கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வடகிழக்கு பருவ மழையினை புதுச்சேரி மாநிலத்தில் எதிர்கொள்வது குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலர் அஸ்வினி குமார் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் செயலர்கள், காவல் துறை உயரதிகாரிகள், இந்திய கடலோரக்காவல்படையினர்கூட்டத்தில் பங்கேற்றனர்.
வடகிழக்கு பருவமழையில் கனமழை பொழியும்போது தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் எவையெவையென்று கண்டெறிதல், அப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுதல், கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அவற்றை உடனுக்குடன் எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை கண்காணித்தல் போன்றவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலத்தில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. காரைக்கால் பகுதியில் வர இருந்தது அதுவும் மாநில அரசின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. தமிழக பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக அந்த மாநில அரசு பார்த்துகொள்ளும்" என்றார்.