சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்து வந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை கடந்த 2022ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற இளைஞர் ரயில்வே தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டு கொடூரமாக கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பான வழக்கில் சதீஷுக்கு மரணதண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் சுந்தரவள்ளியை நக்கீரன் வாயிலாக சந்தித்தோம். அப்போது அவர் மரணதண்டனை குறித்து தனது கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
ஒருதலையாகக் காதலித்துக்கொண்டு சம்பந்தமே இல்லாத பெண்ணின் வாழ்க்கையை அழித்த குற்றவாளிதான் சதீஷ். அவருக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் எனக்கு மரணதண்டனை என்பதில் உடன்பாடு கிடையாது. ஏனென்றால் நான் மாணவியாக இருக்கும்போதே மரணதண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறேன். மரண தண்டைனை தொடர்பாக நீதியரசர் கிருஷ்ணய்யர் எழுதிய புத்தகத்தை வாசித்துப் பார்த்தால் அது எவ்வளவு பெரிய தொற்று நோய் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும். சதீஸ் வழக்கில் மரணதண்டனை கொடுக்காமல் ஆயுள் தண்டனையாக கூட மாற்றித் தீர்ப்பு வழங்கியிருக்கலாம்.
ஏன் மரணதண்டனை தேவையில்லை என்று கேட்டால் அரச பயங்கரவாதம் போராட்ட களத்தில் இருப்பவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட வாய்ப்பிருக்கிறது. பொய்யான ஒரு குற்றச்சாட்டை ஒருவர் மேல் வைக்க ஆயிரக்கணக்கான வழிகள் இருக்கும் பட்சத்தில் நிரபராதி ஒருவரருக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டு, அதன் பிறகு அவர் குற்றவாளி இல்லையெனத் தெரிய வந்தால் அதனால் ஒரு பயனும் இருக்காது. சமூகத்தில் அதிகாரத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள் போடும் இந்த காலத்தில் இது போன்ற மரணதண்டனை நேர்மையானவர்களையும் பாதிக்கும். குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலம் குற்றங்கள் நிற்கப் போவதில்லை. கல்ப் போன்ற பகுதிகளில் கை, கால்களை வெட்டும் அளவிற்கு கடுமையான தண்டனைகள் இருக்கிறது. அப்படி இருந்தும் அங்கு குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறித்தான் வருகிறது.
தண்டனை என்பது குற்றவாளி திருந்துவதற்கான சூழலை உருவாக்குவதும் திருந்தவில்லையென்றால் தொடர்ந்து ஆயுள் தண்டனை சிறைக்கைதியாக வைத்து திருந்துவதற்கான சூழலை ஏற்படுத்துவதும்தான். மரண தண்டனை காரணமாக ஒருவர் இறந்துவிட்டால் ஒரு வருடத்திற்கு இறந்தவரைப் பற்றிப் பேசுவார்கள். அதன் பின்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததா? என்று சொல்லும் அளவிற்கு மறந்துவிடுவார்கள். அதுவே ஒருவர் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தால், அவரின் குடும்பம் படுகிற துயரத்தைப் பார்த்து, சமூகம் கேள்வி கேட்கும், இது போன்ற சூழல் தனக்கு நேரிடக் கூடாது என்று பயப்பட்டு எச்சரிக்கை உணர்வோடு சில விஷயங்களை அணுகுவார்கள். எனவே மரணதண்டனை தீர்வு கிடையாது.
அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அருகில் வந்து அநாகரீகமாக நடந்துகொண்டார் என்றும் அவரின் செயல் அசௌகரியத்தை ஏற்படுத்தியது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். அந்த பெண் எம்.பி. சொன்ன இடத்தில் ராகுல் காந்தி இல்லையென்பதை வீடியோ ஆதாரங்கள் காட்டுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு வைக்கும் அளவிற்கு போய்க்கொண்டிருக்கும் சூழலில் போக்சோ வழக்கில் அதிகபட்ச தண்டனை என்பது மரணதண்டனையாக மாற்றி பா.ஜ.க. அரசு திருத்தியுள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் பொய்யான ஆதாரங்களை ஜோடித்து ஒருவருக்கு தண்டனை கொடுக்கும் சூழல் உருவாகும் அதனால் நேர்மையான தலைவர்களுக்கும் பாதிப்பு நேரிடக்கூடும்.
எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அதற்கு படுகொலையோ மரணதண்டனையோ தீர்வு கிடையாது. தவறு செய்தவர்கள் உயிருடன் இருந்து தண்டனை அனுபவித்தே கஷ்டப்பட வேண்டும். ஏன் டா தவறை செய்தோம் என வருந்தி திருந்த வேண்டும். அதைப் பார்த்து மற்றவர்களும் திருந்த வேண்டும். சமூகத்தை திருத்துவதற்கும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை திருத்துவதற்கும்தான் சட்டம் இருக்கிறது. தவறு செய்த எல்லோருக்கும் மரண தண்டனை கொடுக்க ராஜாக்கள் வாழும் காலம் கிடையாது. அப்படி மரணதண்டனை கொடுத்தால் அது மேலும் பல தவறுகளுக்கு காரணமாக அமைந்துவிடும். ஆயுள் தண்டனையைவிட மரண தண்டனை பெரிது கிடையாது. மரண தண்டனை கொடுப்பதற்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்குவதன் மூலம் குற்றவாளி நிரந்தர தண்டனையும் அனுபவித்து ஒருவேளை வருந்தவும் திருந்தவும் வாய்ப்பிருக்கிறது என்றார்.