எகிப்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஜிஸா பிரமிடுகளின் அருகே குடியிருப்புகள் இருந்ததை தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜிஸாவில் மூன்று பெரிய பிரமிடுகள் கட்டப்பட்டன. கி.மு.2551 ஆம் ஆண்டுவாக்கில் எகிப்தை ஆண்ட குஃபு என்ற பரூவாவின் கல்லறையாக கட்டப்பட்டது கிரேட் பிரமிட். இது 455 அடி உயரமுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
கி.மு.2520 ஆம் ஆண்டு வாக்கில் எகிப்தை ஆட்சி செய்த காஃப்ரே என்ற பரூவாவின் கல்லறையாக பக்கத்திலேயே இன்னொரு பிரமிட் கட்டப்பட்டது. இது கிரேட் பிரமிட்டை காட்டிலும் சற்று சிறியது. ஆனாலும் உயரமான இடத்தில் கட்டப்பட்டதால் அந்த வித்தியாசம் தெரியாது. இந்த பிரமிட் அருகே ஸ்பின்க்ஸ் நினைவுச்சின்னம் இருக்கிறது. இதை காஃப்ரே மன்னரே கட்டினார் என்று சொல்கிறார்கள்.
மூன்றாவதாக மென்கவ்ரே என்ற பரூவாவின் கல்லறையாக 215 அடி உயரத்தில் ஒரு பிரமிட் கட்டப்பட்டது. இந்த பிரமிடுகள் பாலைவனத்தில் எப்படிக் கட்டப்பட்டன என்பது முதலில் பெரிய விவாதப் பொருளாக இருந்தது. ஆனால், ஜிஸாவில் பரபரப்பான துறைமுகம் இருந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
இப்போது அந்த துறைமுகம் அருகே இரண்டு வீடுகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். பிரமிடுகள் உள்ள இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் இருந்திருக்கலாம் என்பதை இந்த கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
இப்போதை கண்டுபிடிப்புகளில் ஒரு கட்டடம் விலங்குகள் உணவுக்காக வெட்டப்படுவதை கண்காணிக்கும் அதிகாரியுடையது என்றும், இன்னொன்றில், வடாட் என்ற நிறுவனத்தின் துறவி வாழ்ந்திருக்கலாம் என்றும் தொல்லியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சாமியார் வாழ்ந்ததாக கருதப்படும் இடத்தில் முத்திரை ஒன்று கிடைத்திருக்கிறது. இத்தகைய துறவிகள் எகிப்து அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்தார்கள் என்று புராதன எகிப்து குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தின் இயக்குனர் மார்க் லெஹ்னர் கூறினார்.
மென்கவ்ரே பரூவாவுக்காக கட்டப்பட்ட பிரமிடின் வேலைகள் நடந்தபோது அதில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் உணவுத் தேவைக்காக கோதுமையும், இறைச்சியும் இந்த இடத்திலிருந்து வினியோகிக்கப் பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜிஸா அருகே இருந்த துறைமுகத்தில் படகுகள் மூலமாக பிரமிடுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.