Skip to main content

ஜெயேந்திரர் ஒப்புதல் வாக்குமூலம்!

Published on 14/09/2017 | Edited on 14/09/2017


இப்போது ஆங்கில ஊடகத்தில் வீடியோவாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தும் ஜெயேந்திரரின் வாக்குமூலத்தை, 13 ஆண்டுகளுக்கு முன்பே அச்சில் தந்த ஒரே இதழ் நக்கீரன்தான்.

கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன், காஞ்சி கோயிலிலேயே படுகொலை செய்யப்பட்டு இரத்தவெள்ளத்தில் இறந்துகிடந்தார். இந்த சம்பவம் காஞ்சிபுரம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழத்தையும் உறைய வைத்தது. இந்தக் கொலை நடந்த சில தினங்களிலேயே, இதில் தொடர்புடைய விஷயங்களை பல கோணங்களில் புலனாய்வு நடத்தி செய்திகளை வெளியிடத் தொடங்கியது நக்கீரன்.

செப்டம்பர் 8ம் தேதி கடைகளுக்கு வந்த நக்கீரன் இதழில் காஞ்சி கோவிலின் மேலாளர் சங்கரராமனின் சந்தேக மரணம் குறித்து சேகரித்த தகவல்கள் வெளியிடப்பட்டன. செப்டம்பர் 11ம் தேதி வெளிவந்த நக்கீரன் இதழில் காஞ்சி சங்கரமடத்தில் மகாபெரியவாளின் சீடர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல், பகை குறித்து சங்கரராமன் எழுதிய ‘இறுதி அறிவிப்பு’ என்ற தலைப்பிட்ட கடிதமும் வெளியிடப்பட்டது.


செப்டம்பர்15 தேதியிட்ட இதழில் படுகொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி மற்றும் மகள், இந்த கொலை குறித்து சந்தேகம் இருப்பதாகவும், யார் என்று சொன்னால் எங்களுக்கும் அதேகதிதான் என்றும் சொன்னது வாக்குமூலமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 25ம் தேதியிட்ட நக்கீரன் இதழில் ஜெயேந்திரரிடமே நேரடியாக பேட்டி எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில், இந்தக் கொலைக்கு ‘என் பக்தர்கள் காரணமாக இருக்கலாம்’ என ஜெயேந்திரர் கூறியிருந்தார்.

நவம்பர் 11ம் தேதி சங்கரராமன் கொலைவழக்கில் காஞ்சி பெரியவா ஜெயேந்திரரை, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறப்புப்படை அமைத்து கைது செய்தார். இந்த கைது அதுவரை நக்கீரன் வெளியிட்ட அனைத்து செய்திகளையும் உண்மையாக்கி, அதன் புலனாய்வின் வலிமை மற்றும் நம்பகத்தன்மையை உலகிற்கு உரக்கச் சொன்னது.

சிறையிலிருந்த ஜெயேந்திரர் ‘நான்தான் சங்கரராமனை கொன்னேன்’ என வாக்குமூலம் அளித்ததை நவம்பர் 27 தேதியிட்ட இதழில் முதல்முதலாக உலகறியச் செய்தது நக்கீரன். ஜெயேந்திரருக்கு மூன்றுநாள் போலீஸ் கஸ்டடி முடிந்தபோது விசாரணை நடத்தி முடித்த காவல்துறை உயரதிகாரிகளின் முகத்தில் திருப்திகரம் பளிச்செனத் தெரிந்தது. காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் தரையில் மெத்தை போடப்பட்டு, அதன்மீது கம்பளியும் போர்வையும் விரிக்கப்பட்டு, அதில் உட்கார வைத்துதான் ஜெயேந்திரரை விசாரித்தனர் போலீசார்.

