நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, யார் யாருக்கு சீட் என அரசியல் கட்சிகள் பிஸியாக இருக்கின்றன. இதில் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி, மற்ற தொகுதிகளையெல்லாம்விட மாறுபட்டது.
இங்குள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க., காங்கிரஸிடம் தலா மூன்று தொகுதிகள் உள்ளன. இந்தமுறை தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சேர்ந்திருக்கும் நிலையில், யார் போட்டியிட்டாலும் வெற்றி என்பதால், எப்படியாவது சீட் கேட்டு போட்டியிடவேண்டும் என முக்கிய தலைகள் பலரும் முட்டிமோதுகின்றன.
2014ஆம் ஆண்டு எம்.பி. தேர்தலில் ஐந்துமுனை போட்டி என்பதால், பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்று, மத்திய இணை அமைச்சர் ஆனார். அப்போது காங்கிரஸ் இரண்டாம் இடம் பெற்றது. தி.மு.க. நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது. 1969 இடைத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றதிலிருந்து 1998 வரை தொடர்ந்து ஒன்பதுமுறை கன்னியாகுமரி காங்கிரசின் கைவசமே இருந்தது. 1999-ல் தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க. அதைக் கைப்பற்றியதை அடுத்து, காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தபோதும் தி.மு.க. இந்தத் தொகுதியை அக்கட்சிக்கு விட்டுத்தரவில்லை.
இருந்தாலும், சென்ற தேர்தலில் கன்னியாகுமரியில் இரண்டாம் இடம்பிடித்த காங்கிரஸின் வசந்தகுமாரே மீண்டும் போட்டியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஒருபுறம் ஆனந்தத்தில் இருக்க, எம்.எல்.ஏ.க்கள். பிரின்ஸ், விஜயதாரணி, ராஜ்குமார் ஆகியோரும் இந்தத் தொகுதிமீது ஆசை காட்டுகின்றனர். ஆனால், எம்.எல்.ஏ.க்களுக்கு எம்.பி. சீட் கிடையாது என்ற ராகுல்காந்தியின் முடிவால் இவர்களின் எண்ணம் கேள்விக்குறிதான்.
அதேசமயம், காங்கிரஸ் அகில இந்திய செயலாளரும், கோவா மாநில பொறுப்பாளருமான டாக்டர் செல்வகுமார், மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரும் கன்னியாகுமரி மீது கண்ணாக இருக்கிறார். இதற்காக செல்வகுமாரின் ஆதரவாளர்கள் களப்பணியில் குதித்திருப்பது வசந்தகுமாருக்கு மேலும் எரிச்சலூட்டியிருக்கிறது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், சென்னை ரூபி பில்டர்ஸ் அதிபருமான ரூபி மனோகரன், யார் தலைமையில் காங்கிரஸ் நிகழ்ச்சி நடந்தாலும் தனது பங்களிப்பை வெயிட்டாக செய்கிறார். இப்படி காங்கிரசின் எல்லா கோஷ்டி தலைவர்களுட னும் நெருக்கமாக இருப்பதன் மூலம், அவரும் இதே நோக்கத் தில் ஒவ்வொரு தலைவராக சந்தித்து வருகிறார்.
""இவங்களெல்லாம் சொந்த ஊரை விட்டுட்டு வெளியூர்ல தொழில் தொடங்கி செட்டில் ஆனவங்க. லோக்கலில் இருந்துக் கிட்டு நாங்கதானே கட்சியை வளர்க்கிறோம். போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ மக்களோடு நிற் கிறோம். உள்ளூர் பிரச்சனை களைத் தெரிஞ்சவங்களுக்குதான் சீட்''’என்று இவர்களுக்கு எதி ராக மல்லுக்கட்டும் உள்ளூர் காங்கிரசார் மத்தியில், கிழக்கு மா.த. வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தொடர்ந்து ஆறுமுறை எம்.பி.யாக இருந்த டென்னிஸ் மகனும், சி.எஸ்.ஐ. பேராய துணைத்தலைவருமான டாக்டர் தம்பி விஜயகுமார், இளங்கோ வன் ஆதரவாளர் அசோக் சால மன், தங்கபாலு ஆதரவாளர் ராபர்ட் ப்ரூஸ், ஏ.ஐ.சி.சி. உறுப் பினர் ஜெயகுமார் ஆகியோர் முட்டி மோதுகின்றனர். ஒரு வேளை காங்கிரசுக்குதான் கன்னியாகுமரி என்றால் இவர் களில் இருவரின் பெயர்தான் டெல்லிக்கு பரிந்துரைக்கப்படும் என்கின்றனர் காங்கிரசார்.
