சேலம் மாவட்டம், மேட்டுர் வட்டம், மேச்சேரி அருகே உள்ள மாதநாயக்கன்பட்டி, பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல் நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் தலைவராக தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் உள்ளார். இதன் பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் உள்ளனர். இப்பள்ளியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரியின் அருகில் சிற்பம் பொறித்த கற்கள் கிடப்பதாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணமாக சென்று பார்த்த போது, இரண்டு போர் வீரர்களின் நடுகற்கள் கண்டறியப்பட்டன.
இது குறித்து தொன்மை பாதுகாப்பு மன்றத்தினர் கூறியதாவது; இந்த நடுகற்கள் பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த நடுகல்லில் சிதைவு ஏற்பட்டுள்ளதால் எழுத்துகள் இருந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை. ஒவ்வொரு கல்லும் 3 அடி உயரமும், 2.5 அடி அகலம் கொண்டுள்ளது.
முதல் நடுகல்லில் போர் வீரனின் வலது கையில் வாலும், கேடயமும் வைத்துள்ளார். நேர்த்தியான ஆடையும் அணிகலன்களும் அணிந்துள்ளார். இரண்டாவது நடுகல்லில் போர் வீரனின் வலது கையில் வாலும், இடது கையில் கேடயமும் வைத்துள்ளார். நேர்த்தியான ஆடை அணிகலன்களை அணிந்துள்ளார். அவரின் இடது கையின் கீழ் ஒரு பெண் தலையில் ஏதோ ஒன்றினை சுமந்து வருவது போல் உள்ளது. இடது காலுக்கு பின் குதிரை ஒன்று ஓடுவது போன்று உள்ளது.
இந்த நடு கல்லிற்கு சற்று தொலைவில் ஒரு புலிக்குத்தி பட்டான் கல் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவும் அதே 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இப்பகுதி காடு போல் இருந்துள்ளது. அங்கு வந்த புலியை அரசனோ அல்லது படை தளபதியோ கொன்று மக்களை காப்பாற்றியதால் இந்த வீரக்கல் நடப்பட்டிருக்கும். ஏனெனில், அக்கல்லில் உள்ளவர் நிறைய ஆபரணங்களையும் நேர்த்தியான உடைகளையும், குத்துவாலும் வைத்துள்ளார். அவரின் அருகே ஒரு பெண் அதே போன்று நேர்த்தியான உடையும் ஆபரணங்களையும் அணிந்துள்ளார். கையில் ஒரு முடிப்பும் வைத்துள்ளார். இதன் அருகில் (50 அடி தொலைவில்) ஒரு பெருங்கற்கால ஈமசின்னமான குத்து கல் ஒன்றும் உள்ளது. இது பூமிக்கு மேல் 4.5 அடி உயரமும் 1 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த நடுகற்கள் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்றுத் தகவல்களையும், அதனைப் பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும்.