அ.தி.மு.க.வில் நுழைய முடியாமல் தவிக்கும் சசிகலாவிடம் நம்பிக்கையான பேரத்தைத் துவக்கியிருக்கிறது பா.ஜ.க. இதற்காக கடந்த வாரம் சசிகலாவை ரகசியமாகச் சந்தித்திருக்கிறார் நடிகை விஜயசாந்தி.
டெல்லியின் ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க.வுக்குள் மீண்டும் நுழைய முடியாது என உணர்ந்த சசிகலா, டெல்லியின் ஆதரவுக்காக தவமிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு நட்பின் அடிப்படையில் அவரை சந்தித்த நடிகை விஜயசாந்தியிடம் பா.ஜ.க. தலைமையை பற்றிய தனது மனக் குமுறல்களைக் கொட்டியிருந்த சசி, ’அமித்ஷாவை சந்திக்க வேண்டும்’ என்பதை வலியுறுத்தியிருந்தார்.
அப்போது, "நம்பிக்கையுடன் இருங்கள். அமித்ஷாஜியிடம் நான் பேசுகிறேன். நல்லது நடக்கும்'' என்பதை மட்டும் சொல்லிவிட்டு டெல்லிக்குப் பறந்தார் விஜயசாந்தி. ஆனால், அவரிடமிருந்து பாசிட்டிவான எந்த பதிலும் சசிகலாவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த வாரம் சென்னையில் சசிகலாவை சந்தித்துள்ளார் விஜயசாந்தி.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா தரப்பு, ”டெல்லியை தொடர்பு கொள்ள சின்னம்மாவுக்கு இருந்த சோர்ஸ்களெல்லாம் அவருக்கு உதவ முடியாமல் இருக்கின்றன. இந்த நிலையில்தான் சசிகலாவுக்கு உதவ முன்வந்தார் விஜயசாந்தி. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து, "உங்களை சந்திக்க அவர் (சசிகலா) 20 நிமிடம் நேரம் கேட்கிறார். எடப்பாடி பழனிச்சாமி பற்றி நிறைய விசயங்களை பகிர்ந்துகொள்ள நினைக்கிறார். அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கள்'’ என கேட்டுள்ளார் விஜயசாந்தி.
ஆனால், அமித்ஷாவோ, "என்னிடம் சொல்ல நினைப்பதை உங்கள் (விஜயசாந்தி) மூலமாகவே அவர் (சசிகலா) சொல்லட்டுமே! எதற்கு சந்திப்பெல்லாம்? தேவையற்ற செய்திகள் பரவும்' என சொல்லி அப்பாயிண்ட் மெண்ட் கொடுப்பதை தவிர்த்தார். இதனால் அப்செட்டானார் சின்னம்மா. மேலும், டெல்லிக்கு செல்ல முடியும்கிறதையே மறந்துபோனார்.
இருப்பினும் சின்னம்மாவின் தொடர்பில் இருந்து வரும் விஜயசாந்தி, அவருக்காக பா.ஜ.க. தலைமையிடம் முயற்சிகளை எடுத்தபடி இருந்தார். இந்த நிலையில்தான், ஒரு வாரத்திற்கு முன்பு சின்னம்மாவை மீண்டும் சந்திக்க வந்தார் விஜயசாந்தி. அந்த சந்திப்பில், சசிகலாவுக்கு உதவ பா.ஜ.க. பாசிட்டிவ் சிக்னல் தந்திருப்பதாக கூறிய விஜயசாந்தி, பா.ஜ.க.வின் சில எதிர்பார்ப்புகளை தெரிவித்திருக்கிறார். அதற்கு சின்னம்மாவோ, ’எல்லாம்தான் முடக்கப்பட்டு கிடக்கிறதே. நான் எப்படி எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும்?'' என சொல்லிவிட்டார்.
ஆனால், விஜயசாந்தியோ, "நீங்க நினைப்பது நடக்க வேண்டுமானால் டெல்லியின் எதிர்பார்ப்புகளுக்கு ஓ.கே. சொன்னால் மட்டுமே சாத்தியமாகும். அதனால் இதில் நீங்கள்தான் இனி முடிவெடுக்க வேண்டும்' என சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். கடந்த சில நாட்களாக இதைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா''’என்று சந்திப்பில் நடந்ததை விவரிக்கின்றனர்.