Skip to main content

ஆன்லைன் வகுப்புகளில் பாலியல் அத்துமீறல் - மதுரை பள்ளி பயங்கரம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

சில குற்றங்கள், சட்டத்தின் பார்வையில் அது பெரிய குற்றமாகவே இருந்தாலும், சமூகச் சூழல்களால் வெளிப்படாமல் மறைக்கப்படுகிறது. அப்படி ஒரு குற்றச்செயலில் மதுரை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் சிக்காமல், சஸ்பென்ட் நடவடிக்கைக்கு மட்டும் ஆளாகியிருக்கிறார்.

 

யார் அந்த ஆசிரியர்? என்ன நடந்தது?

 

மதுரை, கே.கே.நகர் பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியை நடத்துபவரின் மகனான விஜய், ஆரப்பாளையத்தில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். கரோனா லாக்டவுன் நேரத்தில் இவர், அந்தப் பள்ளியில் 12-வது வகுப்பு படிக்கும் மாணவியைப் பள்ளிக்கு வரவழைத்து, காரில் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அந்த மாணவிக்கு ஆபாசப் படங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பி வந்ததை, அவருடைய அக்கா தனது கணினியில் உள்ள செயலி மூலமாக பதிவுசெய்து பெற்றோரிடம் தெரிவிக்க, மாணவி சம்பந்தப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை ஆதாரமாக இணைத்து, கடந்த 28-7-2020 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யரிடம் புகார் அளித்தனர்.

 

பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினருக்கு ஆசிரியர் விஜய்யிடமிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவதாக பேசி முடிக்கப்பட்ட நிலையில், 29-7-2020 அன்று மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயா மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோரால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. கட்டப்பஞ்சாயத்து போல நடத்தப்பட்ட அந்த விசாரணையின்போது, மாணவி தரப்பிடம் உள்ள ஆதாரங்கள் பறிக்கப்பட்டு, பெயரளவுக்கு ஆசிரியர் மீதான நடவடிக்கையாக, 30-7-2020 அன்று விஜய்யிடம், செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளிக்குப் பணியிடமாறுதல் உத்தரவு (ந.க.எண் ஆ4/015663/18) வழங்கினர்.

 

ஆசிரியர் விஜய்யை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாமல், கண்துடைப்பாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியதற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்... 4-8-2020 அன்று விஜய் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவை (தர்ஸ்ரீ.சர்.ஆ4/009179/2020) தயாரித்தபோது, முதலில் ‘மாணவியை துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவர்’ என்று உறுதிபடக் கூறிவிட்டு, பிறகு அதை அழித்துவிட்டு ‘பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்’எனத் திருத்தியுள்ளனர்.

 

dddd

 

மாணவி தரப்பிடம் வெற்றுத்தாள்களில் கையொப்பம் பெற்றும், கல்வி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேரம் நடத்தியும், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.8 லட்சம் வாங்கிக் கொடுத்தும், மீடியேட்டராக இருந்து விவகாரத்தைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்தாராம், ஒரு கம்ப்யூட்டர் ஆசிரியர். மூன்று வாட்ஸ்-ஆப் குழுக்களை ஆரம்பித்து, அதில் பள்ளி மாணவிகளை இணைத்து, ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில், ஆபாசப் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பாலியல் வீடியோக்களை அனுப்பி வந்திருக்கிறார் விஜய். அவருடைய 10 வருட ஆசிரியர் பணியில், எத்தனை மாணவிகள் சீரழிக்கப்பட்டனரோ?

 

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நம்மிடம் மறுத்துப் பேசினார் ஆசிரியர் விஜய், "மூன்று தடவை விசாரணை நடத்தியிருக்காங்க. அஃபிசியலா எல்லாம் முடிஞ்சிருச்சு. ஏதாவது ரிப்போர்ட் வேணும்னா.. சி.இ.ஓ. ஆஃபீஸில் கேட்டுக்கங்க. நான் அந்த மாதிரி எதுவும் பண்ணல. உள்ளூர் ஸ்கூல்ல கரோனா நிவாரணத்துக்கு நான் அதிக நிதி கலெக்ட் பண்ணுனதுனால, பொறாமைல இருக்கவங்க பண்ணுன கம்ப்ளைண்ட்'' என்றார் படபடப்புடன்.

 

மதுரை, பொன்னகரத்தில் உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யரை சந்தித்தோம். “போன மார்ச்ல எக்ஸாம் முடிஞ்ச பிறகுதான் கம்ப்ளைண்ட் பண்ணுனாங்க. பேரண்ட் கம்ப்ளைண்ட் கைக்கு வந்ததும், விஜய்க்கு ஃபோன் பண்ணுனோம். அவர் அட்டெண்ட் பண்ணல. மறுநாளே அந்தப் புகாரை சி.இ.ஓ.க்கு அனுப்பிட்டேன். பெற்றோர் தரப்பில், நடந்த குற்றங்களுக்கான ஆதாரங்களைக் கொடுத்து, விஜய்யை டிரான்ஸ்பர் பண்ணனும்னு சொன்னாங்க. மொதல்ல டிரான்ஸ்பர் ஆகி.. இப்ப சஸ்பெண்ட்ல இருக்காரு. ஸ்கூலுக்கு உள்ளே தப்பு எதுவும் நடக்கல. எல்லாமே ஆன்லைன்ல நடந்திருக்கு'' என்றார்.

 

மதுரை, செனாய் நகர் இளங்கோ மாநகராட்சி இருபாலர் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனிடம் பேசினோம். "எங்க ஸ்கூல்ல விஜய் சேர்ந்து ரெண்டு நாள்கூட இருக்காது. ஏதோ பிளான் பண்ணி சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்துட்டாங்க. அந்த ஆர்டர்ல விபரம் எதுவும் குறிப்பிடல'' என்றார்.

 

மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் விஜயாவை தொடர்புகொண்டோம். "எந்த விஷயத்தையும் மூடி மறைக்கல. ஒரு கமிட்டி போட்டு விசாரணை நடந்துக்கிட்டிருக்கு. கோவிட் பீரியட்ங்கிறதால உடனே ஆக்ஷன் எடுக்க முடியல. அதனால, மொதல்ல டிரான்ஸ்பர் கொடுத்திட்டு, அப்புறம் சஸ்பெண்ட் பண்ணிருக்கோம். இன்னும் முழுமையா விசாரணை நடந்து முடியல. அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்ததா சொல்லுறது பொய். பணம் வாங்கியிருந்தால் சஸ்பெண்ட் பண்ணியிருப்போமா?'' என்று கேட்டார்.

 

"பள்ளியின் மாணவிகளையும் ஆசிரியைகளையும் தனித்தனியே சந்தித்து, ரகசிய விசாரணை செய்தால், அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வரும்'' என்கிறார்கள், நேர்மையான சட்ட நடவடிக்கையை வலியுறுத்துபவர்கள்.