ஜனநாயகத்துக்கும், மத நல்லிணக்கத்துக்கும் உலக அரங்கில் தனிச்சிறப்பு எப்போதுமே நம் இந்திய நாட்டுக்கு உண்டு. சமீப காலமாக, இந்தக் கூறுகளின் இருப்பு குறித்த சந்தேகம் பலருக்கும் எழுந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. நாட்டின் எல்லா மூலைகளில் இருந்தும் மத துவேஷங்கள் பரப்பப்படுவதும், எதிர்க்குரல்களை தீவிரவாத முத்திரை குத்தி ஒடுக்கப்பார்ப்பதும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும்தான் அந்த சந்தேகத்துக்கான காரணம்.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக ஆட்சியைப் பிடித்த சமயத்தில் பசு குண்டர்களால் கொல்லப்பட்ட பெஹுலுகான் தொடங்கி, சமீபத்தில் ஜெய்ஸ்ரீராம் சொல்லச்சொல்லி சித்தரவதை செய்தே பிணமாக்கப்பட்ட தப்ரீஷ் அன்சாரி வரை எல்லாவற்றிற்குப் பின்னும் மதஅரசியல் வலுவாக பிணைந்திருக்கிறது. இஸ்லாமியர்களும், பட்டியலின மக்களும் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையைக் குறித்து வேதனைப் படுவதாக பிரதமர் மோடியே திருவாய் மலர்ந்தாலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாகத் திரிவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
இதையெல்லாம் எண்ணி வருந்தித்தான் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை ரேவதி, வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள், கும்பல் கொலைகளை இனியேனும் இந்த நாடு சகித்துக் கொள்ளக்கூடாது. உடனடியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், இந்த நாடு அதன் ஜனநாயக முகத்தை இழந்துவிடும் என பிரதமர் மோடிக்கு கூட்டாக கோரிக்கை கடிதம் எழுதினார்கள்.
அந்தக் கடிதத்தில், “நமது நாட்டில் சமீபகாலங்களில் நிகழ்ந்த பல மோசமான சம்பவங்கள் குறித்து நாங்கள் கவலை அடைந்துள்ளோம். இந்தியா ஒரு மதச்சார்பற்ற சோஷியலிச ஜனநாயக குடியரசு நாடு; இங்கு எல்லா பேதங்களைக் கடந்தும் அனைத்து மக்களும் சமம் என்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரால் குடிமக்கள் அனைவரும் அவர்களுக்கான உரிமையை பெறவேண்டும் என்பதற்காக இதனை எழுதுகிறோம்.
முஸ்லிம், தலித் மற்றும் பிற சிறுபான்மையினர்கள் கூட்டாக தாக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், அதில் ஈடுபட்டதற்காக தண்டனை அனுபவித்தவர்கள் வெகுசிலரே.
'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கங்கள் தற்போது சண்டையின் தொடக்கமாகிவிட்டது. அதன் பெயரால் சட்டம் ஒழுங்கு மற்றும் பிற கும்பல் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மதத்தின் பெயரால் பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை அளிக்கிறது. இது பழங்காலம் அல்ல. ராமரின் பெயருக்கு இம்மாதிரியான சம்பவங்களால் நேரும் அவப்பெயரை நீங்கள் தடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
ஜெய்ஸ்ரீராம் முழக்கமிடச் சொல்பவர்களால் நிகழும் வன்முறைகளைக் களையச் சொல்லும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட ஓரிரு தினங்களிலேயே, மீண்டும் பிரபலங்கள் சிலர் எழுதிய கூட்டுக்கடிதம் ஒன்று பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்தமுறை ஜெய்ஸ்ரீராம் முழக்கமிடுபவர்களுக்கு ஆதரவாக அது இருந்தது. கங்கனா ரனாவத், பிரஷூன் ஜோஷி, சோனால் மான்சிங் உள்ளிட்ட 61 பேர் எழுதி இருந்த அந்தக் கடிதத்தில், “ஜெய் ஸ்ரீராம் எனும் பக்தர்கள் அனைவருமே குற்றவாளிகளாவும், கொலைகாரர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். அந்த பக்தர்கள் மீது அளிக்கப்படும் புகார்கள் அவர்கள் மீது தவறான தோற்றத்தை உண்டாக்குகின்றன. எல்லா வன்முறைகளுக்கும் இவர்களே காரணம் என்று சொல்வது தவறு” என குறிப்பிட்டிருந்தனர்.
பிரதமர் மோடி தனக்கு எழுதப்பட்ட இந்த இரண்டு கடிதங்களுக்குமே எந்தவித சலனத்தையும் காட்டவில்லை. கடந்த ஜூலை மாதம் இந்தக் கடிதங்கள் எழுதப்பட்ட நிலையில், தற்போது மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி வழக்குப்பதிய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது புகார் மனுவில், “தேசத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துகிறார்கள், சீரிய முறையில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி மீது அவதூறு பரப்புகிறார்கள் மற்றும் பிரிவினைவாதப் போக்குகளைக் கடைபிடிக்கிறார்கள்” போன்ற குற்றச்சாட்டுகளை இந்த 50 பிரபலங்களின் மீதும் சுமத்தியிருக்கிறார் சுதிர்குமார் ஓஜா.
“கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. அரசுக்கு எதிரான கருத்துகளை கூறுவதால் மக்கள் ’ஆண்டி இந்தியன்’ என்றும் ’அர்பன் நக்சல்ஸ்’ என்றும் அடையாளப் படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 19ஆவது பிரிவு குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கிறது. அதில் எதிர்ப்பு தெரிவிப்பதும் கூட அடங்கும்” என மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்களும் தங்களது கடிதத்தில் அழுத்தமாகக் கூறியிருந்தனர். அதனாலேயே இன்று ஆண்டி இந்தியன்களாகவும், அர்பன் நக்சல்களாகவும் ஆக்கப்பட்டு, கூடவே வழக்கும் பதிந்திருக்கிறார்கள் அவர்களின் மீது.