காவிரி போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை உடைத்ததற்காக, புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாகர்கோவில் -கோட்டார் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்து போடுகிறார். நக்கீரனுக்காக அவரைச் சந்தித்தோம்..
உங்களை தேசவிரோதி என்று அரசு குற்றம்சாட்டுகிறதே?
காமராஜர் அமைச்சரவையில் என் தாய்மாமன் பூவராகன் அமைச்சராக இருந்தார். உழவர் உழைப்பாளர் கட்சியை உருவாக்கிய ராமசாமி படையாச்சியார் என் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் என் தாத்தா கோவிந்தசாமி. நேரு பிரதமராகவும், காமராஜர் முதல்வராகவும் ஆதரவுக் கடிதம் கொடுத்தவரும் அவர்தான். மக்களுக்கும், இயற்கைக்கும் விரோதமான மோடியையே நம்பி ஹிட்லர் ஆட்சி நடத்தும் எடப்பாடிக்கும், அவரது அமைச்சர்களுக்கும் இந்த வரலாறு தெரியுமா? ஜீனிலேயே அரசியல் போர்க்குணம் கொண்ட என்னை தேசவிரோதி என்றழைக்க இவர்கள் யார்?
தமிழக வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்கள்தான் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பதாக தமிழிசை குற்றம்சாட்டுகிறாரே?
8 வழிச்சாலையால் சேலம் மற்றும் சென்னை மாநகர மக்களுக்கு என்ன பயன்? இந்த சாலையை பன்னாட்டு பெருநிறுவனங்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்காகவோ, கனரக வாகனங்கள் செல்வதற்கோ மட்டுமே பயன்படுத்தமுடியும். இதனால், ஏழை எளிய மக்களுக்கு என்ன லாபம் என்பதை என்னோடு ஒரே மேடையில் விவாதிக்க தமிழிசை தயாராக இருப்பாரா? ஒருவேளை 8 வழிச் சாலைக்கு மக்கள் இடமளித்தால், அவர்கள் நோகாதவண்ணம் சுங்கச்சாவடிகள் அமைக்கமாட்டோம் என தமிழிசையால் உத்தரவாதம் தரமுடியுமா?
தமிழகத்தில் நடக்கும் மக்கள் வாழ்வாதாரப் போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் போராட்ட முடிவுகள் சரியானதாக இருக்கிறதா?
89 எம்.எல்.ஏ.க்களுடன் பவர்ஃபுல்லாக இருக்கும் தி.மு.கவுக்கு சென்னையில் இருந்து குமரிவரை கிளைகள் இல்லாத ஊர்களே இல்லை. நினைத்த நேரத்தில் லட்சம் பேரை திரட்டக்கூடிய பலம்வாய்ந்த அந்தக் கட்சி, இந்நேரம் 5 லட்சம் பேருடன் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். சாதாரண கறுப்புக்கொடி போராட்டத்திற்கு ஏழாண்டுகள் சிறையென்று கவர்னர் மிரட்டுகிறார். கலைஞர் ஆக்டிவாக இருந்தாலோ, ஜெயலலிதா இருந்திருந்தாலோ அவர் வாய் திறந்திருப்பாரா?
சுங்கச்சாவடி உடைக்கப்பட்ட வழக்கில் போலீசார் இரண்டுமாதம் கழித்து உங்களை கைது செய்ததன் பின்னணி என்ன?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்ரல் 1ஆம் தேதி டோல்கேட் அசோஷியன் தலைவருக்குரிய உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியையும் சேர்த்து, 45 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டோம். காவல்துறையின் அத்துமீறலே சுங்கச்சாவடியை உடைக்கக் காரணம். இந்தப் போராட்டத்தில் என்னைத்தவிர 11 பேரை மட்டும் வீடியோவைப் பார்த்து கைதுசெய்தனர். ஆனால், இரண்டு மாதத்திற்குப் பிறகு, என்னைக் கைதுசெய்ததன் நோக்கம் சிறையில் இருந்து வந்தபிறகுதான் தெரிந்தது. ஐ.பி.எல். மற்றும் சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டத்தால் ஏற்பட்ட பலகோடி இழப்புக்கு பழிதீர்க்கத்தான் கவர்னர் மாளிகைக்கும், காவல்துறைக்கும் பெரிய அமவுன்ட்டைக் கைமாற்றி என்னைக் கைது செய்தார்கள்.
தமிழகத்தில் அடுத்து உங்கள் போராட்டம் எதை முன்வைத்து இருக்கும்?
லாட்டரிச் சீட்டை தடைசெய்யவேண்டுமென்கிற கோரிக்கையையும், தனி கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டுவந்தது நான்தான். ஜெயலலிதா அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு தடையும் செய்தார். ஜெயலலிதா தடைசெய்த லாட்டரியை மீண்டும் கொண்டுவர எடப்பாடி நடவடிக்கை எடுத்துவருகிறார். 5 ஆண்டுகளுக்கு 43ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் என்ற வரைவுத்திட்ட விளக்கத்தை அதிகாரிகள் எடப்பாடியிடம் கொடுத்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. லாட்டரியை மீண்டும் கொண்டுவர எடப்பாடிக்கு 400 கோடி கமிஷன் பேசப்பட்டுள்ளது. டாஸ்மாக்கிற்கு நிகரான லாட்டரி சீட்டு மீண்டும் வருமென்றால், அதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம் நடத்தும் என எடப்பாடியை எச்சரிக்கிறேன்.