கிரிக்கெட் தமிழ் வர்ணனை என்றாலே வேண்டவே வேண்டாம் எனத் தமிழர்களே சொல்லும் நிலையில்தான் இப்போதும் தமிழ் வர்ணனை இருக்கிறது. கிரிக்கெட்டே தெரியாது என வர்ணனையின்போது பெருமைப்பட்டுக்கொள்ளும் வர்ணனையாளர்கள் தான் இப்போதும் இருக்கிறார்கள். ஆனால் 80,90-களிலேயே தன் காந்தக் குரலால் தமிழ் வர்ணனையை மக்கள் நேசிக்கும் வண்ணம் தந்தவர் அப்துல் ஜப்பார்.
அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் குறித்து அந்த நிறுவனத்துக்குக் கடிதம் எழுதும் அப்துல் ஜப்பார், ஒருமுறை அந்த வானொலி செய்த கிரிக்கெட் தமிழ் வர்ணனையை விமர்சித்துக் கடிதம் எழுதினார். கடிதத்தைப் பார்த்த அகில இந்திய வானொலி, அவரை கிரிக்கெட் போட்டிக்கு வர்ணனை செய்யவருமாறு சவாலாக அழைப்பு ஒன்றை விடுத்தது. அகில இந்திய வானொலியின் சவால், அவரது குரலை எட்டுத் திக்கும் ஒலிக்கச் செய்தது. தமிழ் வர்ணனையில் ஒரு சரித்திரமானார் அப்துல் ஜப்பார். முதன் முதலாக தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும் இடையேயான ரஞ்சி போட்டியை வர்ணனை செய்த அவரது குரல், தமிழ்நாட்டின் முக்கியக் குரலாக மாறிப்போனது. சென்னையில் நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும், உள்ளூர்ப் போட்டிகளுக்கும் அவரது குரல் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது. 90-களில் தனியாளாக இந்திய கிரிக்கெட்டிற்கு அழகு சேர்த்த சச்சினைப்போல், தமிழ் வர்ணனைக்கு அழகு சேர்த்தார் அப்துல் ஜப்பார்.
அப்துல் ஜப்பார் தன் குரலால், இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ரசிகர்களை சம்பாதித்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது வர்ணனையால் ஈர்க்கப்பட்டு அவரை நேரில் அழைத்துக் கௌரவித்தார். பிரபாகரனின் பாராட்டே தனது வாழ்வில் கிடைத்த சிறந்த பாராட்டு எனக் குறிப்பிட்டுள்ளார் அப்துல் ஜப்பார். பிரபாகரனை சந்தித்த தனது அனுபவங்களைப் புத்தகமாகவே வெளியிட்டுள்ள அவர், மேலும் சில புத்தகங்களை எழுதியுள்ளார். அகில இந்திய வானொலியில் தமிழ் வர்ணனை நிறுத்தப்பட்ட பிறகு ஈ.எஸ்.பி.என், நியோ ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளிலும் கிரிக்கெட் வர்ணனை செய்துள்ளார் அப்துல் ஜப்பார்.
கிரிக்கெட் போட்டியை இன்று நாம் ஹை-டெஃபனேஷனில் கண்டு களிக்கிறோம். இன்டர்நெட் மூலம் மொபைல் ஃபோன்களில் பார்த்து ரசிக்கிறோம். அப்படியும் வர்ணனை சரியில்லாவிட்டால் கோபத்தை வெளிப்படுத்துகிறோம். ஆனால் வெறும் செவி வழியாக மட்டுமே, கிரிக்கெட்டை மனத்திரையில் ஒளிபரப்புச் செய்தவர் அப்துல் ஜப்பார். அவரது குரல் இன்று நிரந்தர மவுனத்திற்குச் சென்றுவிட்டது. அன்றைய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மட்டுமின்றி, இன்று அழகு தமிழில் கிரிக்கெட் வர்ணனை கேட்கவேண்டும் என நினைப்பவர்களுக்கும், தமிழ் வர்ணனைக்கும் அப்துல் ஜப்பாரின் நிரந்தர மவுனம் ஈடுசெய்ய முடியாத இழப்புதான்.