பாஜக அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசிய வீரியமான பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரல். பல்வேறு கருத்துகளை அந்த மேடையில் அவர் தெரிவித்தார். அவை குறித்து விசிகவின் இளைஞரணிச் செயலாளர் சங்கத்தமிழனிடம் ஒரு நேர்காணல்...
விசிகவுக்கும் பாஜகவுக்கும் போட்டி அல்ல, விசிகவுக்கும் தடா பெரியசாமிக்கும் தான் போட்டி என்று சொல்கிறாரே அண்ணாமலை?
2004 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர் தான் தடா பெரியசாமி. அதே ஆண்டு எங்கள் தலைவரின் காலிலும் விழுந்தார். அவரைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்பதே தவறு. இந்தியாவில் பலரும் பயந்து கொண்டிருக்கும்போது, மோடியையும் அமித்ஷாவையும் தைரியமாக எதிர்க்கும் கட்சி விசிக.
பாஜகவை இங்கு கடுமையாக எதிர்க்கும் திருமாவளவன், நாடாளுமன்றத்தில் பிரதமரையும் நிர்மலா சீதாராமனையும் சந்திக்கும்போது ஏன் பவ்யமாக இருக்கிறார்?
ஒவ்வொருவருக்கும் ஒரு கேரக்டர் இருக்கிறது. எங்கள் தலைவர் மாண்பு மிக்கவர். அனைவரிடமும் அவர் அன்பாக இருப்பார். எங்களுடைய யுத்தம் கோட்பாட்டு யுத்தம். தனிப்பட்ட நபர்களின் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது. புரட்சியாளர் அம்பேத்கரும் அப்படிப்பட்டவர் தான். கோட்பாட்டு யுத்தங்களின் போது எங்கள் தலைவரை எழுச்சியுடன் பார்க்கலாம்.
பாஜகவும் பாமகவும் இருக்கும் அணியில் நான் இருக்க மாட்டேன் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் திருமாவளவன். இது திமுகவுக்கு விடுக்கும் எச்சரிக்கையா?
நாங்கள் யாருக்கும் எச்சரிக்கை விடுக்கவில்லை. அது எங்கள் வேலையுமில்லை. ஜனநாயகத்துக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது, சனாதனம் இங்கு வேரூன்றி விடக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். நாங்கள் மக்களை அரசியல்படுத்துகிறோம். 2024 ஆம் ஆண்டு ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவித்து விடுவார்கள்.
மருத்துவர் ராமதாசுடன் நல்ல உறவில் இருந்த திருமாவளவன் பொதுமேடைகளில் அவரை விரோதி போல் பாவித்துப் பேசுவது ஏன்?
முதலில் அவரோடு இணைந்து தான் நாங்கள் பயணித்தோம். தமிழ் குடிதாங்கி என்கிற பட்டத்தை அவருக்கு வழங்கினோம். தலித்துகளுக்கும் தலித் இளைஞர்களுக்கும் எதிராக அவர்கள் தொடர்ந்து பேசினார்கள், செயல்பட்டார்கள். அதன் பிறகு தான் அவர்களுக்கு எதிராக நாங்கள் திரும்பினோம்.
ஆனால் விசிக பெரிதும் மதிக்கும் தலைவர் பிரபாகரனைக் கொச்சைப்படுத்தும் காங்கிரசோடு கூட்டணி வைத்திருக்கிறீர்களே?
அந்தக் காலகட்டத்தில் ஈழம்தான் எங்களுக்கு முக்கியமாக இருந்தது. அதனால் காங்கிரசை எதிர்த்தோம். அப்போது பாஜக வளரவில்லை. இருவருமே ஈழத்துக்காக எதுவும் செய்யவில்லை. ஆனால் காங்கிரஸை விடப் பல மடங்கு ஆபத்தானது பாஜக. வெறுப்பு அரசியலால் நான் என்னுடைய தந்தையை இழந்தேன், ஆனால் இந்த தேசத்தை இழக்க மாட்டேன் என்கிறார் ராகுல் காந்தி. மிகப்பெரிய பக்குவம் இது. காங்கிரஸிடம் நிகழ்ந்த மாற்றம் இது. கொள்கை ரீதியாக தான் ஒரு தமிழன் என்கிறார் ராகுல் காந்தி. அவர்களை நாம் ஆதரிப்பதில் எந்தத் தவறும் இல்லை.
தலித் விரோதி என்று பாமக எப்போதும் சொல்லவில்லையே?
தர்மபுரியில் ஒரு கிராமத்தையே அழித்தார்கள். காதல் ஜோடியைப் பிரித்து காதலனையே கொலை செய்தார்கள். தலித் இளைஞர்கள் தான் அனைத்திற்கும் காரணம் என்பது போல் பரப்பினார்கள். வன்னிய மக்கள் எங்களுடைய தோழர்கள். ஆனால் பாமக சாதிய வன்மத்தோடு செயல்படுகிறது. பாஜக மதத்தை வைத்து வெறுப்பு அரசியல் செய்கிறது. பாமக சாதியை வைத்து வெறுப்பு அரசியல் செய்கிறது. அவர்கள் மாறாதவரை நாங்களும் மாற மாட்டோம்.
பாஜகவுக்கு எதிராகவோ, ஆளுநருக்கு எதிராகவோ போராட்டம் நடத்தச் சொல்லி விசிகவைத் தூண்டிவிட்டு விட்டு திமுக அவர்களோடு நட்பு பாராட்டுகிறதா?
நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. யாருக்கும் அடியாள் வேலை செய்ய வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர். மக்கள் நலனுக்காகக் கூட அவர் பிரதமரை சந்தித்திருக்கலாம். அவருடைய சந்திப்பு பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். ஆளுநர் இங்கு வந்த நாளிலிருந்து அவரை எதிர்த்து வருகிறோம். அவர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்.எஸ்.எஸ் ரவி என்று தொடர்ந்து சொல்லி வருபவர் எங்கள் தலைவர். நாங்கள் சுயமாக சிந்தித்து செயல்படுகிறோம்.
மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படத்தைத் தமிழில் மொழிபெயர்த்து விசிக வெளியிட்டது. ஆனால் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதைச் செய்யவில்லையே?
மிக நல்ல கேள்வி இது. உங்களோடு சேர்ந்து நானும் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். மோடியின் முகத்திரையை பிபிசி கிழித்துவிட்டது. இதை அவர்களுடைய தொலைக்காட்சிகள் மூலம் இந்தியா முழுக்கக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவிலேயே அதைச் செய்த ஒரே கட்சி விசிக தான்.
பதவி எனக்கு முக்கியமில்லை என்கிறார் திருமாவளவன். சென்ற முறை ரவிக்குமார் திமுக சின்னத்திலும், திருமாவளவன் தனிச் சின்னத்திலும் நின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நிலைமை எப்படி இருக்கும்?
பதவியைப் பெரிதாக மதிக்காதவர் தான் எங்கள் தலைவர். இதற்கு முன்பு ஒரு முறை தன்னுடைய எம்.எல்.ஏ பதவியையே ராஜினாமா செய்தவர். கூட்டணி என்பது மக்கள் நலனுக்காகத் தான். மக்களுக்கு எதிராக யார் நின்றாலும் அவர்களை நாங்கள் எதிர்த்து நிற்போம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிச் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம்.