Skip to main content

பதவிக்காக ஜெ பிணத்தில் அரசியல்!

Published on 19/09/2018 | Edited on 19/09/2018

"என்னத்த விசாரிக்கிறாங்களோ' என மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன் திடீரென மிகவும் சீரியஸான விசாரணையில் இறங்கியுள்ளது.

அடுத்த மாதம் 24-ம் தேதியோடு தனது விசாரணையை முடித்துக்கொள்ள வேண்டும் என கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில்தான் விசாரணையில் புதிய வேகம் தெரிகிறது. அடுத்த கட்ட சாட்சியங்களாக இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவை விசாரிக்க திட்டமிட்டுள்ளது என்கிறது ஆணைய வட்டாரம்.

 

jayadeath

jayadeath


அவர் மட்டுமல்ல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே இவர்களுடன் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக சாட்சியமளிக்க சம்மன் அனுப்பி விசாரிக்கப் போவதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆணையம் மிகவும் சீரியஸான விசாரணைக் கட்டத்திற்கு சென்றிருப்பதை அப்பல்லோ மருத்துவமனையை ஆணையம் டீல் செய்ததிலிருந்து தெளிவாகிறது. முதலில், ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக அப்பல்லோ அளித்த மருத்துவக் குறிப்புகளை படிக்க முடியாமல் ஆணையம் திணறியது. அதற்காக ஒரு மருத்துவக் குழுவை தாருங்கள் என ஆணையம் தமிழக அரசை கேட்டது. அதை அரசு சட்டை செய்யவில்லை. ஏனோதானோவென ஒரு மருத்துவக் குழுவை அரசு அமைத்தது. அந்தக் குழுவின் உதவியுடன் மருத்துவக் குறிப்புகளை படித்த ஆணையம் அதன்பிறகு திரும்பிப் பார்க்கவில்லை.

judgearumugamஅப்பல்லோவில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களை சம்மன் அனுப்பி அழைத்து சாட்சி சொல்ல வைத்தது. டாக்டர்கள், நர்ஸ்கள், ஆயாக்கள் என ஜெ.வின் சிகிச்சையுடன் தொடர்புடைய அனைவரும் ஆணையத்திற்கு வந்தார்கள். அவர்கள் அளித்த சாட்சியங்களுக்கும் மருத்துவக் குறிப்புகளுக்கும் உள்ள முரண்பாடுகளை ஆணையத்தின் வழக்கறிஞர்கள் கேள்விக்குறியாக்கினர். அப்பல்லோ டாக்டர்களை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியும் குறுக்கு விசாரணை செய்தார். அந்த குறுக்கு விசாரணையில் ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு காவேரி நதிநீர் விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார் என்பதை அவர் பதிவு செய்தார்.

அப்பல்லோ மருத்துவர்கள் மட்டுமல்ல அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் வந்து பார்த்தார்கள். ஜெ. இறந்ததாக சொல்லப்படும் டிசம்பர் 5-ம் தேதிக்கு முன்பு 3-ம் தேதிவரை அவர் நல்ல உடல்நிலையில் இருந்தார் என எய்ம்ஸ் டாக்டர்களை வைத்து பதிவு செய்தார். ஆனால் "நாங்கள் அப்பல்லோ மருத்துவர்கள் சொன்ன தகவல்கள் அடிப்படையில்தான் சொன்னோம்' என பல்டி சாட்சியானார்கள்.

"ஜெ.வின் உடல்நிலையைப்பற்றி ஓ.பி.எஸ்., தம்பிதுரை ஆகியோரிடம் நாங்கள் விளக்கினோம்' என அப்பல்லோ டாக்டர்கள் சொன்னதை பதிவு செய்த ராஜா செந்தூர் பாண்டி தொடர்ந்து ஓ.பி.எஸ்.சை சாட்சியாக கொண்டுவர வாதிட்டார். அவரது வாதத்தை விசாரணை கமிஷன் ஏற்றுக் கொண்டது என நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறது ஆணைய வட்டாரம்.