கஸ்டடி எடுக்கப்பட்ட முதல் நாள் மாலையில் சங்கரராமன் கொலை, அப்புவுடனான தொடர்பு, மடத்தின் வங்கிக் கணக்குகள் என போலீசாரிடமிடந்து தொடர்ச்சியாக வந்த கேள்விகளுக்கு ஜெயேந்திரர் பிடிகொடுக்காமல் மௌனம் காத்ததையும், எந்தக் கேள்வியையும் மறுத்து பதிலளிக்கவில்லை. இரண்டாவது நாளாக தொடர்ந்த விசாரணையில் எஸ்.பி. பிரேம்குமார், எஸ்.பி. டேவிட்சன் ஆசீர்வாதம், எஸ்.பி. வரதராஜுலு விசாரணை அதிகாரியான ஏ.எஸ்.பி. சக்திவேல் நால்வரிடமிருந்தும் வந்த கிடுக்குப்பிடி கேள்விகளால் திணறிய ஜெயேந்திரரின் மன உறுதி குலையத் தொடங்கியது.

கொலை தொடர்பாக கேள்விகள் தொடர்ச்சியாக கேட்கப்பட்டபோது, ‘ஓ’வென கதறி அழத்தொடங்கிவிட்டார் ஜெயேந்திரர். அந்தக் கதறலைத் தொடர்ந்து அவரிடமிருந்து வந்த பதில், ஒப்புதல் வாக்குமூலமாகவே அமைந்தது. “பத்து நிமிஷம்... பத்து நிமிஷத்தில் என் வாழ்க்கையே இப்படி ஆயிடுத்து. கோபுரத்திலே தங்க கலசமா ஜொலிச்சிண்டிருந்தேன். இன்னைக்கு சாக்கடையிலே கிடக்கிறேன்.

பத்தேபத்து நிமிஷம்தான்.. என் வாழ்க்கையே பறிபோயிடுத்து. சங்கரராமன் கடைசியா எழுதியிருந்தானே அந்த லெட்டரை படிச்சு முடிக்கிறச்சே, பக்கத்திலே ஆர்.எஸ் நின்னுண்டிருந்தான். ‘இதற்கெல்லாம் முடிவே கிடையாதாடா.. இனிமே அவன்கிட்டேயிருந்து லெட்டரே வரப்படாதுடா’ன்னு சொன்னேன். அவன், பெரியவா உத்தரவு கொடுத்தேள்னா லெட்டரே வராதபடி பண்ணிடுறேன்னான். நீ  என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ. ஆனா, இனிமே அவன் லெட்டரே வரக்கூடாதுன்னு சொன்னேன். தான் எல்லாத்தையும் பார்த்துக்கிறதாகவும், செலவுக்குத்தான் பணம் ஜாஸ்தியாகும்னும் சொன்னான். எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை. 


‘சுந்தரேசா..இவா கேக்குற பணத்தைக் கொடுத்தனுப்பு’ன்னு சொன்னேன். எல்லாம் முடிங்சு போயிடுத்து” என்றவரின் அழுகை  அதிகமாகத் தொடங்கியது. கேவி, கேவி அழுதவர், திடீரென ‘ஓ..’வெனக் கதறியபடி, “கோபுரக்கலசமா இருந்துண்டிருந்தேன். இப்படி வந்து கிடக்குறேனே” என முகத்தைப் பொத்திக்கொண்டு குலுங்க ஆரம்பித்துவிட்டார். போலீஸ் அதிகாரிகள் அவரை மெல்ல சமாதானப்படுத்தி ஆசுவாசம் கொள்ள வைத்தனர்.

 அதன்பிறகு தொடர்ந்தார் ஜெயேந்திரர். “கடைசி லெட்டர் வந்த அன்னைக்கு சாயங்காலமே அப்பு பேசினான்.ஆர்.எஸ். சொன்னதை செய்திடலாமான்னு கேட்டான். சங்கரராமன் இனிமே தொல்லை பண்ணக்கூடாதுன்னு அவன்கிட்டேயும் நான் சொன்னேன். சங்கரராமன் கொலைக்கு அப்புறமும் அப்பு போன் பண்ணினான். கதிரவனும் போன் பண்ணி பேசினான். அவா கேட்ட பணத்தையெல்லாம் கொடுத்தேன். அதற்கப்புறம், இன்னும் பணம் கொடுங்கோன்னு சொல்லி ப்ளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சிட்டா. பணம் கொடுத்துண்டே இருந்தேன். பத்து நிமிஷ தடுமாற்றம்... எங்கோ இருந்த என்னை இப்போ இருட்டறையில் கொண்டு வந்து தள்ளிடுத்து” என்றவர், அதன்பின் போலீஸ் அதிகாரிகளிடம் பரிதாபக் குரலில் பேசத் தொடங்கிவிட்டார். 