தி.மு.க.விலோ பிரச்சனை வேறுமாதிரி இருக்கிறது. 2009-ல் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க.வின் ஹெலன் டேவிட்சன் வெற்றிபெற்றார். இப்போதும் அதே கூட்டணிதான் என்பதால், தி.மு.க.வில் போட்டி அதிகரித்துள்ளது. கடந்தமுறை தனித்துப் போட்டியிட்டபோது ஆர்வம் காட்டாத பலரும்கூட, "இம்முறை செலவையெல்லாம் நாங்களே பார்த்துக்கிறோம்' என்று மா.செ.க்களை மொய்க்கின்றனர்.
இதில் கிழக்கு மா.செ. சுரேஷ்ராஜன் மாஜி மந்திரி கு.லாரன்சுக்கும், பொருளாளர் கேட்சனுக்கும் வாக்கு கொடுத்திருக்கிறார். இதேபோல், மேற்கு மா.செ. மனோ தங்கராஜ் மகளிரணி செயலாளர் கிளாடிஸ் லில்லியை செலக்ட் செய்து வைத்திருக்கிறார். இவர்கள் மூவருமே அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்கள் என்பதால், சீனியர்கள் முணுமுணுக்கின்றனர். அதேசமயம், மூன்றுபேரில் கேட்சன் சீனியர் என்பதாலும், கட்சி நிகழ்ச்சிகளுக்கு செலவுசெய்வதில் கையை சுருக்கிக்கொள்ள மாட்டார் என்பதாலும், அவரையே ஏற்றுக்கொள்ளும் மனநிலை யில் பலர் இருக்கின்றனர். இருந்தாலும், இவர்களோடு சேர்த்து சீட் கேட்டு மல்லுக்கட்ட ஒரு பட்டாளமே காத்திருக்கிறதாம்.
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை… 2004ல் தி.மு.க. கூட்டணியில் நின்று, முதன்முறையாக பெல்லார்மினை எம்.பி. ஆக்கியது. அக்கட்சியில் யாரும் சீட் கேட்டு முண்டியடிப்பதில்லை. கட்சித் தலைமை கைக்காட்டும் நபரே வேட்பாளர். அதன் படி, கம்யூனிஸ்ட் கட்சிக்குதான் கன்னியா குமரி என்றால், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ்தான் வேட்பாளராம். ஆனால், இதற்கும் தோழர்கள் சிலர் எதிர்ப்பு காட்டுகிறார்கள். 2014 எம்.பி. தேர்தலில் களமிறங்கிய பெல்லார்மினும், 2016 சட்டசபைத் தேர்தலில் களமிறங்கிய லீமாரோஸும் டெபாசிட் இழந்தார்கள் என்பதால், புதிதாக ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதே தோழர்களின் எதிர்ப்புக்குக் காரணமாம்.
கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் ஆரம்பநிலை இப்படியென்றால்… அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்தான் வேட்பாளராம். அவரைத் தவிர வேறு யாரையும் பா.ஜ.க. மேலிடம் விரும்பவில்லை என்பதால் வலுவான தி.மு.க. கூட்டணியின் வேட்பாளரை வீழ்த்துவதற்கான சக்கர வியூகங்களை வகுத்திருக்கிறார் பொன்னார்.
Published on 23/02/2019 | Edited on 04/03/2019