‘இன்று நானும் ஓரத்தில்... என் மனது தூரத்தில்...’ என்று சோக மியூசிக் வாசித்து கொண்டிருக்கிறது 2024. ஆம், மனிதர்களுக்கு இறப்பு காலம் தெரியாது. ஆனால் அவர்களின் இறப்பை கணக்கிடும் ஆண்டுகளுக்கு இறப்பு காலம் தெரியும். அப்படி 2024ஆம் ஆண்டு கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. அது விடைபெற இன்னும் ஒரே நாள் உள்ள நிலையில் 2024 ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த முக்கிய சினிமா நிகழ்வுகளை கொஞ்சம் திரும்பி பார்ப்போம்...
ஜனவரி;
சர்ச்சையான ‘சங்கி’ - தனது அப்பாவை வைத்து லால் சலாம் எனும் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பட வெளியீட்டின் போது நடந்த இசை வெளியீட்டு விழாவில், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. இன்னைக்கு நான் தெளிவா சொல்றேன். அவர் சங்கி கிடையாது” என பேசினார். இது பேசு பொருளாக மாற சர்ச்சை எழுந்தது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள். இது அவருடைய பார்வை” என விளக்கமளித்தார். இந்த நிகழ்வு படத்துக்கு ஒரு பப்ளிசிட்டியாக அமைந்தாலும் படம் சரியாக போகாததால் எந்த பயணும் இல்லாமல் போய்விட்டது.
பிப்ரவரி;
திரைத்துறையில் இருந்து இன்னொரு அரசியல் எண்ட்ரி - ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற நிலையில் பல வருஷங்களாக அரசியல் ஆசையை அடக்கி வைத்த விஜய், அதற்கான ஆயத்தப் பணிகளை முன்பே தொடங்கியிருந்தாலும் பிப்ரவரியில் அதிகாரப்பூர்வமாக கட்சியின் பெயரை அறிவித்தார். கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என நாட்டை ஆண்ட எல்லோரும் திரைத்துறையில் இருந்து வந்து சாதித்திருக்கும் நிலையில், அந்த வரிசையில் விஜய் வந்திருக்கும் நிலையில் சினிமாவை விட்டும் விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார். அதாவது முழு நேர அரசியலுக்கு முன் கடைசியாக ஒரு படம் நடித்துவிட்டு வருவதாக கூறியிருக்கிறார். அந்த படம் தற்போது உருவாகி வருகிறது. அதை வினோத் இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு அக்டோபரில் அது வெளியாகவிருக்கிறது.
நடிகை கொடுத்த ஷாக் - சினிமாக்காரர்கள் பொதுவாக அதிகம் புகழ் விரும்புவார்கள். மக்களைச் சென்றடைய எந்த அளவிற்கும் போவார்கள். அப்படி ஒரு எக்ஸ்ட்ரீம் அளவிற்கு ஒரு நடிகை சென்றுள்ளார். அவர்தான் பிரபல பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே. அவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதையறிந்த பலர், அவருக்கு இரங்கல் தெரிவிக்க, அவர்களுக்கு பேரதிர்ச்சியாக அடுத்த நாள் வெளிவந்த செய்தி, பூணம் பாண்டே உயிரோடுதான் இருக்கிறார். அப்புறம் ஏன் இந்த நாடகம் என கேட்டால், கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாடகம் எனக் கூறியுள்ளார். இது தெரிந்த ரசிகர்கள், இதன் மூலம் பூனம் பாண்டே தங்களை இரண்டாவது முறையாக நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக ஆதங்கப்பட்டனர். இதற்கு முன் இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என பரபரப்பை கிளப்பினார். ஆனால் இந்தியா வென்றும் அவர் செய்யவில்லை. அவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை அவர் செய்யவில்லை.
