"எங்கள் ஆட்சி அமைந்தால், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தருவோம்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிப்பதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா கூறியுள்ளார்.
கடந்த 15 வருடங்களில்தான் பெண்கள் புதுப்புது துறைகளில் கால்பதித்து சாதித்துக் கொண்டிருக்கின்றனர். ராணுவத்தில் இதுவரை பதவி உயர்வே இல்லாமல் இருந்தது. இந்த வருடம்தான் பதவி உயர்வு உண்டு என்பதை அறிவித்திருக்கிறார்கள். பெண்கள் வேலைக்கு செல்ல காரணமே குடும்ப பாரத்தை குறைக்கணும், பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவர வேண்டும், தங்களுக்கு உள்ள திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் திரும்பவும் கரண்டியை பிடித்தால் சம்பளம் உண்டு. அடுப்பங்கறையில் இருந்தால் சம்பளம் உண்டு என்பது என்ன நியாயம்? பெண்களை மீண்டும் அடிமையாக்கி, அடுப்பங்கறையில் இருங்கள் என்று சொல்வதா? பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் சரியாக இருப்பார்கள். வேறு எந்த வேலைக்கும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். ஒரு அரசியல் கட்சி நடத்துபவர் என்ற வகையிலும், ஒரு பெண் என்ற வகையிலும் இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கமலுடன் இருப்பவர்கள் வசதிப்படைத்தவர்கள், பணபலம் உள்ளவர்கள். நடுத்தர, பாமர மக்களின் வாழ்க்கைப் பற்றி அவருக்கு தெரியாது.
குடும்பம் என்பது பாசத்தால் பிணைக்கப்பட்டது. பிள்ளைகளுக்கு, கணவருக்கு, பெற்றோர்களுக்கு மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு பாசத்தால், அன்பால் சமைக்கிறார்கள் பெண்கள். இதில் வேலை செய்வதற்கு சம்பளம் என்று சொல்வது மலிவான அரசியல் என்றே பார்க்கத் தோன்றுகிறது. தமிழகம் எவ்வளவு கடனில் உள்ளது? அதனை எப்படி அடைப்பது? கஜானா காலியாக உள்ளதால் அடுத்து எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் சிக்கல்தான். ஒரு கட்சித் தலைவராக அந்த கடன்களை எப்படி தீர்ப்பது என்று நான் யோசிக்கிறேன்.
ஆனால் கமலுக்கு இதெல்லாம் தெரியுமா? கமலுக்கு அரசியல் தெரியாது. அதனால்தான் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தருவோம் என்றெல்லாம் பேசி வருகிறார். புதிய அரசியல் என்கிற பெயரில் பெண்களுக்கு நல்லது செய்வதாக இதுபோன்ற கருத்துக்களை சொல்ல வேண்டாம். தயவு செய்து உங்கள் வாயை மூடுங்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதுபோலவே நினைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கிறார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.