இந்திய நாட்டின் மக்கள் தொகை 136.45 கோடி. இது உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 17.74 சதவீதம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா போன்ற நாடுகளில் அனைவருக்கும் தகுதிக்கு ஏற்றார்போல வேலைவாய்ப்பை அளிப்பது எந்தவொரு அரசாங்கத்திற்கும் இயலாத ஒன்று. ஆனால் அடிப்படை வேலைவாய்ப்புகளும், பெரியளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடைமுறைகளும் இல்லாத இன்றைய நிலைக்கு ஆளும் அரசுகளும், ஆண்ட அரசுகளும் தான் காரணம்.
பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களில் 4-ல் ஒருவர் மட்டுமே தன் துறை சார்ந்த வேலைகளில் அமர்வதும், மற்றவர்கள் துறை சாராத வேலைகளுக்கு செல்வதும், மிகவும் குறைந்த ஊதியத்தில் தன் படிப்புக்கு துளியும் சம்பந்தம் இல்லாத வேலைகளுக்கு செல்வதும், வேலைவாய்பின்றி தவிப்பதும் இன்று நடைமுறை வழக்கமாக மாறிவிட்டது.
பொறியியல் படிப்பில் மட்டுமே அதிக வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக ஒரு பிம்பம் சமீப காலமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் கலை, அறிவியல் உள்ளிட்ட பெரும்பாலான படிப்புகளை முடித்த மாணவர்களும் சரியான வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வே துறையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்த புள்ளிவிவரங்கள் வெளியாகி, நாம் வேலைவாய்ப்பு விஷயத்தில் திசையின்றி சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது.
ரயில்வே துறையில் சமீபத்தில் 62,907 குரூப் டி லெவல் 1 பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ரயில்வே துறையில் கீழ்நிலையில் வேலை செய்யும் பணியாளர்களை தேர்வு செய்ய நடத்தப்படுவது குரூப் டி லெவல் 1 தேர்வு. இந்த பிரிவிலிருந்து கேட்மேன், ஹெல்ப்பர், டிராக்மேன் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் எடுப்பார்கள். இந்த பணிகளுக்கு உடல்தகுதித் தேர்வும் நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதி 10-ஆம் வகுப்பு.
சுமார் 2 கோடி பேருக்கும் மேல் இதற்கு விண்ணப்பித்திருக்கின்றனர். இதில் 4,19,137 பேர் பி.டெக் முடித்தவர்கள், 40,751 பேர் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள், 19.1 லட்சம் பேர் கலைத் துறை இளநிலை பட்டதாரிகள், 3.83 லட்சம் பேர் கலைத் துறை முதுநிலை பட்டதாரிகள், 9.57 லட்சம் பேர் அறிவியல் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றவர்கள், 1,27,018 பேர் அறிவியல் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். கிட்டத்தட்ட 82 லட்சம் பேர் பட்டதாரிகள் என்பது குறிபிடத்தக்கது.
ரயில்வே துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி 2018-ஆம் ஆண்டில் பாதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள 75,485 பேரில் பலர் இஞ்சினியரிங் அல்லது வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள் தான். இந்தியாவில் வேலை வாய்ப்பு நிலை எந்தளவிற்கு உள்ளது என்பதற்கு உதாரணமாக இது உள்ளது. பட்டம் பெற்ற சிலர் நல்ல தகுதியிருந்தும் அவர்களுக்கு ஏற்ற வேலை இல்லாமல் கிடைக்கிற வேலையை செய்து வருகின்றனர்.
ஆட்டோமேசன் என்ற புதிய தொழில்நுட்பத்தின் வருகையால் வேலைவாய்ப்பு இருக்காது என்ற அச்சம் இன்று அதிகமாக உள்ளது. ஆனால் எவ்வளவு புதிய தொழில்நுட்ப முறைகள் வந்தாலும் மக்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும், மக்களின் தேவை நாளுக்கு நாள் மாறுபடும் என்பதையும், அதனால் வேலைவாய்ப்பு எப்பொழுதும் சமூகத்தில் இருக்கும் என்பதையும் நாம் உணர வேண்டும்.
அரசாங்க வேலை, தனியார் வேலை மற்றும் சுய தொழில் என மூன்று விதமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அரசாங்க மற்றும் தனியார் துறை சார்ந்த வேலை மட்டுமே மதிப்பு மிக்க ஒன்றாக சமூகத்தில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. விருப்பமும், தன்னம்பிக்கையும் இருந்தும் திருமணம், சமூகத்தின் கேலி, கிண்டல்கள், குடும்ப சூழ்நிலைகள், ஆதரவின்மை, தெளிவான விழிப்புணர்வின்மை போன்றவை இன்றைய கால இளைஞர்களை சுய தொழில் தொடங்க விடாமல் தடுக்கிறது. இந்த நிலை மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
கடந்த சில வருடங்களாக வேலை வாய்ப்பின்மை பல்வேறு பிரச்சனைகளை குடும்பங்களிலும், சமூகத்திலும் ஏற்படுத்தி வருகிறது. இது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், உயர்பதவியில் உள்ளவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தேவையான திட்டங்களை தர தவறிவிட்டனர். இதன் தீவிரத்தன்மையை பலர் இன்னும் உணராமல் இருப்பது கவலைக்குறிய ஒன்று. வேலைவாய்ப்பின்மை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.