
தனியாக செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்யும் நபர்கள் பொதுவாக வட மாநிலத்தாரர்களாகவே இருப்பார்கள் என இருக்கும் பொது புத்தியை மாற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் உண்மையில் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் நபர்களின் முகத்திரை வெளியே வரும் பட்சத்தில் அவை எந்த அளவு அதிர்ச்சிகரமாக இருக்கும் என்ற விஷயத்தை கதை கருவாக வைத்துக்கொண்டு உருவாகி இருக்கும் இந்த ராபர் திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்றது?
அதிகப் பேராசை கொண்ட நபராக இருக்கும் நாயகன் சத்யா கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஐடி கம்பெனியில் வேலை செய்ய வருகிறார். வந்த இடத்தில் பெண்கள் விஷயத்தில் மிகவும் சபல புத்தியுடன் இருக்கும் அவர் கையில் பணம் இல்லாததால் எந்த பெண்ணும் அவரை மதிக்காதது போல் நினைத்துக் கொண்டு அதிகம் சம்பாதிக்க தப்பான வழியை தேர்ந்தெடுக்கிறார். பகலில் ஐடி வேலை செய்யும் அவர் இரவு நேரங்களில் முகத்தை மூடிக்கொண்டு சிசிடிவி இல்லாத இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுகிறார். அந்த பணத்தை வைத்துக் கொண்டு பல பெண்களிடம் உல்லாசமாக இருக்கிறார். இப்படியே இவர் வாழ்க்கை செல்ல ஒரு கட்டத்தில் இவருக்கும் இதேபோல் வழிப்பறி சம்பவங்களை பின்னால் இருந்து நடத்திக் கொண்டிருக்கும் பிக் பாஸ் டேனியலுக்கும் பகை ஏற்படுகிறது.

இருவருக்குள்ளும் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கிடையே சத்யா ஒரு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பெண் இவர்களிடம் சிக்கி இறந்து விடுகிறார். அந்தப் பெண்ணின் தந்தை ஜெயபிரகாஷ் எப்படியாவது இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டு கொலை செய்தவரை கண்டுபிடித்து பழிவாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவருக்கு போலீஸ் அதிகாரியான ராஜா ராணி பாண்டியன் உதவி செய்கிறார். ஒரு கட்டத்தில் இவர்களிடம் சத்யா சிக்கி விடுகிறார். ஜெயபிரகாஷ் ராஜா ராணி பாண்டியன் குரூப்பிடம் இருந்து சத்யா தப்பித்தாரா, இல்லையா? இன்னொரு ராபரான டேனியலின் கதை என்ன ஆனது? ஜெயபிரகாஷ் தன் மகளின் சாவுக்கு நியாயம் பெற்றாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
பொதுவாக வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வட மாநிலத்தார்களாகவே இருப்பார்கள் என்ற பொது புத்தியை மாற்றி நம்முடன் நம் சக நண்பர்களுக்கும் நெருக்கமானவர்களாகவும் நம்முடன் வேலை செய்யும் நபர்களாகவும் இந்த மாதிரியான நபர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்ற உண்மையை மிகவும் ஆணித்தனமாக போட்டு உடைத்து இருக்கிறது இந்த ராபர் திரைப்படம். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் மிகவும் வேகமாகவும் அதே சமயம் நேர்த்தியான திரைக்கதை மூலம் ரசிக்கவும் வைக்கும் படியான கதை அமைப்பில் நகர்ந்து ஒரு நல்ல திரில்லர் படம் பார்த்த உணர்வை இந்த ராபர் திரைப்படம் கொடுத்திருக்கிறது.

பெரும்பாலும் புது முகங்கள் நடித்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் கதை கருவுக்கும் கண்டன்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்கள் எந்த அளவு புத்திசாலித்தனமாக மக்களை ஏமாற்றி திருடுகின்றனர், அதில் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன போன்ற விஷயங்களை இந்த படத்தில் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி பார்ப்பவர்களையும் அதிர்ச்சி ஏற்படும் படி செய்திருக்கிறார் இயக்குநர் எஸ் எம் பாண்டி. இந்த காலகட்டத்தில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனையை மிகவும் யதார்த்தமாகவும் அப்படியே உண்மைத்தன்மை இருக்கும்படியாக கதை எழுதி படத்தின் எழுத்தாளர் மற்றும் மெட்ரோ பட இயக்குநருமான ஆனந்த் கிருஷ்ணன் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.
நாயகன் சத்யா புதுமுகமாகவே இருந்தாலும் நடிப்பில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவருடன் ராபரியில் ஈடுபடும் நபராக நடித்திருக்கும் நபரும் அவரை சுற்றி இருக்கும் நபர்களும் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகவே கொடுத்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். ஜெயபிரகாஷ் மற்றும் ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அந்த கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் என்ன தேவையோ அதை சிறப்பாக செய்து கதாபாத்திரத்திற்கும் நியாயம் செய்திருக்கின்றனர். பிக் பாஸ் டேனியல் தனக்கு கொடுத்த கிரே ஷேட் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சென்ட்ராயன் பாத்திரம் அறிந்து நடித்து இறுதி கட்ட காட்சிகளில் கலகலப்பு கூட்டியிருக்கிறார். படத்தில் நடித்த மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். குறிப்பாக விஜய் டிவி தீபா நெகிழ வைத்திருக்கிறார்.

ஜோகன் சிவனேஷ் இசையில் படத்தின் பின்னணி இசை செயின் பறிப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறப்பாக அமைந்திருக்கிறது. படத்தின் வேகத்திற்கும் இவரது இசை நன்றாக உதவி இருக்கிறது. என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவில் இரவு நேர சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் ஆங்காங்கே லாஜிக் மீரல்கள் தென்பட்டாலும் இந்த கதை மற்றும் கதை கரு சொல்ல வந்த விஷயத்தை ஒரு நல்ல திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல தீனியாக அமையும்.
ராபர் - ஜாக்கிரதை!