ஆளும்கட்சியை அடிக்கடி பகைத் துக்கொள்வதால் நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் சமீபகாலமாக சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அவர் நடித்த "காவலன்', "தலைவா', "மெர்சல்', "சர்கார்' உள்ளிட்ட படங்கள் சிக்கலை சந்தித்தன. அதன் பிறகு ஏற்பட்ட சமரச முயற்சிகளில் அப்படங்கள் ரிலீஸானது. இந்த வரிசையில், தீபாவளிக்கு வரவிருக்கும் விஜய்யின் "பிகில்' படம் தற்போது ஆளும்கட்சியின் கோபப் பார்வையில் சிக்கியிருக்கிறது.
தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் "பிகில்' படத்தின் ஆடியோ ரிலீஸ் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய், பேனர் சரிந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபத்தைக் காட்டாமல், லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் கோபப்படுகின்றனர், பழி போடுகின்றனர். யாரை எங்கு உட்கார வைக்கணுமோ அங்கு அவரை உட்கார வைக்க வேண்டும்'' என முதல்வர் எடப்பாடி அரசை கடுமையாகத் தாக்கினார். இதற்காக, "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்' என்கிற திருக்குறளையும் விஜய் சுட்டிக் காட்ட, விழாவே கைதட்டல்களால் அதிர்ந்தது.
"ஆடியோ ரிலீஸில் விஜய் பேசிய பேச்சு முழுவதையும் கேட்க விரும்பினார் எடப்பாடி. உளவுத்துறையினர் மூலம் விஜய்யின் பேச்சு எடப்பாடிக்கு போட்டுக் காட்டப்பட்டது. தன்னைத்தான் தாக்குகிறார் என்பதை உணர்ந்த எடப்பாடி, "சினிமாவில் இமேஜ் உள்ள அந்த தம்பி (விஜய்), ஏன் இப்படி சம்பந்தமில்லாத விசயங்களை அந்த விழாவில் பேச வேண்டும்? அரசியல் செய்ய நினைக்கிறாரா?' என தனது கோபத்தை மூத்த அமைச்சர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகு சில உத்தரவுகள் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டன'' என்கிறார்கள் மாநில உளவுத் துறையினர்.
இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, "அரசியல் ஆர்வம் அதிகமுள்ள நடிகர் விஜய், தனது படங்களில் ஆளும்கட்சியை சீண்டும் வகையில் காட்சிகள் மற்றும் வசனங்கள் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவருடைய "தலைவா' படத்தில் அப்படிப்பட்ட சில காட்சிகள் இருந்தன. அதாவது, "எம்.ஜி.ஆருக்கு இருந்த செல்வாக்கு எனது மகனிடமும் (விஜய்), அறிஞர் அண்ணாவிடம் இருந்த அறிவு என்னிடமும் இருக்கின்றன. தமிழகத்தில் அடுத்த முதல்வர் என் மகன்தான்' என விநியோகஸ்தர்களிடம் அடிக்கடி சொல்வார் விஜய்யின் அப்பா சந்திரசேகர். இதனை மையப்படுத்தும் வகையில்தான் "தலைவா' படம் எடுக்கப்பட்டது. அதற்கேற்ப, "டைம் டூ லீட்' என்கிற துணைத்தலைப்பும் அந்த படத்துக்கு வைக்கப்பட்டதுடன் சில காட்சிகளும் வசனங்களும் புகுத்தப்பட்டிருந்தன.
இந்த விவகாரம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியவர, படம் ரிலீஸாகும் முதல்நாள் அப்படத்திற்கு சிக்கல் முளைத்தது. குறிப்பாக, விஜய்யின் "தலைவா' படம் ரிலீஸாகும் தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல் வர... அந்த தியேட்டர் உரிமையாளர் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை அணுக, பாதுகாப்பு தர மறுத்தது காவல்துறை. இதனால் படத்தை ரிலீஸ் செய்வதிலிருந்து தியேட்டர் உரிமையாளர் பின்வாங்கினார். தமிழகம் முழுவதும் இதே பாணியில் தியேட்டர் உரிமையாளர்கள் பின்வாங்க, படம் ரிலீஸாகவில்லை. இதனால் விஜய்யும் படத் தயாரிப்பாளரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, ஜெயலலிதாவை சந்திக்க தவமிருந்தனர் விஜய்யும் அவரது தந்தையும். ஒரு கட்டத்தில், அவர்களுக்கு அனுமதி கிடைக்க, சாஷ்டாங்கமாக மன்னிப்பு கேட்டதுடன், சில காட்சிகளும் வசனங்களும் நீக்க சம்மதித்தனர். படமும் ரிலீசானது. அதன்பிறகு அமைதியான விஜய், ஜெயலலிதா இல்லாத சூழலில் எடப்பாடி அரசை அவ்வப்போது சீண்டி வருகிறார்.
இந்த நிலையில், தலைவா படத்தின் போது ஜெயலலிதா எடுத்த அதே லகானை தற்போது எடுக்க ஆலோசித்து சில யோசனைகள் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அரசு தரப்பிலிருந்து பாஸ் செய்யப்பட்டிருக்கிறது. கடந்தவாரம் அது குறித்து ஆலோசனை நடத்திய திரையரங்க உரிமையாளர்கள் சிலர், "அரசாங்கத்தை பகைத்துக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்யணுமா?' என விவாதித்துள்ளனர். இதற்கிடையே, சென்சார் போர்டிலும் தமிழக அரசு அதிகாரிகள் தலையிட்டிருக்கிறார்கள். இதனால், சென்சாருக்கு அப்ளை செய்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் சென்சார் செய்யும் பட்டியலில் "பிகில்' படத்தை சேர்ப்பதில் இழுபறி நீடித்தது. ஆக, ஆட்சியாளர்களை அட்டாக் பண்ணியதால் விஜய்யின் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதில் தடையை ஏற்படுத்தி வருகிறது ஆளும் கட்சி'' என பின்னணிகளை சுட்டிக் காட்டுகிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.
"பிகிலுக்கு தடை ஏற்படுத்தும் ஆட்சியாளர்களின் திட்டத்தையறிந்து அதிர்ச்சியடைந்த விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினியின் உதவியை நாடியிருக்கிறார். ஆனால், இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட ரஜினி அவசரம் காட்டவில்லை. விஜய்யின் தனிப்பட்ட கருத்துக்களால் படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் குறித்து ரஜினிக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடியை சந்தித்து சமரசம் பேசவும் தயாராகி வருகிறார் விஜய். ஆனால் அந்த சந்திப்பு ரகசியமாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிடப்படுகிறதாம். இதற்கிடையே, சென்சார் விசயத்தில் பா.ஜ.க.வின் ஆதரவைப்பெற டெல்லியை அணுகும் முயற்சியும் எடுக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள் கோலிவுட் தரப்பினர். எதிர்ப்பு வளையத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் மனது வைத்தால்தான் தீபாவளிக்கு பிகில் ஊதுவார் நடிகர் விஜய்.