திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு சுஜித்தின் பெரியப்பா அதாவது சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கிய ராஜின் அண்ணன் ஜான் பீட்டர் மிலிட்டரியில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது சுஜித்தின் வீட்டருகே உள்ள கிணற்றுக்குள் வீட்டில் வளர்த்த கோழி விழுந்துள்ளது. அந்த கோழியை மீட்பதற்கு கயிறு மூலம் 60 அடி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அப்போது கயிறு திடீரென்று அறுந்து விழுந்ததில் சுஜித்தின் பெரியப்பா ஜான் பீட்டர் கிணற்றுக்குள் விழுந்து இறந்துள்ளார். இதனையடுத்து அந்த கிணற்றை இரும்பு வேலி போட்டு மூடியுள்ளனர். அந்த கிணற்றின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தான் சுஜித் தற்போது தவறி விழுந்து இறந்துள்ளான் என்பது குறிப்படத்தக்கது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள தண்ணீர் வராத ஆழ்துளை கிணறுகளை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூடி வருகின்றனர்.