சர்வதேச சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு அடையாளமாக இருப்பது முக்கடலும் சங்கமிக்கும் கடல் நடுவே வானுயுயா்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையும் நடுக்கடலில் விவேகானந்தா் பாறையும் அதிகாலையில் பல வண்ணங்களோடு உதிக்கும் சூரியனும், அந்திமாலையில் அஸ்தமிக்கும் சூரியனின் ரம்மியமான காட்சிகளைக் காணக் கூடும் மக்களும் தான்.
இதைக் காண தினமும் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். இயற்கை சத்தத்தை மறைத்து வாகனங்கள் மற்றும் மக்களின் சத்தங்கள் தான் கன்னியாகுமரியில் விண்ணை முட்டி கொண்டியிருக்கும். இதனால் தூங்கா நகரமாகவும் கன்னியாகுமரி இருக்கிறது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள மொழிகளும் அங்கு ஒலிப்பதைக் கேட்கலாம். இதனால் கன்னியாகுமரியில் உள்ள வியாபாரிகள் எல்லோரும் அனைத்து மொழிகளுக்கும் சொந்தகாரா்கள்தான்.
ஆனால் இன்றைக்குக் கன்னியாகுமரியின் நிலைமையை கரோனா மாறிவிட்டது. மக்கள் குவிந்து நின்ற இடங்களில் எல்லாம் நாய்களும், காக்கைளும் ஓடியாடி விளையாடுகின்றன. ஓயாமல் அடிக்கும் கடல் அலைகளை ரசிக்க ஒருத்தர் கூட இல்லை. நாள் முழுவதும் வாகனங்கள் மற்றும் மக்கள் இரைச்சலைக் கேட்டுப் பழகி போன காதுகளுக்குப் பறவைகளின் ரீங்காரம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. உள்ளூா் வாசிகள் கூட கன்னியாகுமரியில் தலை காட்ட முடியாத சூழ்நிலை.
கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அமருவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் 16 கால் மண்டபத்தில் நாய்கள் படுத்துத் தூங்கி ஓய்வெடுக்கிறது. விதவிதமான பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய ஆயிரகணக்கான கடைகள் பூட்டியே கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் தங்கி ஓய்வெடுக்க கூடிய சாதாரண விடுதிகள் முதல் டீலக்ஸ் விடுதிகள் ஓய்வெடுக்கிறது.
தன்னுடைய மூக்குத்தி ஓளியில் கடல் பயணிகளுக்கு வழி காட்டியாக இருக்கும் என்ற பண்டை கால ஐதீகத்தோடு கொண்ட பகவதி அம்மன் கோவிலும் நடை சாத்தியே கிடக்கிறது. இப்படி கடந்த 80 நாட்களாகத் தொடர்ந்து கன்னியாகுமரியை முடக்கி போட்டியிருக்கும் கரோனாவுக்கு மத்தியில் வழக்கம் போல் தினமும் சூாியன் விடிந்து மறைகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின்றி கடற்கரை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் அதே கரோனாவில் இருந்து மக்களுக்கு விடிவு காலம் எப்போதுதான் பிறக்கும் என்ற ஏக்கத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் தேசத்தின் மக்கள்.