Skip to main content

ஆசிய, இந்திய சாதனைகளை படைத்த திமுக, அமமுக... கம்ப அரசியல்!!! 

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

ஒரு கட்சியின் முக்கியமான அடையாளம் அதன் கொடி. அனைத்து கட்சிகளும் தனது கொடியை வடிவமைப்பது முதல்கொண்டு அனைத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.

 

dmk ammk flag


 

உள்ளூரில் ஒரு இடத்தில், ஒரு கட்சியின் கொடி ஏற்றப்பட்டால் அதற்கடுத்தடுத்து, அடுத்தடுத்த கட்சிகளின் கொடிகளும் அந்த இடத்தில் ஏற்றப்படும். இதில் முக்கியமாக  கவனிக்கப்படவேண்டியது அந்தக் கட்சிக்கொடி ஏற்றப்பட்டுள்ள கம்பம்தான். அந்தக் கொடிக்கம்பம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்திலிருக்கும். இந்தக் கொடிக்கம்பத்தின் உயரத்தை அவர்கள் தன்மானப் பிரச்சனை போல் கருதுவர். இது இன்னும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும், அமமுகவும் தங்களது கொடிக்கம்பத்தின் மூலம் இந்திய, ஆசிய சாதனைகளைப் படைத்துள்ளன.

 

கடந்த 12.12.2018 அன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் கொடியான இருவண்ணக்கொடியை ஏற்றினார். இரும்பினாலான இந்தக் கொடிக்கம்பம் 2430 கிலோ எடை கொண்டது. 114 அடி உயரக் கொடிக்கம்பமான இது, கோட்டை கொத்தளத்தில் உள்ள தேசியக் கொடிக் கம்பத்தைவிட உயரமானது. இந்தியாவிலேயே அரசியல் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரமான கொடிக் கம்பம் திமுகவினுடையது என்ற பெருமையை இதன்மூலம் அது பெற்றது.

 

கடந்த மார்ச் 04ம் தேதி (04.03.2019) விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவிலில் அமமுக கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன், 123 அடி உயரக் கொடிக்கம்பத்தில், 20 அடி நீளம், 30 அடி உயரம்கொண்ட கொடியை ஏற்றினார். இதுதான் ஆசியாவிலேயே மிக உயரமான கொடிக்கம்பம் ஆகும். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல காட்சிகள், போட்டிகள் நமக்குக் காத்திருக்கின்றன.