தெறிக்கவிட்ட சேட்டன்ஸ் - ‘மனிதர் உணர்ந்து கொல்ல இது மனித காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது’ என்று காதலின் அன்பை நட்புக்கு போட்டு அனைவரையும் கலங்கடித்து விட்டனர் சேட்டன் பாய்ஸ். முதலில் இப்படம், தமிழக ரசிகர்களுக்கு பிடித்துப் போன காரணம், கமலின் குணா படத்துக்கு கொடுக்கும் ட்ரிபியூட் என படக்குழு சார்பில் சொல்லப்பட்டது தான். இதன் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்த அந்தப் படம் தமிழகத்தில் நடக்கும் கதைகளத்தை கொண்டதால் தமிழக ரசிகர்களை ஈர்த்தது. அடுத்ததாக உண்மை சம்பவம் என சொன்னதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இதன் விளைவாக கேரளத்தை விட தமிழகத்தில் படத்திற்கு ஏகோபத்ய வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகள் அதிகரித்து இந்தப் படம் பார்க்கவில்லை என்றால் சாமி குத்தம் ஆகிவிடுமோ என்ற ரேஞ்சுக்கு ஓடியது. அதோடு குணா குகையை பார்க்க மக்கள் கூட்டம் படையெடுத்தது. அங்கு போய் ரீல்ஸ் எடுப்பதும், வி-லாக் செய்வதும் ட்ரெண்ட் ஆனது.
பின்பு படக்குழுவை கமல் நேரடியாக அழைத்து பாராட்டினார். மலையாள திரையுலக வரலாற்றில் அதிக வசூல் செய்த படமாக இன்றளவும் இந்தப் படம் முதல் இடத்தில் இருக்கிறது. கிட்டதட்ட உலகளவில் ரூ.230 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க இளையராஜா தன் பாடலுக்கு காப்புரிமை கேட்டு நோட்டிஸ் அனுப்பினார். பின்பு அவருக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. படத்தில் தமிழக காவல்துறையினரை தவறாக காட்டியதாக விமர்சனங்கள் எழுந்தது. அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கேரளவைச் சேர்ந்த ஷிஜு ஆபிரஹாம் என்பவர், தமிழக உள்துறைச் செயலரிடம் புகார் கொடுத்தார். அதனடைப்படையில் தமிழக உள்துறைச் செயலர் பி.அமுதா, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்தார். சம்பவம் நடந்து 18 ஆண்டுகள் கழித்து இது நடக்கிறது. இது போன்ற சம்பவங்கள் படத்தை ஒட்டி நடந்தது.
மார்ச்;
சந்தோஷ் நாராயணன் கொடுத்த அதிர்ச்சி - எஞ்சாயி எஞ்சாமி பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் அதை கொண்டாடும் விதமாக வீடியோ வெளியிட்ட சந்தோஷ் நாராயணன், உற்சாகத்துடன் தொடங்கி ஒரு சோக செய்தியுடன் முடித்தார். அந்த பாடலின் மூலம் தங்களுக்கு ஒரு சதவீதம் கூட வருமானம் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் சொன்னார். மேலும் இப்பாடலை வெளியிட்ட மாஜா நிறுவனத்தை பலமுறை தொடர்பு கொண்டும் முடியவில்லை என கூறியிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்த உடனே மாஜா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரான ஏ.ஆர்.ரஹ்மானை எல்லாரும் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள்.
இதனால் விரக்தியடைந்த சந்தோஷ் நாராயணன், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில், “இந்த ஒட்டுமொத்த மாஜா பிரச்சினையிலும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாம எனக்கு மிகவும் ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் இருந்தார். பல போலி வாக்குறுதிகள் மற்றும் தீய நோக்கங்களுக்கு அவரும் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்” என அதிர்ச்சியை கிளப்பும் வகையில் பதிவிட மேலும் இந்த தருணத்தில் சுயாதீன கலைஞர்களை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகு மாஜா நிறுவனம் பணம் கொடுத்ததா என்பதை சந்தோஷ் நாராயணன் சொல்லவில்லை. இருப்பினும் நிலுவையில் உள்ள தொகையை அவர்களுக்கு தருவதாக சந்தோஷ் நாராயணன் உறுதியளித்தார்.
ஏப்ரல்;
மீண்டும் வெடித்த விவகாராம் - இளையராஜாவுக்கும் இசை நிறுவனங்களும் இடையிலான காப்புரிமை விவகாரம் பல காலங்களாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி, காதேவன் மற்றும் முகமது ஷஃபிக் இருவரும், “ஒரு பாடல் என்பது, பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்று கேள்வி எழுப்பியிருந்தனர். இது ஒரு புறம் இருக்க, ஒரு இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “ஒரு பாடலில் இசை பெரிதா, மொழி பெரிதா என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு. இசை எவ்வளவு பெரிதோ, மொழி அவ்வளவு பெரிது, மொழி எவ்வளவு பெரிதோ, இசை அவ்வளவு பெரிது. இரண்டும் கூடினால் தான் அதற்கு பாட்டு என்று பெயர். ஆனால் சில நேரங்களில் இசையை விட மொழி உயர்ந்ததாகவும், சில நேரங்களில் மொழியை விட இசை உயர்ந்ததாகவும், திகழுகின்ற சந்தர்ப்பங்கள் உண்டு. இதை புரிந்து கொள்பவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்று தனக்கே உரித்தான பாணியில் கூறியிருந்தார்.
