உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் முடங்கியுள்ள சூழலில், கத்தாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வைத்து 2022 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை நடைபெற உள்ள மைதான கட்டுமான பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த சூழலில், கட்டுமான தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி ஃபிஃபா பொதுச்செயலாளர் ஃபத்மா சமவ்ராவுக்கு பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவரது அந்த கடிதத்தில்,
"முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். நான் மேத்யூ சாமுவேல், புதுதில்லியில் வசிக்கும் இந்தியப் பத்திரிகையாளர். எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றான கத்தாரில் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிஃபா உலகக்கோப்பையுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சில விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டுகிறேன். கோவிட் -19 ஐ தொற்றுநோயாக WHO அறிவித்த பிறகும், இந்த வைரஸ் பரவும் வேகம், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றி அறிந்தும், அந்நாட்டு ஆட்சியாளர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து தோஹாவில் உலகக் கோப்பை மைதான கட்டுமானத்தை முடிக்க வலியுறுத்துகின்றனர் என்று எனக்கு சில நம்பகமான தகவல்கள் கிடைத்தன.
கரோனா வைரசால் அச்சத்தில் உள்ள அந்த தொழிலாளர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலகளாவிய இந்த தொற்றுநோயால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கூட்ட நெரிசலான முகாம்களில் மக்களை ஒன்றாகக் குவிக்கும் கத்தார் அரசின் இந்த செயல்பாடு, வைரஸ் பரவுவதை வேகப்படுத்தும். தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து, அதுவும் குறிப்பாக இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்த தொழிலாளர்கள் தான் அங்கு அதிகம்.
தொழிலாளர் முகாம்களுக்குள், தொழிலாளர்கள் பயம் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையுடன் வசித்து வருகின்றனர். கத்தார் ஒரு பிரபலமான இடமாகவும், முக்கிய போக்குவரத்து பகுதியாகவும் இருக்கிறது. "கத்தார் ஏர்வேஸ்" என்ற தேசிய வான்வழி போக்குவரத்துக்கு நிறுவனம் மூலம், உலகம் முழுவதையும் இணைக்கும் ஒரு நுழைவாயிலாக கத்தார் உள்ளது. எனவே, இந்த நாடு நிச்சயமாக கோவிட் 19 அச்சுறுத்தலில்தான் இருக்கிறது. இருப்பினும் அதிகாரிகள் இதனை ஏற்க மறுப்பதோடு, கத்தாரில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனக்குறைவால் கண்டும் காணாமல் உள்ளனர் என்பதே இதில் மிகவும் முரணான விஷயமாக உள்ளது. சரியான தரவுகளை வெளியே கூறுவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை என்பதை இதுவே தெளிவாகக் காட்டுகிறது. இந்த சூழலில், தயவுசெய்து இந்த விஷயத்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி நடவடிக்கை எடுக்க நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் கத்தாரில் கரோனா பரவலின் தற்போதைய நிலை குறித்து அறிய, அதுவும் குறிப்பாகக் கால்பந்து மைதானத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் நிலை குறித்து அறிய மருத்துவ நிபுணர்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் குறித்து அங்குள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்க வேண்டும்.
கோவிட் -19 வைரசைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் மனித உரிமைகள் சரிசமமானதாக இருப்பதை கத்தார் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடு இன்றி நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மைக்கேல் பிளாட்டினி அத்தியாயத்தை மறந்துவிடக் கூடாது என்பதை நான் தாழ்மையுடன் நினைவுபடுத்துகிறேன். பெரும் செல்வம் மற்றும் அதிகாரத்தின் உதவியோடு நிலைமையை அவர்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.