“என்னை மன்னிச்சுடுங்கோ.. மன்னிச்சிடுங்கோ.. ஜாதகப்படி நேக்கு 76 வயசுலே மரணம். இப்ப 70 வயதுஆறது. இன்னும் 6 வருஷத்துல் செத்துடுவேன். என்னை மன்னிச்சு விட்டுடுங்கோ. ஆனா இந்த பால பெரியவா விஜயேந்திரன் இருக்கானே மகா மோசமானவன். அவன்தான் எல்லாத்தையும் பண்ணிண்டிருக்கான். இப்ப சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு போட்டு, அங்கேயும் அது தள்ளுபடியாகி, நேக்கு கெட்டபெயரை உண்டாக்கி, பிரேமானந்தா மாதிரி நிரந்தரமா ஜெயிலிலே வச்சுடணும்னு திட்டம் போட்டு செயல்பட்டுண்டிருக்கான். என்னை மன்னிச்சு விட்டுடுங்கோ.

ஜெயிலுக்கு போய் திரும்பி வந்தவா பீடாதிபதியா இருக்க முடியாது. நான் பீடாதிபதியா இருக்க போறதில்லே. அந்த விஜயேந்திரனையும் எடுத்திட்டு, ஆடிட்டர் ஞான பிரசேந்திர சரஸ்வதியை பீடாதிபதியா நியமிச்சிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். எவ்வளவு பெரிய மடம். அது நொறுங்கிப் போயிடுத்து. அஸ்திவாரம் மட்டும்தான் இப்ப நின்னுண்டிருக்கு” என்றவர், ‘ஏணி... கோணி... பாணி...’ என்ற வார்த்தைகளை இரண்டுமுறை சொல்லிவிட்டு அதன்பிறகு தொடர்ந்து பேச ஆரம்பித்துள்ளார். “ஏணி.. இந்தியாவில் உள்ள டாட்டா, பிர்லா, அம்பானியிலிருந்து அத்தனை கோடீஸ்வரர்களும் என்னைத்தான் ஏணியா பயன்படுத்திண்டா. இப்ப அந்த ஏணி உடைஞ்சி  போயிடுத்து.

இந்தியா முழுக்க பிரிஞ்சு கிடந்த பிராமணாள் சமூகத்தை ஒன்றுசேர்ந்து ஒரு கோணியில் கட்டி வச்சுருந்தேன். அந்த கோணி கிழிஞ்சுடுத்து. போணியில் (பாத்திரம்) இருக்கிற தண்ணீரை எடுத்து தாகத்திலே இருக்கவாளுக்கு ஊத்துற மாதிரி தலித் பிள்ளைகள் படிக்கிறதுக்காக மடத்திலே இருக்கிற பணத்திலேயிருந்து நெறைய செய்தேன். அந்த போணியும் உடைஞ்சு போயிடுத்து. இனிமேல் என்ன பண்றதுன்னு நேக்கு தெரியல” என்றபடி ஜெயேந்திரர் மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ, அதனை அப்படியே பதிவுசெய்து கொண்டது விசாரணை முழுவதையும் படம்பிடித்த போலீஸ் வீடியோ. 

“இதற்கப்புறம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்? நேக்கு யார் மதிப்பு கொடுக்கப் போறா? நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன்”என ஜெயேந்திரர் சத்தம்போட்டு சொல்ல, போலீஸ் அதிகாரிகள் திடுக்கிட்டனர். காவித்துணியைஅரைஞாண் கயிறுபோல் இடுப்பில் கட்டியிக்கும் ஜெயேந்திரர், அதில் கோவணத்தைக் கட்டி, அந்தநீளமான துணியால் அப்படியே உடலில் சுற்றிக்கொள்கிறார். அந்த காவித்துணி மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டால், காவல்துறைக்கு பிரச்சனை.. அரசுக்கு பிரச்சனை.. இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த போலீஸ் உயரதிகாரிகள், அவரை சமாதானப்படுத்தும் விதத்தில் பேசினர்.

