இந்திய பாக் எல்லையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்துவந்த தொடர் தாக்குதலில்போது பாக் எல்லையில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் கைது செய்யப்பட்டார். விமானத்திலிருந்து பாராசூட்டை உபயோகப்படுத்தி கீழே விழுந்தவரை, பாகிஸ்தான் கிராம மக்கள் அவரை பிடித்து தாக்கியபோது பாக் ராணுவம் அங்கிருந்த அவரை மீட்டு கைது செய்து கூட்டி சென்றது. அது சம்மந்தமாக பின்னர், பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக பாக் நாடாளுமன்றத்தில் பாக் பிரதமர் இம்ரான் கான், நல்லிணக்க அடிப்படையில் அபிநந்தனை மார்ச் 1 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறோம் என்று பேசியிருந்தார். இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு பாராட்டுக்களை தெரிவித்தது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட அபிநந்தன் இந்திய-பாக் எல்லையான வாகாவில் விடுவிக்கப்படுவார் என்று பாக் அரசால் தெரிவிக்கப்பட்டது.
1947ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது இருநாட்டுக்கும் பொதுவான எல்லையை வகுக்க முக்கிய பங்காற்றியவர் இங்கிலாந்தை சேர்ந்த வழக்கறிஞர் சிரில் ராட்கிளிஃப். அதன் நினைவாகவே அந்த எல்லை கோடின் பெயர் ராட்கிளிஃப் கோடு என்று அழைக்கப்படுகிறது. ராட்கிளிஃப் பிரித்தபோது மேற்கு வாகா பாகிஸ்தானுக்கும், கிழக்கு வாகா இந்தியாவுக்கும் என பிரிக்கப்பட்டது. மேலும் இந்த எல்லையை அட்டாரி எல்லை என்று குறிப்பிடுகின்றனர். இந்திய பாஞ்சாம் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸிலிருந்து இந்த எல்லை 32 கிமீ தொலைவில் உள்ளது. அதேபோல பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் லாகூரிலிருந்து 24 கிமீ தொலைவில் உள்ளது இந்த வாகா எல்லை பகுதி. தினசரி மாலை சூரிய அஸ்தமனமாவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு வாகா எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் அணிவகுப்பு நடத்தி, இரு நாட்டு தேசிய கொடிகளையும் இறக்குவார்கள். அதை காண இரு நாட்டு மக்களும், சுற்றுலா பயணிகளும் அந்த இடத்தில் கூடுவார்கள். சுமார் 45 நிமிடங்கள் நடக்ககூடிய இரு நாடுகளின் அணிவகுப்பு மற்றும் கொடி ஏற்றம் நிகழ்வு 1959ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. இரு நாட்டுக்கும் இடையே எதாவது ஒரு பதட்டமான சூழ்நிலையோ, தாக்குதல்களோ நடைபெற்றால் இந்த அணிவகுப்பு நடைபெறாது.
அமிர்தசரஸிலிருந்து லாகூருக்கு ஒரு முறை பேருந்து போக்குவரத்தும் நடத்தப்பட்டது. பின்னர், இந்திய நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலினால் இந்த சேவையை முடித்துகொண்டது இந்திய அரசாங்கம். மேலும் இது பதட்டமான சூழலை கொண்ட இடம் என்பதால் இங்கு ஜாம்மர் பயன்படுத்தி, மொபைல் போன்களுக்கு டவர் கிடைக்காமல் செய்கின்றனர். இந்த பகுதி இரு நாடுகளுக்கு இடையேயான பொருட்கள் பரிமாற்றத்திற்கும், இரு நாடுகளுக்கு இடைப்பட்ட ரயில் சேவைக்கும் பயன்படுகிறது. பொருட்களை பாகிஸ்தானுக்கு இந்த எல்லை பகுதியிலுள்ள கிராண்ட் ட்ரங்க் சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. மாலை ஆறு மணிக்கு மேல் எந்தவித சரக்கு வண்டிகளும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டு பாக் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட லியுடெனண்ட் திலிப் பருல்கர், அவருடன் இரண்டு வீரர்கள் வாகா எல்லை வழியாகதான் விடுவிக்கப்பட்டார்கள். பல ராணுவ வீரர்கள் இவ்வழிதான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். கார்கில் போரின்போது கைது செய்யப்பட்ட நச்சிகெட்டாவும் வாகா எல்லையில்தான் விடுவிக்கப்பட்டார். தற்போது அபிநந்தனும் இவ்வழியாகதான் விடுவிக்கப்பட இருக்கிறார்.
ராவல்பிண்டியிலிருந்து லாகூருக்கு விமானம் மூலம் கொண்டுவரப்படும் அபிநந்தன், லாகூரிலிருந்து சாலை வழியாக 24 கிமீ தொலைவிலுள்ள வாகா எல்லைக்கு கொண்டுவரப்படுவார். பின்னர் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.