தேனி மாவட்டம் போடி தொகுதிக்குள் வரும் குரங்கனி மலையில் சில வருடங்களுக்கு மலையேற்றப் பயிற்சியின் (டிரெக்கிங்) போது, திடீர் தீவிபத்தால் பலர் கருகி பலியாகினார்கள். அந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின், குரங்கனி மலைப் பகுயில் உள்ள அணைக்கரைப்பட்டி, முந்தல், சிறைகாடு, சோலையூர், மேலபரவு, முதுவாகுடி உள்ளிட்ட பல்வேறு மலைகிராம மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது வனத்துறை.
அதில் குறிப்பாக, முதுவாகுடிக்குச் செல்லும் 6 கி.மீ. தொலைவு ஜீப் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு இருந்த குண்டும் குழியுமான சாலையை மூடியது வனத்துறை. இதனால் அங்கு வசிக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் ரொம்பவே அவதிப்பட்டார்கள். இதனால் கொதிப்படைந்த அந்த மக்கள் கடந்த எம்.பி.தேர்தலைப் புறக்கணித்தனர். தேனி சப்-கலெக்டர் வைத்தியநாதன் குரங்கனியிலிருந்து முதுவாகுடிக்கு 6 கி.மீ நடந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. மக்களின் குமுறல்களைக் கலெக்டரிடம் அறிக்கையாக கொடுத்து இரண்டு வருடங்களாகப் போகிறது. ஆனால் அந்த மக்களின் நிலையோ முன்பைவிட மோசம் என்ற நிலைக்குப் போய்விட்டது.
அதுசரி, இந்த அவலமெல்லாம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து பத்து வருடம் இருக்கும் நம்ம துணைமுதல்வர் பன்னீர்செல்வத்திற்குத் தெரியாம இருக்குமா? தெரியும்... ஆனா தெரியாது… என்ற ரீதியில்தான் இருந்தார் பன்னீர்.
பிப்.08-ஆம் தேதி சசிகலா தமிழகத்திற்குள் வந்த பிறகு நம்ம பொழப்பு கந்தலாகிவிடும் என்ற பயபீதியில் தொகுதிவாசிகள் மீது திடீரென அக்கறை மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர் பன்னீரும் அவரது மகன்களான எம்.பி.ரவீந்திரநாத்தும் இன்னொரு மகனான பிரதீப்குமாரும்.
2011, 2016 தேர்தலின்போது ஓட்டுக் கேட்க முதுவாகுடிக்குச் சென்றதோடு சரி. அதன் பின் அப்படி ஒரு கிராமம் இருப்பதையே மறந்துவிட்டார் பன்னீர். சென்னையிலிருந்து கொண்டு மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து சசிகலாவுக்கு எதிராக மல்லுக்கட்டுவதைவிட, முதுவாகுடி மலையேறுவதே மேல் என்ற நினைப்புடன் கடந்த வாரம் தனது மகன் ரவீந்திரநாத், பத்துக்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள், சில அரசு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு முதுவாகுடி மலைகிராமத்திற்கு குரங்கனியிலிருந்து நடந்தே போனார். (வேற வழி, அங்கதான் ரோடே இல்லையே) பன்னீர் குழுவினரைப் பார்த்ததும் பலத்த அதிர்ச்சிக்குள்ளானார்கள் அங்கு தைரியமாக வசிக்கும் பழங்குடியின மக்கள். "நம்புங்க, நான்தாங்க இந்த தொகுதி எம்.எல்.ஏ.'' என மாஸ்க்கிற்குள்ளே சிரித்தபடி முகம் காட்டினார் ஓ.பி.எஸ்.
"உங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சுக் கொடுக்குறேன், புதுசா ரோடு போட ஏற்பாடு பண்றேன், குரங்கனியிலிருந்து டாப்ஸ்டேசன் வரைக்குமான ரோட்ல ஃபேவர்ப்ளாக் பதிக்கிறேன், அதுக்கு இப்பவே பூமி பூஜை போடுறேன்'' என சொல்லிவிட்டு பூமிபூஜையையும் போட்டார் பன்னீர்.
என்னதான் பண்ணினாலும் கையில நாலு காசு கொடுத்தா சரியாயிரும் என்ற கணக்குடன், "இந்தாங்க இடிஞ்சுபோன வீட்டைக் கட்டிக்கங்க'' என சிலருக்குக் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தார். 40 குடும்பங்களுக்கு 61 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
அதற்கடுத்ததாக ஓலைக்குடிசைகள், மண் குடிசைகளில் அப்பாவும் மகனும் உட்கார்ந்து மக்களிடம் பாசமழை பொழிந்தார்கள். மறுபடியும் ஓட்டுக் கேட்டு வருவோம் என்பதை மறக்காமல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.
இன்னொரு பக்கமோ,“பார்த்தீங்கல்ல, எங்க அண்ணனை, இந்த வயசுலயும் மலையேறி உங்களப் பார்க்க வந்துருக்காரு'' என பெருமை பீத்திக்கொண்டார்கள்.
ஓ.பி.எஸ்.சின் மலையேற்றம் குறித்து தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.லட்சுமணனிடம் பேசியபோது, “எதுக்காக இப்ப வந்துருக்காருன்னு அந்த மக்களுக்கு நல்லாவே தெரியும். 2008-ல் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது முதல்வர் கலைஞரின் உத்தரவுப்படி ஆரம்ப பள்ளிக்கூடம், முதியவர்களுக்கு உதவித்தொகை என பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம். அதை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை, பன்னீரின் பாராமுகத்தையும் மறக்கவில்லை'' என்றார்.
தேனி யூனியன் சேர்மனும் வடக்கு ஒ.செ.வுமான சக்கரவர்த்தி நம்மிடம் பேசும்போது, “பணத்தால மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்குறாரு பன்னீர். ஆனா வரும் தேர்தலில் அது நடக்காது, அவருக்கு வெற்றி வசப்படாது. இப்போது மலையேறி ஸ்டண்ட் அடிக்கும் பன்னீரும், ‘பி.டி.ஆர். கால்வாயில் மடைகட்டித் தருவேன், அதனால் 25 கிராமங்கள் பயனடையும்’னு சொன்னார். ஆனால் அதற்கு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கல. பன்னீரையும் அவரது மகன் ரவீந்திரநாத்தைப் பத்தியும் இந்தத் தொகுதி மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்'' என்றார். தேர்தல் நெருக்கத்தில் என்னென்ன வித்தைகளெல்லாம் காட்டப் போகிறார்களோ பன்னீர் & சன்ஸ்.