திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராக பணியாற்றும் மருத்துவர் இனிகோராஜ் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் கையாளுகிறார் என்ற குற்றச்சாட்டை அதே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் நிர்மலா, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவாக அளித்துள்ளார்.
அந்த மனுவில், "இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நான் காது, மூக்கு, தொண்டை மருத்துவராகப் பணியாற்றி வருகிறேன். என் போன்ற பெண் ஊழியர்கள் அலுவல் நிமித்தமாக ஆலோசனைகள் செய்வதற்கு மருத்துவர் இனிகோராஜின் அறைக்கு சென்றால் இரட்டை அர்த்தங்களுடன் பேசுவதோடு, கண்காணிப்புக் கேமராக்களை தவறாகவும் பயன்படுத்தி வருகிறார்'' என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுபோன்ற பிரச்சனை ஏற்கெனவே ஏற்பட்டதால், புகாரின் அடிப்படையில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி கடந்த 2023ல் ஜூலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, மருத்துவர் சித்ரா நியமிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்ட இனிகோராஜ், மீண்டும் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின் தன்மீது புகாரளித்த ஊழியர்களைப் பழிவாங்குவதாக புகாரளிக்கப்பட்டது. இந்த புகார்க் கடிதம் தொடர்பாக சமூக நலத்துறை அலுவலகத்தில் மருத்துவர் நிர்மலாவிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவர் நிர்மலாவிடம் கேட்டபோது, "நான் புகாரளித்தது உண்மை. தற்போது விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பிறகு பேசுகிறேன்'' என்றார். இனிகோராஜை சந்தித்துக் கேட்டபோது, "கடந்த 2022ல் இம்மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு இம்மருத்துவமனையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. நான் வந்த பிறகுதான் நோயாளிகளுக்கான சேவை, அறுவைச்சிகிச்சை, ஊழியர்களின் பணி என அனைத்தையும் மேம்படுத்தினேன். அந்த மருத்துவர் நிர்மலா, என்னைவிட பெரியவர், ஆனால் மருத்துவப்பணியில் என்னைவிட இளையவராக இருக்கிறார். நான் பொறுப்பேற்றவுடன் மருத்துவமனையின் தரத்தை உயர்த்தினேன். அதே போல மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களை வாங்கி, சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகளின் அறுவைச் சிகிச்சையை இந்த மருத்துவமனையிலேயே செய்யுமளவிற்கு மருத்துவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். ஆனால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரான நிர்மலா, இதுவரை ஒரு அறுவைச்சிகிச்சைகூட செய்ததில்லை.
இந்த மருத்துவமனையுடன் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. எனவே அறுவைச் சிகிச்சைக்கு நாங்கள் அங்கு நோயாளிகளை அனுப்பி வைப்போம். அதற்கு இ.எஸ்.ஐ. மூலம் பணம் செலுத்தப்படும். அந்த நிலையை மாற்றி, அனைத்து அறுவைச் சிகிச்சையும் இங்கேயே செய்யும்படி இந்த மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இவருடைய காது, மூக்கு, தொண்டை பிரிவு மட்டும் 6 வருட காலமாக ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்ததில்லை. அனைத்தும் தனலட்சமி சீனிவாசன் மருத்துவமனைக்கு தான் அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் செலவு அதிகரிப்பதால், என்னுடைய மேலதிகாரிகளும் என்னிடம் கேள்வி எழுப்பும்போது, கண்காணிப்பாளர் என்ற முறையில் நான் அவரிடம் கேள்வி எழுப்ப வேண்டியது என்னுடைய கடமை'' என்றார்.
அதேபோல், கண்காணிப்பு கேமரா பொருத்தி தவறாகப் பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து பதிலளிக்கையில், "கடந்த 5 வருடங்களாக இந்த கேமராக்கள் செயல்படவில்லை. நான் வந்த பிறகு நீண்ட முயற்சிக்கு பிறகு சரிசெய்தேன். கடந்த 5 மாதத்திற்கு முன்பு தான் இந்த கேமராக்களை பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளேன். இங்குள்ள எந்த கேமராவும் சந்தேகத்திற்கு உரியதாக இருந்தால் தாராளமாக என்மீது நடவடிக்கை எடுக்கலாம். கடந்த 5 மாத வீடியோப் பதிவும் உள்ளது. அதிலும் பரிசோதித்துப் பார்க்கலாம். அதேபோல், வருகைப்பதிவும் இல்லாமலிருந்தது. நான் வந்த பிறகு பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தி, வருகைப் பதிவேட்டை மாதம் தவறாமல் என்னுடைய உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறேன். ஒவ்வொரு மாதமும் மருத்துவமனையில் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள், மருத்துவர்களின் பங்களிப்பு என அனைத்துத் தரவுகளும் அனுப்பி வைக்கப்படுகிறது. எனவே என்னால் அவர்களுடைய சுதந்திரம், வருமானம் பறிபோனதால் என் மீது இப்படிப்பட்ட புகாரைக் கூறுகின்றனர். என்னிடம் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயாராக உள்ளேன். மருத்துவமனையில் பணியாற்றும் எந்த ஊழியரிடமும் தனிப்பட்ட முறையில் கூட விசாரணை நடத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் விசாரித்தபோது, "முன்பெல்லாம் இங்குவரும் நோயாளிகளை அறுவைச் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தால், மருத்துவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் இங்கேயே செய்யும் அளவிற்கு தரம் உயர்ந்துள்ளது. ஆனால் காது, மூக்கு, தொண்டை பிரிவு மட்டும் இதுவரை ஒரு அறுவைச் சிகிச்சையும் செய்யவில்லை. அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று கிசுகிசுத்தனர். விவகாரம் என்னவென்று புரிந்துகொள்ள முடிந்தது.