ப்ளாஸ்டிக் உலகின் எல்லா மூலைகளிலும் பரவிக்கிடக்கிறது, மக்காமல். நிலத்தில் புதைந்துகிடக்கிறதென்றால், நீரில் மிதந்துகொண்டிருக்கிறது, வெறும் குப்பையாக.
இப்படியாக உலகின் மிக பெரும் இடராக இருக்கிறது ப்ளாஸ்டிக். ஆனால் இன்றைய நிலையில் ப்ளாஸ்டிக்கை தவிர்க்க நாம் தொடங்கியிருந்தாலும், அதன் பயன்பாட்டிற்கு நாம் முழுமையாக அடிமையாகிவிட்டோம். அவைகளை நாம் நிராகரித்தாலும், நம் நிராகரிப்பை அவை நிராகரித்து விடுகின்றன.
ஆஸ்திரேலியாவிலுள்ள ‘நியு காஸ்டில்' பல்கலைக்கழகம் அண்மையில் பிளாஸ்டிக் தொடர்பான சர்வதேச ஆராய்ச்சியை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான டன் எடைகொண்ட பிளாஸ்டிக் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
அப்படி பிளாஸ்டிக்கை தயார் செய்யும் தொழிற்சாலைகளிலிருந்து ஆயிரக்கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகள் தினமும் உருவாகின்றன. இந்தக் கழிவுகள் அனைத்தும் கடல் மற்றும் நீர் நிலைகளிலேயே வெளியேற்றப்படுகின்றன. இதனால், அவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து விடுகின்றன.
இந்த பிளாஸ்டிக் கலந்த நீர்நிலைகள்தான் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குகிறது என்பதால் மனிதர்கள் தங்களுக்கு தெரியாமலேயே பிளாஸ்டிக்கை நாள்தோறும் உட்கொண்டு வருகின்றனர். இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல. தொடர் ஆராய்ச்சியில் ஒரு விஷயம் உறுதியானது, கடல் நீரில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளானது, அதிலிருந்து உருவாகும் உப்பு மற்றும் மீன்களிலும் கலந்து விடுகின்றது. இவைகள் நம் உணவுப் பொருட்களில் சேர்வதால் நாம் உட்கொள்ளும் பிளாஸ்டிக்கின் அளவு இன்னும் அதிகரிக்கிறது. இவ்வாறு, மிக நுண்ணிய அளவிலான 2,000 பிளாஸ்டிக் பொருட்களை மனிதர்கள் வாரந்தோறும் உட்கொண்டு வருகின்றனர்.
இந்த அளவு, 5 கிராம் எடைகொண்ட ஒரு கிரடிட் அட்டைக்கு சமமானதாகும். இது உடலுக்கு மிகப்பெரிய தீங்கினை விளைவிக்கிறது. எனவே, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை உலக நாடுகள் அனைத்தும் கருத்தில்கொண்டு, அவற்றை கட்டுப்படுத்த உடனடிநடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் நிறைய புகைப்படங்களை பார்த்திருப்போம் விலங்குகள், பறவைகளின் உடலில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதுபோல். அவை ஐந்தறிவு உயிரிகள் முழுமையாக முழுங்கிவிட்டு உடனடியாக இறந்துவிடுகின்றன. நாம் ஆறறிவு உயிரி!!! என்பதால் அதை சிறிது, சிறிதாக தூளாக்கி உண்டு கொஞ்சம், கொஞ்சமாக இறந்துகொண்டிருக்கின்றோம். ஆக இறக்கிறோம் என்பதுதான் உண்மை.
மாறாத எல்லாமும் ஆபத்துதான்... பிளாஸ்டிக் அந்த காலத்தின் தேவை, இன்று பிளாஸ்டிக் இல்லாமல் இருப்பதோ அல்லது அதை சரியான வகையில் அழிப்பதோதான் இன்றைய காலத்தின் தேவை, பிளாஸ்டிக்கிற்கு மாற்று என்பதில் உறுதிகாப்போம், அதற்கு தயாராவோம்.