சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் 10க்கும் மேற்பட்ட நபர்களால் தாக்கப்படும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞரைச் சந்தித்த சமூக ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அவரின் கருத்துக்கள் வருமாறு, “தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு உட்பட்ட பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ராகுல் என்ற 21 வயது இளைஞன், கடந்த 1ம் தேதி பத்துக்கும் மேற்பட்ட கும்பலால் அடித்து சித்தரவதை செய்யப்பட்டுள்ளார். பொது இடத்தில் பலர் முன்னிலையில் அவர் அடித்து இழுத்து வரப்பட்டுள்ளார். அதையும் தாண்டி தோப்புக்கு இழுத்துச் செல்லப்பட்டு அடிக்கப்பட்டுள்ளார். அங்கு அடித்தது பத்தாது என்று நினைத்து சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். இறுதியாக அவரை ஒரு புளியமரத்தில் கட்டி வைத்து சித்தரவதை செய்துள்ளார்கள். மிகக் கொடூரமான வகையில் அவரை அடித்து சித்தரவதை செய்துள்ளார்கள். அந்த இளைஞர் மீது என்ன குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என்றால், அவர் பணத்தைத் திருடியுள்ளார் என்று சொல்கிறார்கள். அந்தப் பாதிக்கப்பட்ட இளைஞரை தற்போது மருத்துவமனை சென்று பார்த்து வருகிறோம். அவர் தன்னுடைய முதலாளியிடம் சம்பளம் வாங்க சென்ற இடத்தில், முதலாளி ராகுலிடம் பிரச்சனை செய்துள்ளார். இதன் காரணமாக ராகுலை அவர் தாக்கியுள்ளார். அவர் வீட்டிற்கு சென்றும் தாக்கி இருக்கிறார். இதைத் தாண்டி பலர் முன்னிலையில் நாம் அவர் தாக்கப்படும் வீடியோவைப் பார்த்தோம்.
தற்போது அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாம் அவரிடம் பேசியதில், அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது. உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் அவர். அவரின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த சித்தரவதை சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர் திருடினார் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஏன் அவர் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கப்படவில்லை? இப்போது டிஎஸ்பியிடம் பேசினோம், காவல்நிலையத்தில் பேசினோம். அவர் திருடினார் என்றால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்க வேண்டியது தானே? ஆனால் இந்த நிமிடம் வரை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்படவில்லை. இந்தக் குற்ற சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்ட நிலையில், தற்போது 8 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு மிகவும் மோசமான நிலையில் தள்ளப்பட்டு வருகிறது. ஒரு பொது இடத்தில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதில் என்ன கொடுமை என்றால் இந்த சம்பவம் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை தொடர்ந்து நடந்துள்ளது. அவர் குடியிருந்த பகுதிக்கும், அடிவாங்கிய பகுதிக்கும் சம்பந்தம் இல்லை. அவரைக் கடத்தி வந்து இந்தச் சம்பவத்தை செய்துள்ளார்கள். அவர் மீது வன்மத்துடன் இந்தத் தாக்குதலை செய்துள்ளார்கள். அவர் தவறு செய்திருந்தார் என்றால் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதுதானே சரியான முறை. அவரை தாக்குவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. கொடுமையான இந்த தாக்குதலில் அவர் உடம்பு முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. தலை முதல் கால் வரை அனைத்து இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையும் தாண்டி அவரை தீவைத்து கொளுத்துவதற்குக் கூட முயற்சிகள் நடந்துள்ளது. ஆனால் காவல்துறை அடித்தவர்களைக் கைது செய்யாமல் பாதிக்கப்பட்டவரை அவருடைய அப்பாவிடம் ஒப்படைத்துள்ளார்கள். அடுத்தநாள் இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆனதைத் தொடர்ந்து, மன உளைச்சலில் அந்த இளைஞர் எலி பேஸ்ட் விஷத்தை சாப்பிட்டுள்ளார். அந்த இளைஞரைப் பார்க்கும்போது அவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசு மற்றும் காவல்துறை கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.