பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு அனைத்துக் கட்சி ஏரியாக்களிலும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் விருப்ப மனு வாங்கும் தேதி முடிந்த பின்னும் விறுவிறுப்புக்கு பஞ்ச மில்லை.
திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியதுதான் திண்டுக்கல் எம்.பி.தொகுதி. இத்தொகுதியைப் பொறுத்த வரை கவுண்டர்கள் ஓட்டு மெஜாரிட்டியாகவும் அதற் கடுத்ததாக முக்குலத்தோர், தலித்துகள், பிள்ளைமார், வன்னியர், செட்டியார், நாயக்கர், ஆசாரி, நாடார் என்ற வரிசைப்படி ஓட்டுக்கள் இருக்கின்றன. கிறிஸ்தவ, இஸ்லாமிய ஓட்டுக்களும் கணிசமாக இருக்கின்றன.
தொகுதியின் தற்போதைய ஆளும் கட்சி எம்.பி.யான உதயகுமார், கடந்த ஐந்தாண்டுகளில் ஏதோ போனாப் போகுது என்ற நினைப்புடன் ஓரிரு முறை மட்டுமே தொகுதிப் பக்கம் எட்டிப் பார்த்துள்ளார். ஆளே வராத போது, திட்டங்கள் மட்டும் தொகுதிக்கு வந்துவிடவா போகிறது. ஜெ.மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தினகரன் பக்கம் ஒதுங்கியிருந்துவிட்டு, சில மாதங்களிலேயே எடப்பாடி பக்கம் தாவியவர். கட்சியின் தலைமைக் கழகத்தில் விருப்ப மனு கொடுத்துவிட்டு, எடப்பாடியே கதி என சென்னையிலேயே டேரா போட்டுள்ளார் உதயகுமார். ஆனாலும் இவருக்கு சீட் கொடுக்க இ.பி.எஸ்.சுக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் விருப்பமில்லை.
உளவுத்துறை கொடுத்திருந்த ரிசல்டைப் பார்த்துவிட்டு, ""நீங்களே இந்தத் தொகுதியில் நில்லுங்கண்ணே''’என மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் எடப்பாடி சொல்லியிருக்கிறார்.
""நமக்கு ஸ்டேட் பாலிடிக்ஸ் தாண்ணே சரிப்பட்டு வரும். அதனால் என்னோட மச்சினன் கண்ணனுக்கு சீட் கொடுத்தா நல்லாயிருக்கும்ணே''’என நைசாக நழுவி விட்டார் விச்சு. மச்சான் மனசறிந்த கண்ண னும் விருப்ப மனு போட்டிருக்கிறார்.
""கட்சியில ரொம்பகாலம் இருக்கேன், உங்களோட விசுவாசியா இருக்கேன். அதனால எனக்கு ரெகமெண்டேஷன் பண்ணுங்கண்ணே'' என அமைச்சர் திண்டுக்கல் சீனியிடம் கொக்கியைப் போட்டிருக்கிறார் மா.செ.வும் மாஜி மேயருமான மருதராஜ். இவர்கள் தவிர, ஒட்டன்சத்திரம் பாலசுப்பிரமணியம், பிரேம்குமார் ஆகியோர் உட்பட 30 பேர் சீட்டுக்காக மல்லுக்கட்டிக்கொண்டிருக் கிறார்கள்.
"எப்படியும் இந்தத் தொகுதியை நம்ம கட்சி வாங்கிப்புடும், நாமளும் சீட்டை வாங்கிப் புடணும்' என்ற கணக்குடன் இருக்கிறார்கள். பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவருமான மத்திய அரசு வக்கீல் திருமலை பாலாஜி. "நாங்க மட்டும் என்ன சும்மாவா' என களத்தில் குதித்துள்ளார், இப்போது பா.ஜ.க.வில் ஐக்கியமாகியிருக்கும் மாஜி எம்.பி.யும் த.மா.கா. புள்ளியுமான கார்வேந்தன். கிடைக்கிற ஒன்றிரண்டு தொகுதிகளில் திண்டுக்கல் கிடைச்சா நிற்கலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார் த.மா.கா.வின் துணைத் தலைவரான ஞானதேசிகன்.
எதிர்க்கட்சியான தி.மு.க.வில் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், கட்சியின் து.பொ.செ.வான ஐ.பெரியசாமியின் விசுவாசியுமான காந்திராஜன், காய் நகர்த்தி வருகிறார். கட்சி அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்திருக்கும் காந்திராஜனுக்கு கொறடா சக்கரபாணி, மா.செ. ஐ.பி.செந்தில்குமார் ஆகியோரின் ஆதரவும் இருக்கிறது.
காந்திராஜனுக்கு அடுத்தபடியாக அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார் சந்திரசேகரன். கல்லூரி மாணவப் பருவத்திலேயே தி.மு.க.வில் இணைந்து கட்சிப் பணிகளில் ஆக்டிவாக இருப்பவர். ஒன்றியத் தலைவர், அகரம் பேரூர் கழக செயலாளர், திண்டுக்கல் ஒ.செ., அதன் பின் ஒன்றியப் பெருந்தலைவர் என படிப்படியாக கட்சியில் முன்னுக்கு வந்தவர். 89-ஆம் ஆண்டிலிருந்து எம்.பி., எம்.எல்.ஏ. சீட் கேட்டுவரும் சந்திரசேகரன், ஐ.பி.யின் அதிதீவிர விசுவாசி. மா.செ. ஐ.பி.செந்தில்குமாரின் தீவிர ஆதரவாளர். தனக்கிருக்கும் பல ப்ளஸ் பாயிண்டுகள், தனக்கான சீட்டை உறுதிப்படுத்திவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சந்திரசேகரன்.
இதற்கடுத்ததாக 2011 சட்டமன்றத் தேர்தலில், நத்தம் விஸ்வநாதனிடம் வெற்றியைப் பறிகொடுத்த சாணார்பட்டி விஜயனும் பழனி நகராட்சியின் முன்னாள் சேர்மன் வேலுமணியும் சீட் ரேஸில் குதித்துள்ளனர். ஐ.பி.யின் ஆசி பெற்ற ஒருவருக்கே சீட் நிச்சயம் என்பதுதான் தி.மு.க. ஏரியா நிலவரம்.
கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு, திண்டுக்கல் ஒதுக்கப்பட்டால், ப.சி.யின் மகன் கார்த்தி சிதம்பரம் களம் இறங்கலாம் என்ற பேச்சு கதர்ச்சட்டை ஏரியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதே போல் மாவட்ட இளைஞர் காங் கிரஸ் தலைவர் மணிகண்டனும் இன்னும் சில கதர்ச்சட்டைகளும் சீட்டு கேட்டுத் தான் பார்ப்போமே என்ற மனநிலையில் இருக் கிறார்கள்.
தினகரனின் அ.ம.மு.க.வைப் பொறுத்தவரை திண்டுக்கல் மாநகரச் செய லாளர் ராமுத்தேவர்தான் சீட் பந்தயத்தில் முன்னணியில் இருக்கிறார். இவருக்கு அடுத்து மாஜி எம்.பி. குமாரசாமி, கிழக்கு மாவட்ட பொருளா ளர் வைகை பாலன், வத்தல குண்டு தெற்கு ஒ.செ. கோவிந்தராஜ், நிலக்கோட்டை தெற்கு ஒ.செ. ராஜேந்திரன் ஆகியோரும் தினகரனை முற்றுகையிட்டு வருகிறார்கள்.
Published on 23/02/2019 | Edited on 04/03/2019