இது இளையராஜாவை தான் அவர் மறைமுகமாக சொல்கிறார் என மீண்டும் இவர்களது விவகாரம் ஊதிப் பெரிதாக்கப்பட்டது. உடனே வெகுண்டெழுந்த இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், “கவிஞர் வைரமுத்து எங்களால் தூக்கிவிடப்பட்டவர். அவருக்கு கர்வம் வந்துவிட்டது. அதனால் தான் இப்படி பேசுகிறார். அவருக்கு வாழ்க்கை கொடுத்த இளையராஜாவை, இப்படி பேசலாமா. அவர் இளையராஜா போட்டோவை தினமும் கும்பிட வேண்டும். இனிமேல் வைரமுத்து இளையராஜா பற்றி சின்ன குற்றமோ குறைகளோ சொல்வதாக இருந்தால், அதற்குறிய விளைவுகளை வேறு மாதிரி சந்திக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்தார். இவரின் பேச்சு குறித்து வைரமுத்துவிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். பின்பு திடீரென வீடியோ வெளியிட்ட இளையராஜா, இந்த விவகாரம் குறித்து பேசாமல், “என்னுடைய வழியில் தெளிவா நான் போய்டு இருக்கேன். ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன். என்னை பற்றி வரும் வீடியோக்களில் நான் கவனம் செலுத்த மாட்டேன்” என கூறியிருந்தார். இதன் பிறகு இந்த சர்ச்சை ஓய்வு பெற, பின்பு ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, “முடிந்த கதை தொடர வேண்டாம். இது குறித்து பேசுவது பண்பாட்டு ரீதியாக உயர்ந்ததில்லை. நான் எந்த ஒரு மேடையிலும் சர்ச்சையான கருத்தை உண்டாக்க விரும்புவதில்லை. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன” என முடித்துக் கொண்டார்.
மே;
பாலஸ்தீனத்திற்கு நடிகை ஆதரவு - உலக அளவில் புகழ்பெற்ற திரைப்பட விருது விழாவான கேன்ஸ் திரைப்படவிழா கோலகலமாக இந்த ஆண்டும் தொடங்கியது. அந்த விழாவில் இஸ்ரேல் - பாலஸ்தீன போர் தொடர்பாக மலையாள நடிகை கனி குஸ்ருதி பாலஸ்தீன கொடிக் கலரில் ‘தர்பூசணி’ வடிவத்தில் கைப்பை கொண்டு வந்து தன்னுடைய ஆதரவை பாலஸ்தீனத்துக்கு தெரிவித்திருந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது.
ஜூலை;
உடைந்து போன பிரம்மாண்ட கூட்டணி - 3 வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பில் இருந்து வெளியானது கமல்- ஷங்கரின் கூட்டணி. ஷங்கரின் பிரம்மாண்டம், கமலின் கெட்டப்புகள், அனிருத்தின் இசை என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கடும் விமர்சனத்தை சந்தித்தது. அதோடு சோசியல் மீடியாவில் ட்ரோல் மெட்டிரியலாகி அடுத்த பாகத்தை ஓ.டி.டி.யில் வெளியிடும் அளவுக்கு படக்குழு செல்லும் நிலைக்கு கிண்டல் செய்யப்பட்டது. குறிப்பாக கமல்ஹாசனின் மேக்கப், ஸ்க்ரீன் ப்ளே சொதப்பல், படத்தின் நீளம் என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகினர். இதன் விளைவாக படக்குழு 12 நிமிட காட்சிகளை நீக்கினர். இருப்பினும் இப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை. பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் இந்தளவு மோசமான வரவேற்பை பெற்றது கமல் - ஷங்கர் இருவரின் கேரியரில் ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியன் 3 இந்தளவு மோசமாக இருக்காது என கோலிவுட் வட்டாரங்கல் தெரிவிக்கின்றனர். பொருத்திருந்து பார்ப்போம்.
