பிப்ரவரி 14 'காதலர் தினம்'. பலரது காதல் இனக்கவர்ச்சியாகவே மாறிக் கொண்டிருக்கிறது. சிலரது காதல் கைகூடாமல் உயிரைக் கூட மாய்க்கச் செய்துவிடுகிறது. ஆனால் விமலா-ராஜாவின் காதல் ரொம்ப புனிதமாக பார்க்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் எந்தப்பகுதியிலிருந்து பிழைப்பிற்காக திருப்பூர் சென்றாலும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்களும் இளம்பெண்களும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து சென்ற காலம் அது. இப்படித் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள சம்மட்டிவிடுதி ஊராட்சி, மேலவிடுதி கிராமத்தில் இருந்து பனியன் கம்பெனியில் காஜா கட்டும் வேலைக்காக சென்றார் ராஜா. சில வருட வேலையில் கிடைத்த சேமிப்பை வைத்து சிறிய காஜா மெஷின் வாங்கி முதலாளி ஆனார்.
அதே காலக்கட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து குடும்ப வறுமையைப் போக்க வேலைக்கு வந்த விமலா, ராஜாவை பார்க்க இருவருக்கும் காதல் மலர்ந்தது. ராஜா சிறிய நிறுவன முதலாளி ஆக தன்னால் ஆன உதவிகளையும் செய்தார் விமலா. சில வருட காதலுக்கு பின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதிப்பார்களா? என்ற கேள்வி எழ, நண்பர்கள் உதவியோடு திருமணமும் செய்து கொண்டனர். தனிக்குடித்தனம் போய் சில மாதங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை தொடர்ந்து.
ஆனால் 6 மாதம் கழித்து திடீரென்று ஒருநாள் காதல் கணவர் ராஜாவுக்கு கால்களில் வலி ஏற்பட, திருப்பூரில் சில மருத்துவமனைகளில் சிகிச்சை பார்த்தனர். சிகிச்சைக்காக கையிலிருந்த பணத்தோடு சின்ன நிறுவனத்தையும் விற்று அந்த பணமும் செலவானது. ஆனால் கால் வலி குணமாகவில்லை. சொந்த ஊருக்கு போய் சிகிச்சை எடுக்கலாம் என்று ராஜா ஊருக்கு வர, விமலாவை அவரது பெற்றோர் தர்மபுரிக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். எந்த தொடர்புகளும் இல்லை இருவருக்குள்ளும். இப்படியே பல மாதங்கள் போன நிலையில் விமலாவின் உறவினர்கள் விமலாவுக்கு மறுமணம் செய்ய ஆலோசனை சொன்னார்கள். இந்தநிலையில்தான் ராஜாவின் நண்பர்கள் மூலம் ராஜாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்ட விமலா ஒரு நாள் கிளம்பி மேலவிடுதி கிராமத்திற்கு வந்துவிட்டார்.
ராஜா வீட்டிற்கு வந்து அவரது காதல் கணவர் ராஜாவின் கோலத்தைப் பார்த்து உடைந்துபோய் நின்றுவிட்டார் விமலா. காரணம் 6 மாதங்களுக்கு முன்பு தன் கைகளை பிடித்துக் கொண்டு திருப்பூர் நகர வீதிகளில் நடந்து அழைத்துச் சென்றவரின் கால்கள் இரண்டும் இப்போது இல்லை. சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதவரிடம், ''நான் ஊருக்கு வந்து சிகிச்சை எடுத்தேன். ஆனால் ஒரு கால் என் பிறந்த நாள் அன்று கழன்று விழுந்துவிட்டது. அடுத்த சில மாதங்களில் மற்றொரு காலிலும் பாதிப்பு ஏற்பட்டதால் அந்தக் காலையும் வெட்டி எடுத்துவிட்டார்கள். இப்போது என்னால் ஒன்னுக்கு, ரெண்டுக்கு போகக் கூட யாராவது துணை வேண்டும். நீ சின்னப்புள்ள இனிமேல் என்னுடன் உனக்கு வாழப்பிடிக்காது. உன் பெற்றோர் சொல்வதுபோல யாரையாவது திருமணம் செய்துகொண்டு நீயாவது சந்தோசமாக வாழ்க்கையை நடத்து'' என்று கண்கள் கலங்க சொன்னார்.
இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட விமலா...''நமது காதல் உயிரோடு கலந்தது. வெறும் உணர்ச்சிகளுக்கானது மட்டும்மல்ல'' என்று சொன்னவர், ராஜாவின் சிறுநீர், மலம் வரை அள்ளி அவரை பராமரித்துக்கொண்டு கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை கவனித்துக் கொண்டிருக்கிறார். இவர்களின் உண்மை காதலுக்கு சாட்சியாக 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இந்த மனத்தூய்மையான காதல் தம்பதி பற்றிய நக்கீரன் இணைய செய்தி அறிந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அவருக்கான செயற்கை கால்கள் கிடைக்க உதவினார். மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வீட்டுமனைப் பட்டாவும், வீடுகட்ட உத்தரவும் வீட்டுக்கே சென்று வழங்கியதோடு, இத்தனை காலமும் கால்களை இழந்த காதல் கணவனை தன் குழந்தையைப் போல கவனித்துக் கொண்ட விமலாவை பாராட்டி சால்வை அணிவித்தார். இப்படி பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். இப்போது வீடு கட்டும் பணி தொடங்கி உள்ளது. அரசு நிதி மட்டும் போதாது வேறு யாராவது உதவினால் விரைவில் அழகான வீடு கட்டப்பட்டுவிடும். தொழில் செய்ய பெட்டியும் மளிகைப் பொருட்களும் வழங்கவும் தயாராக உள்ளனர் தன்னார்வலர்கள்.
காதலர் தினத்தில் ஷாஜகான்-மும்தாஜ், லைலா-மஜ்னு, ரோமியோ-ஜூலியட் என எத்தனையோ எடுத்துக்காட்டுகளை தேடி போற்றும் காதலர்கள், கால்களை இழந்தாலும் காதலை இழக்காமல் நிகழுலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ராஜா-விமலா தம்பதியையும் காதலுக்கு இலக்கணமாக நினைத்து பாராட்டலாமே...