Skip to main content

அமித்ஷாவிடம் இருந்து எடப்பாடிக்கு வந்த ரகசிய உத்தரவு... எடப்பாடியை மிரட்டும் சம்பவம்... கோபத்தில் திமுக எடுத்த முடிவு!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

மக்களின் உணர்வுகளுக்கு எதிரான மத்திய அரசின் சட்டங்களை உயர்த்திப் பிடிப்பதில் முதலிடத்தில் இருக்கிறது எடப்பாடி அரசு. டெல்லியிலிருந்து கொடுக்கப்படும் ஒவ்வொரு கட்டளையையும் சிரம் தாழ்த்தி ஏற்பதால் சர்வாதிகாரியாக உருமாறி வருகிறார் எடப்பாடி என்கிற குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கத் துவங்கியுள்ளன.

தேசிய குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவைகளை கையிலெடுத்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா. மக்கள்தொகை பதிவேடு பணிகளை மேற்கொள்ள 8,500 கோடியும், தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளுக்காக 4,500 கோடியும் என மொத்தம் 13 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.

 

bjp



இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேகம் காட்டி வருகிறார் அமித்சா. அதற்கேற்ப, அசாம் மாநிலத்தைத் தவிர, ஒவ்வொரு மாநில அரசும் இதனை முன்னெடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தங்கள் மாநிலங்களில் இவைகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் கூட மக்கள்தொகைப் பதிவேடு பணிகளை முன்னெடுப்போம் என உறுதி தரவில்லை. இதற்கிடையே, எடப்பாடி அரசு மட்டும் அமித்சாவின் திட்டங்களை நடைமுறைப்படுத்த தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

 

admk



இது குறித்து நம்மிடம் பேசிய கோட்டை அதிகாரிகள், ‘தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்க அ.தி.மு.க. எம்.பி.க் களுக்கு அறிவுறுத்துமாறு அமித்சா தரப்பிலிருந்து வந்த கட்டளையை புறம் தள்ளாமல் ஆதரித்தார் முதல்வர் எடப்பாடி. சமீபத்தில் அமித்சாவை டெல்லியில் எடப்பாடி சந்தித்தபோது, மக்கள்தொகை பதிவேடு திட்டத்தை நடை முறைப்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. 2020 ஏப்ரலில் துவங்கவிருக்கும் கணக்கெடுப்பு பணிகளுக்கான செயல்முறை ஆணைகளை விரைவில் வெளியிட எடப்பாடி அரசு திட்டமிட்டுள்ளது'' என்கிறார்கள்.

 

bjp



இரு திட்டங்களை குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அமித்சா, "தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து மத்திய அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ இதுவரை விவாதிக்கப்படவில்லை. அப்படியிருக்கும்போது அது குறித்த பயம் தேவையில்லை. குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் நோக்கமும் இதில் இல்லை. மேலும், மக்கள் தொகை பதிவேட்டுக்கும் குடிமக்கள் பதிவேட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் தொகை பதிவேடு திட்டத்தால் யாரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள். என்.பி.ஆருக்காக பெறப்படும் தகவல்கள் என்.ஆர்.சி.க்கு பயன்படுத்தப்படமாட்டாது'' என சுட்டிக்காட்டியிருக்கிறார்.


அமித்சாவின் விளக்கத்தை தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இரண்டு திட்டங்களுக்கும் எதிரான போராட்டங்களை முன்னெடுக்க நாடு முழுவதுமுள்ள எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் முதல்வருமான மம்தாபானர்ஜி முயற்சி எடுத்து வருகிறார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான எஸ்.எஸ்.பாலாஜியிடம் விவாதித்தபோது, "அமித்சாவின் விளக்கம் ஏற்புடையதல்ல. அதில் பொய்கள் நிறைய கலந்துள்ளன. என்.ஆர்.சி.க்குரிய நடைமுறை விதிகளை உருவாக்குவதற்கு என்.பி.ஆர்.தான் அடிப்படை. அதனால் என்.பி.ஆர். அவசியம் என முன்னிறுத்தப்படுகிறது. அதாவது, தேசிய குடிமக்கள் ஆவணத்தை உருவாக்க, தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கின்றனர். இப்போதும் மத்திய அரசின் உள்துறை அமைச்சர் இணையதளத்தில் இந்த விவரங்கள் இருக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் குடியுரிமை அடையாள அட்டை தருவதற்காகத்தான் இந்த திட் டங்களை கொண்டு வருகிறார்கள். பயோமெட்ரிக் அடையாளங்களை பதிவு செய்து ஏற்கனவே ஆதார் அட்டையை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். என்.பி.ஆரும் ஆதாரும் ஒன்று தான் என்றும் மத்திய அரசு சொல்கிறது. அந்த வகையில், ஆதார் அட்டை இருக்கும்போது எதற்கு என்.ஆர்.சி.யையும் என்.பி.ஆரையும் கொண்டு வர வேண்டும்? இதில்தான் மத்திய பா.ஜ.க.வின் மதவெறி ஆபத்து இருக்கிறது. அதாவது, தேசிய குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, யார் யாருக்கு குடியுரிமை வழங்குவது என்கிற பிரச்சனை எழவில்லை. அதனால் என்.ஆர்.சி. தேவைப்படவில்லை.