அப்பல்லோவின் டாக்டர்களும் நர்ஸ்களும் அளித்த சாட்சியத்தில் ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான முரண்பாடுகளை கமிஷன் சீரியஸாக எடுத்துக் கொண்டது. ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற அறையை நேரில் சென்று பார்வையிட்டது. ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போது ஜூஸ் குடிக்கும் வீடியோ ஒன்றை வெற்றிவேல் வெளியிட்டார். அந்த வீடியோவில் இடம் பெற்ற அறையை கமிஷன் போய் பார்த்தபோது முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அந்த அறையை மட்டும் ஏன் மாற்றி அமைத்தீர்கள்' என அப்பல்லோவின் பொறியாளரை கேட்டதற்கு அவர், ஆணையத்திற்கு உரிய பதிலை தரவில்லை. அவரை எச்சரித்து அனுப்பினார் நீதிபதி ஆறுமுகசாமி. அடுத்ததாக அப்பல்லோவின் உரிமையாளர் பிரதாப் சி ரெட்டிக்கு சம்மன் அனுப்பினார். அவர் வரவில்லை. அவரது வழக்கறிஞர்கள்தான் வந்தார்கள்.

"அப்பல்லோ என்ன வானத்திலிருந்து குதித்த நிறுவனமா? ஜெ.வுக்கு சிகிச்சை அளித்ததற்கு பணம் பெற்றுக் கொண்டுதானே சிகிச்சை அளித்தீர்கள். அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் போதும் அவர் தொடர் சிகிச்சையில் அறைகள் மாற்றப்படும்போதும் ஸ்கேன் எடுக்க கொண்டு செல்லப்படும்போதும் எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள் எங்கே?' என கேட்டனர். அதற்குப் பதிலளித்த அப்பல்லோ நிர்வாகம், "ஜெ. சிகிச்சை பெறும்போது சி.சி.டி.வி. இயங்கவில்லை' என்றனர். ஜெ. "சிகிச்சையின் போது சி.சி.டி.வி. பதிவுகளை நிறுத்த அப்பல்லோ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது யார்' என ஆணையம் கேள்வி எழுப்பியது. அதுவரை ஆணையத்திற்கு ஒத்துழைக்காமல் நீக்கு போக்கு காட்டிய அப்பல்லோ அதன்பிறகு ஆணையத்திடம் சரணாகதி அடைந்தது. "எங்களிடம் ஜெ.வின் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளன. அதை ஆணையத்திடம் சமர்ப்பிக்கிறோம்' என்றது. "அதை உடனே கொடுங்கள்' என ஆணையம் சீரியஸாக உத்தரவிட்டுள்ளது.

"ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அப்பல்லோ தவறுகள் செய்திருந்தால், அதற்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்கிறார் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டி. அதேபோல், கவர்னர் வித்யாசாகர் ராவின் சிறப்பு செயலாளரான ரமேஷ் சந்த் மீனாவை சாட்சியத்திற்கு அழைத்த கமிஷனிடம் "கவர்னர் இரண்டுமுறை பார்த்தார், ஒருமுறை ஜெ. சீரியஸாக இருந்தார்'. இரண்டாவது முறை பிசியோதெரபி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெ., கவர்னரை பார்த்து கையசைத்ததாக கவர்னர் கூறினார்' என்றார். "இரண்டு முறை ஜெ.வை பார்த்த கவர்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஜெ.வை ஏன் பார்க்கவில்லை? கவர்னர் பார்க்கும்போது மிகவும் சீரியஸாக இருந்த ஜெ.வை தனது அதிகாரத்தை பயன்படுத்தி வெளிநாட்டு சிகிச்சைக்கு ஏன் கொண்டு செல்லவில்லை' என ஆணைய வழக்கறிஞர்கள் கிடுக்கிப்பிடி போட்டிருக்கின்றனர் என்கிறது ஆணைய வட்டாரம்.

இந்நிலையில், டிசம்பர் 5 நள்ளிரவு வாக்கில் ஜெ. மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று மாலையே புதிய முதல்வரும், அமைச்சர்களும் பதவியேற்க, ராஜ்பவனில் எல்லா வேலைகளும் நடந்துள்ளன. 5-ந்தேதி மாலையே அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கொடி இறக்கப்பட்டதும், மீடியாக்களில் ஜெ. மரணம் என ப்ளாஷ் நியூஸ் வெளியாகி, பின்னர் மாற்றப்பட்டாலும், ராஜ்பவனில் நடந்த ஏற்பாடுகளின் அடிப்படையில்தான் அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் தலைவி எப்படியாவது தேறி வந்துவிட மாட்டாரா என பரிதவித்திருந்த நேரத்தில் பதவிக்காக பிண அரசியல் நடத்தியுள்ளனர் அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையும்.