அந்தப்புகைப்படங்களை பார்த்தபோது அந்தக்கால கேவா கலர் சினிமாக்களின் ஏதோ ஒரு பட காட்சிகள் என்றே தோன்றியது. டெவலப் செய்யப்படாத பிலிம் நெகட்டிவ் இமேஜ் போலவும் இருந்த அந்தப்புகைப்படங்களின் பின்னால் ஒரு காட்டுத்தீயின் கதை இருப்பது அதிர வைக்கிறது. இயற்கைக்கு எதிராக மனிதர்கள் எடுத்துள்ள நெகட்டிவ் ரோல்தான் இத்தகைய காட்சிகளுக்கு காரணம் என்று அறியமுடிகிறது.
வானமும், பூமியும் திடீரென ஒரே ரத்தச்சிவப்பாக மாறியதால், இது பூமியா? அல்லது வேற்று கிரகமா? என்று அச்சத்தில் உறைந்துபோய் கிடக்கிறார்கள் இந்தோனேசியாவின் ஜாம்பி மாநில மக்கள். காட்டுத்தீயின் தாக்கம் இந்த அளவுக்கு கடுமையாக இருக்கிறது.
ஜாம்பி தீவில் காட்டுத்தீயினால் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த புகைமூட்டம்தான் ஊரையே ரத்தச்சிவப்பாக மாற்றியுள்ளது. புகை, மாசுத்துகள்களால் சூரியஒளி சிதறடிக்கப்படுகிறது. இதனால், ‘ரேலே ஸ்கேட்டரிங்’ என்ற நிகழ்வு உண்டாகிறது. அடர்த்திமிக்க அந்த புகைமூட்டம் சவ்வுபோல இருந்து சிறிய அலைநீளம் உள்ள கதிர்களை பரவவிடாமல் மறைத்து, நீளமான அலைநீளம் உள்ள கதிர்களை வீசுகின்றன. இந்த நீளமான கதிர்கள் ஆரஞ்சு –சிவப்பு அலைக்கற்றையில் ஒளியை வீசுவதால்தான் வானம் மங்கலாகவும், சிவப்பாகவும் காட்சியளிக்கிறது’’என்கிறார் இந்தோனேசியாவின் தேசிய வாரியத்தின் தகவல்துறை தலைவர் ஆகுஸ் விபோவோ சோயெட்.
இந்தோனேசியாவில் சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் கடந்த மாதம் காட்டுத்தீ மூண்டுள்ளது. எத்தனையோ முயற்சிகள் செய்தும் இதுவரை தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள புகைமூட்டத்தால் அண்டைநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், புரூனே உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் புகைமூட்டத்தினால் காற்று மாசுபாடு அதிகரித்து கண் எரிச்சல், வாந்தி, மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு போன்ற பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லவேண்டாம், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றின் தூய்மைக்கேடு அபாய அளவை எட்டுகிறபோது பள்ளிகள் மூடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் மாலையில் காற்று தூய்மைக்கேடு குறியீடு ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் மறுநாள் பள்ளிகளை திறப்பதா? விடுமுறை அளிப்பதா? என்று முடிவெடுத்து அறிவிக்கிறது மலேசிய அரசு.
வீட்டிலும், அலுவலகத்திலும், பள்ளிகளிலும் எல்லோரும் முகத்திற்கு மாஸ்க் அணிந்தபடியே செல்கின்றனர். அரசு மக்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கி வருகிறது. மேலும், செயற்கை மழைப்பொழிவின் மூலம் புகையின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியுமென்று நிபுணர்கள் கருதுவதால், அதற்கான முயற்சியிலும் இருக்கிறது மலேசிய அரசு. செயற்கை மழைக்கு அரசு திட்டமிட்டு வரும் நிலையில், இயற்கை மழைவேண்டி நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
அண்டை நாடுகளுக்கே இவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கும் இந்தக் காட்டுத் தீ, இந்தோனேசிய மக்களின் உடல்நலத்துக்கு எத்தகைய கேட்டினை உண்டாக்கும்?