ஆனால், குடியுரிமைச் சட் டத்தை அமித்சா நிறைவேற்றியதற்கு பிறகு, யார் யாருக்கெல்லாம் இந்திய குடியுரிமை தரப்படும் என வரையறை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மதம் சம்மந்தமான இஷ்யூ இருக்கிறது. முஸ்லிம்களின் குடியுரிமையை காலி செய்யனும்னா, மக்கள்தொகை பதிவேட்டில் பெறப்பட்ட ஆவணங்களை வைத்துக் கொண்டு குடிமக்கள் பதிவேட்டில் அவர்களை நீக்கிவிட முடியும். குறிப்பாக, சென்னையில் ஒரு பகுதியில் குறிப்பிட்ட 10,000 பேரை தவிர்க்க திட்டமிட்டால், நேரடியாக குடிமக்கள் பதிவேட்டிற்குள் சென்றால் எந்த 10,000 பேர் என குழப்பம் வரும். நீக்க வேண்டிய 10,000 பேரை அடை யாளம் கண்டறிய முடியாது. அதற்காகத்தான், மக்கள்தொகை பதிவேடு தேவைப்படுகிறது.

இந்த பதிவேட்டில், முன்னோர்களின் ஆதாரங்கள் நம்மிடம் இல்லை என்றால் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்காது. ஒரு கட்டத்தில் குடியுரிமை இல்லாதவர்களை இந்திய அரசு நாடு கடத்தும் அல்லது உள்ளூரிலேயே அவர்கள் அகதிகளாக்கப்படுவார்கள். இந்தியாவை இந்து நாடாக பிரகடனப்படுத்த மோடியும் அமித்சாவும் துடிக்கின்றனர். அதற்கு தடையாக இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதசார்பின்மை கோட்பாடுதான். அதற்காகத்தான் என்.பி.ஆர்.யை நடைமுறைப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இது அமலானால் எதிர்காலத்தில் இந்துத்துவாவை எதிர்க்கும் யாரையும் குடியுரிமையிலிருந்து நீக்கிட முடியும். இத்தகைய ஆபத்துகள் இருப்பதால்தான் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டியதிருக்கிறது.

மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசுகளின் உதவியில்லாமல் நடைமுறைப் படுத்திட முடியாது, மாநில அரசிடம்தான் கிராமப்புறங்கள் வரை மக்களிடம் சென்று கணக்கெடுப்பை எடுக்கும் கட்டமைப்பு இருக்கிறது. அதனால்தான் மாநில அரசுக்கு கட்டளை பிறப்பிக்கிறது டெல்லி. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத முதல்வர் எடப்பாடி, சர்வாதிகாரியாக மாறி வருகிறார் என்பதற்கு அடையாளம்தான் அவரது ஆதரவு'' என்கிறார் ஆவேசமாக!

இப்படிப்பட்ட சூழலில், அமித்சாவின் திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் எடப்பாடி அரசை கண்டிக்கும் முகமாக, என்.ஆர்.சி.யும் வேண்டாம்; என்.பி.ஆரும் வேண்டாம் என சென்னை பெசண்ட் நகரில் கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த பெண்களை அவசரம் அவசரமாக கைது செய்து அவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்திருக்கிறது எடப்பாடி அரசின் காவல்துறை. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

எடப்பாடி அரசின் எதேச்சதிகாரத்தை கண்டித்த தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி, அமித்சாவின் திட்டங்களை கண்டிக்கும் வகையில் தங்களது வீடுகளில் கோலங்கள் வரைய வேண்டும் என தி.மு.க. மகளிர் அணியினருக்கு வலியுறுத்த, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் வீடுகளில் கோலங்களில் புரட்சி வெடித்தது. கலைஞர், மு.க. ஸ்டாலின், கனிமொழி, வீடுகளின் வாசல்களிலும் என்.பி.ஆருக்கு எதிரான கோலங்கள் காட்சியளித்தன. கோலம் போட்டதால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பெண்கள் ஐவரும் ஸ்டாலினையும் கனிமொழியையும் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நம்மிடம் பேசிய தி.மு.க. வழக்கறிஞர் அணியின் துணைச்செயலாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான கண்ணதாசன், "டெல்லியிலுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், இந்துக்களின் மக்கள் தொகை சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் 2011-ல் வெளியிட்ட புள்ளிவிபரங்களில் தெரிவித்திருக்கிறது. இதன் பின்னணியில்தான், முஸ்லிம்களை ஒழித்துக் கட்டவே மத்திய பா.ஜ.க., என்.ஆர்.சி., என்.பி.ஆர். திட்டங்களை கொண்டு வருகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில், முஸ்லிம் பண்டிகைகள் நீக்கப்பட்டிருப்பதை உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அமித்சாவின் திட்டங்களை எதிர்த்து கோலம் போட்ட பெண்களை எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்ததன் பின்னணியில் டெல்லியின் கட்டளை இல்லாமல் இல்லை. கோலங்கள் கூட தங்களை மிரட்டுகிறது என பயந்த எடப்பாடி சர்வாதிகாரியாக மாறியிருக்கிறார். சர்வாதிகார ஆட்சியில்தான் இப்படியெல்லாம் நடக்கும். அதை எதிர்த்து தமிழகம் ஜனநாயக போர்க்கோலம் பூண்டிருக்கிறது'' என்கிறார் காட்டமாக.