கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல், ஆளும் பினராய் விஜயனின் எல்.டி.எஃப். அணிக்கு, அக்னிப் பரீட்சைதான். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு, உள்ளாட்சித் தேர்தலைப் பதமாக எண்ணிப் பாய்ச்சலைக் காட்டியது எல்.டி.எஃப். அதே சமயம் எல்.டி.எஃப். அணியை ஒரு வழியாக்கிவிட வேண்டுமென்று காங்கிரசும் வியூகமெடுத்தது. அடுத்த சவாலாக மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், எல்.டி.எஃப்பை வீழ்த்த துணைக்கட்சிகளை இணைத்துக்கொண்டும், கேரளத் தங்கக் கடத்தல் விவகாரம் போன்றவைகளை வலுவான ஆயுதமாகவும் பினராய் அரசுக்கு எதிராகப் பயன்படுத்தியது.
இதுபோன்று எல்.டி.எஃப். அணிக்கு, திரும்பிய பக்கமெல்லாம் கடும் நெருக்கடி. ஆனாலும் இவை அனைத்தையும் ஒரு பொருட்டாகக் கருதாத பினராய் விஜயனின் எல்.டி.எஃப். அணி, ஆட்சியின் சாதனையை முன் வைத்தே பிரச்சாரத்தைக் கொண்டுசென்றது.
இந்தத் தேர்தலில், எல்.டி.எஃப்-ன் உறுப்பு அணிகளான டி.ஒய்.எஃப்.ஐ., எஸ்.எஃப்.ஐ. உள்ளிட்ட அணிகள் தரைச்சக்கரமாய் சுற்றி தேர்தல் பணிகளை மேற்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக எல்.டி.எஃப். அணியின் வேட்பாளர்களில் 20 சதவீதம் பேர் இளைஞர் பட்டாளம்.
விளைவு, உள்ளாட்சித் தேர்தலில் முதன்மை ஸ்தானத்திற்கு வந்த எல்.டி.எஃப். அணி, குறிப்பாக மாநிலத்திலுள்ள 6 மாநகராட்சிகளில், ஐந்து மாநகராட்சியைத் தன் வசப்படுத்தியது. திருவனந்தபுரம் மாநகராட்சியின் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 55 வார்டுகள் எல்.டி.எஃப். அணியும், பா.ஜ.க. 35, காங்கிரஸ் 10 வார்டுகள் என்ற அளவில் கைப்பற்றியுள்ளன.
இதில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக யாரைத் தேர்வு செய்வது என்பது பற்றிய நிலைப்பாடு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் ஆய்வுக்கு வந்திருக்கிறது.
விவகாரத்தின்போது கட்சியின் சாதாரணத் தொண்டனாகப் பணியாற்றி சி.பி.எம்.-ன் மேல்மட்டப் பொறுப்புவரை வளர்ந்தவரும், துணிச்சலாக பிரச்சனைகளை அணுகுபவருமான (21 வயது கல்லூரி மாணவி) ஆர்யா ராஜேந்திரனை வரும் 28ஆம் தேதி மேயராக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்திலுள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மற்றும் சட்டம் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவிதான் ஆர்யா ராஜேந்திரன். இந்தத் தேர்தலின் மூலம், 21 வயதேயான 'இளம்பெண் மேயர்' என இந்தியாவின் பார்வையை இடது சாரிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
வாடகை வீட்டில் வாழ்க்கை என்ற அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது மாணவி ஆர்யா ராஜேந்திரனின் குடும்பம். தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் தினக்கூலி லேபர். தாய் ஸ்ரீலதாவோ எல்.ஐ.சி.யின் ஏஜெண்ட் என வேலைபார்த்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் என்கிற குடும்பப் பின்னணியைக் கொண்டவர் மாணவி ஆர்யா ராஜேந்திரன்.
நாம் அவரைத் தொடர்பு கொண்டபோது, பிசியான சூழலுக்கு மத்தியில் பேசத் தொடங்கினார். நம்முடன் பேசிய அவர், “வேலை பார்த்தால்தான் பாடு கழியும் குடும்பம் எங்களது. நான் 12 வயதிலேயே கம்யூனிஸ்ட், கொள்கைப் பிரச்சாரத்தில் கொடி பிடித்திருக்கிறேன். அப்போது சி.பி.எம்-ன் அங்கமான பாலசங்கத்தின் (சி.பி.எம்-ன் குழந்தைகள் அமைப்பு) மாநிலத்தலைவர். அப்போதிலிருந்தே கட்சிப் பயணம் தொடங்கியது. பின்பு பார்ட்டியின் உறுப்பினர். மாணவ அணியான எஸ்.எஃப்.ஐ. அடுத்து டி.ஒய்.எஃப்.ஐ. என்று பொறுப்புகளுக்குப் பிறகு தற்போது இந்திய கூட்டமைப்பின் மாவட்டப் பொறுப்பிலிருக்கின்றேன். எனக்கு எல்லாமே பார்ட்டிதான். கட்சியின் வேலைகள், மாணவர்களுக்கான பிரச்சனைகள் என நிறையச் செய்திருக்கேன். என்னுடன் பிறந்த அண்ணன் இஞ்சினியரிங் முடித்து இப்போது துபாயில் பணியில் இருக்கிறார்.
கட்சி என்மீது நம்பிக்கை வைத்து எங்களின் 47வது வார்டான முடவன்முகல் வார்டில் போட்டியிட வைத்தது. எங்கள் வார்டில் சி.பி.எம்., காங்கிரஸ், பி.ஜே.பி. சுயேட்சை என்று நான்கு முனை பலமான போட்டி. எனது மற்றும் எங்கள் பார்ட்டியின் செயல்பாடுகளால் 2,863 வாக்குள் பெற்று 549 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தார்கள் என் வார்டு ஜனங்கள்.
இந்தத் தேர்தல்ல எங்க பார்ட்டி எல்.டி.ஃஎப்.ஐ.யை இல்லாமல் பண்ணனும்னு காங்கிரஸ் ஒரு பக்கமும், மத்திய பி.ஜே.பி.அரசு, சி.பி.ஐ., ஐ.டி என்று விசாரணைத் துறையையும் ஏவியது. பல நெருக்கடிகள் கொடுத்தார்கள். பார்ட்டி இத்தனை நாளும் மேற்கொண்ட மக்கள் நலனுக்கான பணிகளின் ரிசல்ட்தான் இந்த அளவுக்கான வெற்றி. எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகளையும் தாண்டி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, கேரளாவில் இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்தாங்க. பார்ட்டியின் துணையோடு கல்லூரியில் படித்துக் கொண்டே மேயர் பொறுப்பையும் கவனிப்பேன்” என்றார் நம்பிக்கையான குரலில்.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான நுழைவுத் தேர்வில் உள்ளாட்சி மூலம் மெகா வெற்றியைப் பெற்றிருக்கிறது எல்.டி.எஃப்.