மனிதர்கள் ஒரு காலத்தில் இயந்திரங்கள் போல் ஓயாது உழைத்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு உழைப்பதற்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை. கூலி கிடைத்தால் நிம்மதியான உறக்கம் இல்லை. ‘நீ வேலை பார்த்துக்கொண்டே இரு. அந்த வேலையை பார்க்கும் போதே நீ மடிந்தால் உனக்கு உறக்கம் எல்லாம் முழுவதுமாக கிடைத்துவிடும்’ என்று அக்கால முதலாளி வர்க்கம் சொல்லாமல் செயல்படுத்தி வந்தது.
18ஆம் நூற்றாண்டில் உலகமெங்கும் தொழில் வளர்ச்சி ஏற்படுகிறது. அதனை கையில் எடுத்த தொழிற்சாலை முதலாளிகள் நாட்டை வல்லரசாக்குகிறேன் என்ற பெயரில் தன் வேலையாட்களை வைத்து மிக அதிக வேலை வாங்கி அதில் லாபம் சம்பாதித்து தன்னை பணக்காரனாக வெளியே காட்டிக்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உழைக்கின்ற மக்களோ வேலை பார்த்தால் தான் சாப்பாடு, வாழ்க்கை என்று வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் சுமார் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை இருந்தது. 24 மணி நேரம் என்று முதலாளிகள் சொல்லியிருந்தால் கூட அதை செய்யும் நிலையில் தான் தொழிலாளர் வர்க்கம் இருந்தது. அவர்களுக்கு என்று யாரும் யோசிக்கவில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை. அப்படி தொழிலாளர்கள் எதிர்த்தால் கூட அடக்குமுறை என்ற ஒன்றை வைத்து அடக்கினர். இவ்வாறு உழைப்பாளிகளின் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக இருந்தபோதுதான் வெடித்துக்கொண்டு வெளியே வந்தார்கள் உழைப்பாளர்கள்.
1840ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் பத்து மணி நேர வேலை என்கிற வெற்றியை போராடி பெற்றனர். அதற்கு பிறகு எட்டு மணி நேர வேலை தான் சரியானது என்கிற முடிவை எடுத்து அதற்காக ஆயத்தமாகினர். தொழிலாளர்களின் குரல், “எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு” என்று ஒலிக்கத் துவங்கியது. பல போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் எல்லாம் நடந்தது. 1884 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் நடந்த தொழிற்சங்க மாநாடு ஒன்றில் 1886 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதியை எட்டு மணி நேர வேலைக்கான கெடுவாக வைத்தனர். தொழிலாளர்கள் 1886 ஆம் ஆண்டு மே ஒன்றைத் தொட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 3 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள உள்ள ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த 3000 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளிகளை அடக்க ஆளும் வர்க்கத்தின் பிடியில் இருந்த காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஆறு தொழிலாளிகள் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
அடுத்த நாள் இந்த சம்பவத்தை எதிர்த்து 'ஹே மார்க்கெட்' சதுக்கத்தில் நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் குண்டுவெடிப்பால் சார்ஜன்ட் ஒருவர் இறந்துபோக, காவலர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் தொழிலாளர்கள் கூட்டத்தின் தலைவர்கள் ஏழு பேரை கைது செய்து தூக்கிலிட ஆணை பிறப்பித்தனர். அடுத்த வருடம் நவம்பர் மாதம் அந்த ஏழு பேரில் நான்கு பேரை தூக்கிலிட்டனர். 1889 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த இரண்டாம் மாநாடு சிகாகோ சம்பவத்தை கண்டித்தது. மேலும் 1890 ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் பாரிஸ் மாநாடு எட்டு மணி நேர வேலை நேரம் என்பதற்கான நினைவாக மே 1 ஆம் தேதியை சர்வதேச நாளாக அறிவித்தது . மாநாட்டில் எண்ணியது போன்றே, 1890 மே 1 ஆம் தேதி உலகமெங்கும் எட்டு மணி நேரம் வேலை நேரமாக மாற்ற கோரிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடைபெற்றன.
காலப்போக்கில் இது உழைக்கும் மக்களின் உரிமை குரலுக்கான நாளாக மாறியது. மேலும் பல நாடுகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மே 1 ஆம் தேதியில் எட்டு மணி நேர வேலை என்கிற தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
இந்தியாவில் சென்னை மாநகரில்தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் 1923-இல் சென்னை அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார். அதன் நினைவுச் சின்னம்தான் மெரினாவின் உழைப்பாளர்கள் சிலை.
இப்படி பல போராட்டங்களை மேற்கொண்டு, உயிர்த் தியாகங்களைச் செய்து உழைப்பாளர்கள் “எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு” என்பதை பெற்றனர்.