் ஒரு நாளில் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையானது. அப்படிப்பட்ட ரயில்வே துறையில் பாலசோர், பீகார், கண்டகாபள்ளி எனத் தொடர்ந்து ரயில் விபத்துகள் நடப்பதை ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தி விலைமதிப்பற்ற மக்கள் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆதங்கமாக இருக்கிறது.