காட்டுத்தீயை கட்டுப்படுத்த எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார். அந்நாட்டு மக்களும் மழைக்காக பிரார்த்தனை செய்துவருகிறார்கள்.
இந்தோனேசியா, பாமாயில் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. பாமாயில் மூலம் அதிக லாபம் கிடைப்பதால் பாமாயில் எண்ணெய் மரங்கள் எனப்படும் செம்பனை மரங்களை விவசாயம் செய்வதில் பலரும் ஆர்வம்காட்டி வருகிறார்கள். இதற்காக காடுகளை அழித்து, செம்பனை விவசாய நிலமாக்குகிறார்கள். இதனால்தான் அவ்வப்போது காடுகள் எரிகின்றன என்கிறார்கள். பாமாயில் ஏற்றுமதியில் லாபம் பார்க்கும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தரும் ஊக்கத்தினால் விவசாயிகள் அதிகமாக காடுகளை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய காட்டுத்தீக்கும் மலேசிய நிறுவனமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
12 கோடி ஹெக்டேர் அளவைக்கொண்டு பல்லுயிர்களையும் கொண்ட உலகின் மூன்றாவது மிகப்பெரிய காடான இந்தோனேசியக்காடு, இதுவரை பல லட்சம் ஹெக்டேர்களை இழந்திருக்கிறது. இத்தனை லட்சம் ஹெக்டேர்களை அழித்தது போதாதென்று மேலும், 2 கோடி ஹெக்டேர் அளவில் செம்பனை விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக காட்டெரிப்பு நடந்துகொண்டேதான் இருக்கும் என்று தெரிகிறது. கடந்த ஜனவரி முதல் இந்தோனேசியாவின் ரியாவ், ஜாம்பி, களிமந்தான் போன்ற மாநிலங்களில் 42 ஆயிரம் ஹெக்டேருக்கு மேலான காடுகள் எரிக்கப்பட்டுள்ளன.
இந்தக்காடு எரிவதால் பல உயிரினங்களோடு, அரியவகை ஓரங்குட்டான் குரங்கினமும் அழிந்து வருகிறது. பழங்குடிகளும் தங்கள் வாழ்விடங்களை இழந்து வருகின்றனர். காட்டுத்தீ வளிமண்டலத்தில் ஏராளமான கார்பன் டை ஆக்சைடுவை உமிழ்ந்து வரும் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
அமேசான், இந்தோனேசியக்காட்டெரிப்புகள் நடந்து வரும் இவ்வேளையில், ஐநாவில் நடந்த பருவநிலை மாநாட்டில் சுவீடனைச்சேர்ந்த சிறுமி கிரேட்டா தன்பெர்க் ‘’வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயு வெளியேற்றத்தை எதிர்கொள்வதில் இளம் தலைமுறையினரை உலகத்தலைவர்கள் ஏமாற்றி வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது? என்று உலகத்தலைவர்களை கடுமையாக சாடியுள்ளார்.
எண்பதுகளில் தொடங்கி இன்றுவரை இந்தோனேசியக்காடுகள் அவ்வப்போது தீப்பிடித்து எரிகின்றன. இது காட்டெரிப்பு அல்ல இயற்கையான சம்பவம் என்றும் சொல்லப்படுவதுண்டு. அப்படியானால் எரிந்த இடங்களில் மீண்டும் காடு ஏன் உருவாகவில்லை? அந்த இடங்களை பாமாயில் எண்ணெய் மரங்கள்தானே ஆக்கிரமிக்கின்றன. இது காட்டெரிப்புதானே என்று கேள்வி எழுப்புகிறார்கள் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.
லாபம் ஈட்டும் பாமாயில் உற்பத்தியை இந்தோனேசியா நிறுத்தப்போவதுமில்லை. காட்டெரிப்பும் நிற்கப்போவதில்லை. மழைபெய்யவைக்கும் இக்காடுகளை பாவிகள் தீ வைத்து எரித்துக்கொண்டேதான் இருக்கப்போகிறார்கள். தீயை அணைக்க மழை வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டேதான் இருக்கப்போகிறார்கள் அப்பாவிகள்.
-கதிரவன்