போலீஸ்அதிகாரிகளின் சமாதான வார்த்தைகளும், நம்பிக்கையூட்டும் விதத்தில் அவர்கள் வெளிப்படுத்திய பேச்சும் ஜெயேந்திரரின் அழுகையைக் கட்டுப்படுத்தச் செய்தன. சூழ்நிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்க, ஒரு கட்டத்தில் கலகலப்பு மனநிலைக்கே வந்துவிட்டார் ஜெயேந்திரர். ஆங்கில வார இதழ்கள் சிலவற்றை அவரிடம் போலீஸ் அதிகாரிகள் கொடுத்தனர். ‘வீக்’ பத்திரிகையில் தனது படத்தைப் பார்த்த ஜெயேந்திரர், ‘நன்னா போட்டிருக்கா’ என்றபடி பக்கங்களை புரட்ட ஆரம்பித்தார். உள்ளே இருந்த பக்கங்களிலும் ஜெயேந்திரரின் படங்கள் இடம்பெற்றிருக்க, “எல்லா பக்கங்களிலும் நன்னா படம் போட்டிருக்கா. பத்து நாளுக்கு முன்னாடி வீரப்பன் படத்தை இப்படி பக்கம்பக்கமா போட்டா. இப்ப என் படத்தை போட்டிருக்கா பாருங்கோ” என்று ஜெயேந்திரர் ‘ஜோக்’ அடித்துசிரிக்க, ஒருவாறாக அங்கே சகஜநிலைமை  திரும்பியது.

இதன்பின், மீண்டும் ஒருமுறை ஜெயேந்திரர் அழுகிற சூழ்நிலையை ஏற்படுத்தியது, அவரது ஒரு வேண்டுகோள். “முதல்வரம்மாகிட்டே நான் பேசணும். ஏற்பாடு செய்வேளா?” என போலீஸ் அதிகாரிகளிடம் ஜெயேந்திரர் கேட்க, அவரை பேசச்சொல்லி, வீடியோவில் பதிவு செய்தனர். ஜெயேந்திரர் பேசப்பேச வீடியோ ஓடத்தொடங்கியது. “சங்கரராமனை நான்தான் கொலை செய்தேன். பத்து நிமிஷம் புத்தி தடுமாறிடுத்து”என்றபடி அழுத ஜெயேந்திரர், “காமாட்சியம்மன் கோவிலில் அம்மனா இருக்கிறது நீங்கதான். நீதான் இப்ப நேக்கு காமாட்சியம்மன். உன்னை நான் வேண்டி கேட்டுக்கிறேன். என்னை மன்னிச்சு விட்டுடு. சாகும் வரைக்கும் மறக்கமாட்டேன்” என்று கதறி முடித்ததை வீடியோ அப்படியே பதிவுசெய்து கொண்டது. ஜெயேந்திரர் மன்னிப்பு கோரும் அந்த வீடியோ கேசட்டை ஜெ.விடம் ஒப்படைத்துள்ளது காவல்துறை.


காஞ்சிவரதராஜ பெருமாள் கோவிலில் வைத்தே, கோவில் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டது குறித்து, நக்கீரன் ஒரு மாமாங்கத்திற்கு முன்னரே புலனாய்வு நடத்தி குற்றவாளிகளை அம்பலப்படுத்தியது. நக்கீரன் வெளியிட்ட செய்திகளுக்கு மற்றுமொரு சாட்சியாக அமைந்திருக்கிறது ஆங்கில காட்சி ஊடகமொன்றில் ஜெயேந்திரரின் வாக்குமூலம் அடங்கிய காட்சிப்படம்.

தொகுப்புச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்