ஆகஸ்ட்;
வெளிச்சத்திற்கு வந்த நடிகைகளின் அவலம் - கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளானார். அந்த சம்பவத்தை தொடர்ந்து இனிவரும் காலங்களில் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என, மலையாள திரைத்துறையின் பெண்கள் அமைப்பினர் அம்மாநில முதல்வருக்கு மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது. பின்பு 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் வெளியிடப்பட்டது. இதில் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பொதுவெளியில் சொல்லி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். இது மலையாளத் திரையுலகை தாண்டி, மொத்த இந்தியத் திரையுலகத்துக்கும் ஒரு அவப்பெயரை ஏற்படுத்தியிருதது. இதில் பல முன்னணி பிரபலங்கள், நடிகர் மற்றும் எம்.எல்.ஏ. முகேஷ், சித்திக், ஜெயசூர்யா, நிவின் பாலி என பலரின் பெயர்கள் அடிப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா ’ [Association of Malayalam Movie Artistes (AMMA)] அமைப்பின் செயற்குழுவின் உறுப்பினர்கள் 17 பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மேலும் மொத்த சங்கத்தையும் கலைத்தனர். இதையடுத்து கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த குழு, ஹேமா கமிட்டி அறிக்கையின் படி இதுவரை 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.
அக்டோபர் - நவம்பர்;
ஆவேசமான நடிகைகள் - பெண்களை, குறிப்பாக நடிகைகளை போகிற போக்கில் விமர்சனம் செய்யும் போக்கு இன்றளவும் நடந்து கொண்டுதான் வருகிறது. மன்சூர் அலிகான் ஒரு நிகழ்ச்சியின் செய்தியாளர்கள் சந்திப்பில், த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது பேசுபொருளாகி பின்பு த்ரிஷா கடும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் ஆனது. அதோடு த்ரிஷாவிற்கு குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட பல்வேறு திரைபிரபலங்கள் ஆதரவு தெரிவிக்க மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரலும் வலுத்தது. இது தொடர்பாக அவர் மேல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. விசாரணையும் நடத்தப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது. பின்பு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக தவறு செய்வது மனிதம்; மன்னிப்பது தெய்வீகம் என த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பிரச்சனையின் வீரியத்தை சற்று குறைத்தார்.
ஆனால் மன்சூர் அலிகான் நீதிமன்றம் சென்றார். த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அவர்கள் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முடிவில், நீதிபதி சதிஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க ஆணை பிறப்பித்து ஒத்தி வைத்தார். அடுத்த விசாரணையின் போது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கில் மனு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையில்,அவரின் கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதே போல அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு, கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புபடுத்திப் பேசியிருந்தார். இதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்த த்ரிஷா, பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என வக்கீல் மூலம் நோட்டிஸ் அனுப்பியிருந்தார். ஆனால் ஏ.வி.ராஜூ வருத்தம் தெரிவித்து மட்டும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
த்ரிஷாவை தொடர்ந்து சமந்தா - தெலங்கானா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவை விவகாரத்து செய்ததற்கு தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ்தான் காரணம் என ஒரு பேட்டியில் பேச அது அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு நாக அர்ஜூனா குடும்பம் மற்றும் அல்லு அர்ஜூன், நானி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சமந்தா அறிக்கை வெளியிட்ட நிலையில அதில், எனது விவகாரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது என்றும் அதில் எந்த அரசியல் சதியும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார். இதையடுத்து அமைச்சர் கொண்டா சுரேகா, தனது கருத்தை வாபஸ் பெறுவதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து நாகர்ஜுனா அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு எதிராக ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் அமைச்சர் சுரேகாவுக்கு எச்சரிக்கை விடுத்து அவர் கூறிய கருத்து தொடர்பான வீடியோவை சமூக ஊடக தளங்கள் மற்றும் டிஜிட்டல் சேனல்களில் இருந்து உடனடியாக நீக்கவும் உத்தரவிட்டது.
