Skip to main content

பாரதியாருக்கு காவித் தலைப்பாகை! பாடப்புத்தகத்தால் பரபரப்பு!

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட தேசிய கவியாக பாராட்டப்படுபவர் மகாகவி பாரதியார். இவரை புரட்சிக்கவியாக கொண்டாடும் நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் அட்டையில் காவித் தலைப்பாகையுடன் படம் இடம் பெற்றுள்ளது. 
 

barathiyar

 

 

பாரதியாரின் தலைப்பாகை எப்போதுமே வெள்ளையாகத்தான் வரையப்படுவது வழக்கம். ஆனால், காவி நிறத்தில் வரையப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
 

பாரதியார் காவித் தலைப்பாகை அணிந்திருந்ததை யார் பார்த்தார்கள்? எப்போது பார்த்தார்கள்? என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வினவியுள்ளார். தமிழக அரசின் பாடநூல் கழகம் பாரதியாரைப் பற்றிய தோற்றத்தை மாணவர்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கும் முயற்சியாகும். பாடத்திட்டத்தையே காவிமயமாக்கும் சதித்திட்டம் இதில் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
 

இதுவரை தமிழ் பாடப்புத்தகத்தின் அட்டையில் கோவில்களின் படங்கள்தான் இடம்பெறும். ஆனால், தமிழுக்கு இந்துமதத்தை சேர்ந்தவர்களே பங்களித்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இதுபோல அட்டை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. வரலாற்றுப் பாடத்தில் மட்டுமே தவறான தகவல்களை இடம்பெறச் செய்வதாக வந்த தகவல்கள் போய், புதிதாக தமிழ் பாடத்திலேயே சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தமிழாசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
 

இந்த அட்டை தயாரிக்கப்பட்டதில் உள்நோக்கம் இல்லை. அப்படி தவறு இருப்பதாக கருதினால் அதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று பாடநூல் கழக தலைவர் பி.வளர்மதி தெரிவித்தார்.