மாணவர்கள் மத்தியில் தமிழுணர்வையும் விழிப்புணர்வைவும் ஏற்படுத்தும் வண்ணம், அதிரடிப் பட்டிமன்றத்தை நடத்தியிருக்கிறது சென்னை மயிலாப்பூரில் உள்ள ரோசரி மெட்ரிக்குலேஷன் பள்ளி.
இங்கு நடந்த தமிழ்மன்ற விழாவில், 'மும்மொழிக் கொள்கை சாத்தியமா? தடையா?’ என்ற பரபப்பான தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதைத் தமிழாசிரியர் திருமதி எஸ்தர் ஏற்பாடு செய்திருந்தார்.
அணிக்கு நான்கு மாணவியர் பங்கேற்க, பட்டிமன்ற நடுவராக பிரபல எழுத்தாளர் லதா சரவணன் பொறுப்பேற்றார்.
''மாணவர்களுக்கு மும்மொழி என்பது தடையே'' என்ற தலைப்பில் மாணவிகள் மதுமதி, வேதா, ஸ்வேதா, ஸ்வாதி ஆகியோர் வரிந்துகட்ட, ''மும்மொழி என்பது சாதகமே'' என்று மேரி, ஸ்ருதிகா, சனா, அம்ரிஸ்னி ஆகிய மாணவியர் பதிலுக்கு மல்லுக்கட்டினர்.
இது அரசியல் சார்ந்த தலைப்பு என்பதால் இரு அணி மாணவியரும் மிகவும் கவனமாகத் தங்கள் வாதங்களை எடுத்துவைத்தனர். அதே சமயம் அவர்கள் வாதத்தில் சூடு பறந்தது.
மும்மொழி என்பது தடைதான் என்று வாதிட்ட மாணவியர் மதுமதி, வேதா, ஸ்வேதா, ஸ்வாதி ஆகியோர், தொன்மை மொழியான நம் தாய்மொழியாம் தமிழை, இரத்தினக் கம்பளம் விரித்து வர்ணஜால வார்த்தைகளால் வரவேற்றார்கள். அவர்களின் வாதத்தில் எத்தனை எத்தனைச் சொல்லாடல்கள், எத்தனை எத்தனை உவமைகள்! அப்பப்பா.. அவையே மயங்கி உட்கார்ந்திருந்தது,
”எந்த மொழியைக் கொடுத்தாலும் அதைத் தடையென்று நாம் ஏன் ஒதுக்கவேண்டும்? சாதிக்க வயது ஒரு தடையில்லை? எனவே எங்களால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்க முடியும். எனவே மும்மொழிக் கொள்கை சாத்தியமே” என்று சனாவும், அம்ரிஸ்வினி, மேரி, ஸ்ருதிகா ஜோடிகள் பேசினார்கள்.
நிறைவாக, வாதிட்ட மாணவியருள், வள்ளுவனின் குறளைச் சொல்லி அழகாக தன் வாதத்தை ஆரம்பித்த மதுமதிக்கும் அழகான சென்னைத் தமிழில் கேள்விகளைத் தொடுத்து, அதற்கு பதிலையும் கொடுத்த வேதாவிற்கும் முதற் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவியரின் பட்டிமன்றத்தை சுவையாக நடத்திய பட்டிமன்ற நடுவரான எழுத்தாளர் லதா சரவணன் தன் தீர்ப்புரையில்...” மேலும் மேலும் வாயில் திணிக்கும் உணவில், நாம் சுவையை எப்படி உணர முடிவதில்லையோ... அதேபோல் கட்டாயத் திணிப்பின் மூலம் நம்மிடம் நிறுத்தப்படும் எந்த ஒரு மொழியும் நம் மனதில் பதியப் போவதில்லை. விருப்பம் இன்றி தரப்படும் கல்வியறிவு, வயிறார உண்டவனுக்கு மீண்டும் மீண்டும் விருந்து படைப்பதைப்போல் பெரும் சுமையாகிப் போகும். எந்த மொழியையும் எவரும் தாமாக ஆர்வமாகக் கற்பதில் தவறில்லை. ஆனால் இந்த மொழியைப் படித்துதான் ஆகவேண்டும் என்று யாரையும் நிர்பந்திக்கக் கூடாது. ஏற்கனவே இருக்கும் சுமைகளுக்கு மத்தியில் மற்றொரு சுமையை மாணவர்களின் பிஞ்சு முதுகில் ஏற்றக்கூடாது. ஒரு மொழியைத் கட்டாயப்படுத்தித் திணித்தால் அது அந்த மொழி மீதான வெறுப்பிற்குத்தான் வழிகோலும். எனவே என்னைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்றது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூற, அவரது தீர்ப்பை ரசித்து, அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
பெரும்பாலான பள்ளிகள், ஆங்கிலம் தவிர்த்து மாணவர்கள் வேறு ஏதாவது ஒரு மொழியில் பேசினால் உடனே அபராதம் போடும் இக்கட்டான நேரத்தில், இதுபோன்ற பள்ளிகள் தமிழ் மன்றம் அமைத்து, அதற்கு விழா எடுத்து, விருந்தினர்களை அழைத்து, கருத்தாழம் மிக்கச் சிந்தனைகளுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பட்டிமன்றங்களை நடத்துவது பாராட்டுக்குரியது.
-சூர்யா