அரசியலிலும் சினிமாவிலும் நிரந்தர எதிரிகளும் நிரந்தர நண்பர்களும் கிடையாது என சொல்வார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது நயன்தாரா - தனுஷ் விவகாரம். ஒரு காலத்தில் நட்புக்காக தனுஷ் கேட்டுக்கொண்டதால் எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாரா, அதே தனுஷ் காப்புரிமை கேட்டதால் அவர் மீது பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை வைத்து கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது நயன்தாரா திருமண வாழ்க்கை ஆவணப்படமாக நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட, அதற்கு முன்னதாக வெளியான ட்ரைலரில் விக்னேஷ் சிவனுக்கும் நயன் தாராவுக்கும் காதல் மலர்ந்த ‘நானும் ரௌடி தான்’ பட படப்பிடிப்பில் இருந்து மூன்று நொடி காட்சி இடம்பெற்றிருந்தது. இதை பார்த்த தனுஷ், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், அந்த மூன்று நொடி வீடியோவிற்கு பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பிருக்கிறார். அதற்கு நயன்தாரா, “தனுஷிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக 3 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம். முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமே உங்களது நடவடிக்கைகள் இருக்கிறது. அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” எனக் குறிப்பிட்டு ‘பிறரது துன்பத்தில் இன்பம் காணுதல்’ என்று பொருள்படும் ‘Schadenfreude’ என்ற ஜெர்மனிய மொழியைப் பயன்படுத்தி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்ப, நயன்தாராவுக்கு ஆதரவாகவும் தனுஷுக்கு ஆதரவாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அதோடு ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தனுஷ் மற்றும் நயன்தாரா ஒருவைரை ஒருவர் பார்த்து கொள்ளாமல் முகம் திரும்பி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக தனுஷ், நயன் தாரா, விக்னேஷ் சிவன், நெட் ஃபிளிக்ஸ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அதற்கு அவர்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் பதிலளிக்கவில்லை. தனுஷ் எதிர்ப்புக்கு பின்பும் ஆவணப்படத்தில் அது சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர்;
அவசரப்பட்ட படக்குழு - கங்குவா படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தாலும் படக்குழு கொடுத்த ஹைப் பெரிதாக இருந்தது. ஆயிரம் கோடி வசூல், 38 மொழிகள், 2 வருஷத்துக்கு மேலான மேக்கிங், கேம் ஆஃப் த்ரோன்ஸுடன் கம்பேரிசன், ரிலீஸுக்கு முன்பே சக்சஸ் மீட் அறிவிப்பு.. என படக்குழு 200% கான்பிடண்டுடன் இருந்தது. ஆனால் அதில் பாதி அளவு கூட ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. அதோடு படமுழுக்க அனைத்து கதாபாத்திரங்களும் கத்திக் கொண்டே இருப்பதாக விமர்சனங்கள் எழ தியேட்டர் ஓனர்களுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சத்தத்தின் அளவை 2 புள்ளிகள் குறைக்க அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஜோதிகா, “திட்டமிட்டு வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். முதல் ஷோ முடியும் முன்பே இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது அதிர்ச்சி அளிக்கிறது” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது பெரிய சர்ச்சையாக ட்ரோல்களுக்கு ஜோதிகாவும் உள்ளானார். பின்பு இதையொட்டி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால் அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்” என பெரிய அறிக்கை வெளியிட்டனர்.
இதையடுத்து புதிய திரைப்படங்கள் வெளியான மூன்று நாட்களில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிடத் தடை கோரி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்த போது மறுப்பு தெரிவித்து விமர்சனம் கருத்துச் சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் காவல்துறையிடம் புகாரளிக்கலாம் என கருத்து கூறினார். படம் நல்லாயிருந்தால் மக்கள் கொண்டாடப் போகிறார்கள். இல்லையென்றால் விமர்சனம் செய்ய போகிறார்கள். ஆனால் தனிப்பட்ட தாக்குதல்களை யாரும் வரவேற்பதில்லை. அது உச்ச நடிகர்களுக்கு வழக்கமாக நடப்பது தான். அதற்கு அவங்களுடைய முந்தைய படங்கள் செய்த சம்பவங்கள் அப்படி. சூர்யா, நடிப்பதை தாண்டி நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஜெய் பீம் படத்தில் அக்னி சட்டி கேலண்டர் நெகட்டிவ் கதாபாத்திரத்துக்கு வைத்தற்காக பா.ம.க.-வுக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களால் சூர்யா தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்டார் என விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த அளவில் இல்லாததால், சூர்யாவுக்கு பின்னடைவாக இப்படம் அமைந்துவிட்டது.