
விடாமுயற்சி தோல்விக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுக்கும் முயற்சியில் அடுத்தடுத்து களத்தில் குதித்திருக்கும் அஜித் இந்த முறை குட் பேட் அக்லி மூலம் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க முயற்சி செய்திருக்கிறார். முழுக்க முழுக்க ஃபேன் பாய் சம்பவமாக அமைந்திருக்கும் இந்த குட் பேட் அக்லி திரைப்படம் எந்த அளவு ரசிகர்களை கவர்ந்திருக்கிறது??
உலக அளவில் மிகப் பெரிய டானாக இருக்கும் அஜித் தன் பிறந்த மகனுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு குட் அஜித்தாக மாறி ஜெயிலுக்கு சென்று விடுகிறார். 18 வருடங்கள் ஜெயிலிலேயே கழிக்கும் அவர் புது மனிதனாக வெளியே வந்து தன் மகனுடன் சந்தோஷமாக இருக்க எண்ணுகிறார். ஜெயிலை விட்டு மகனுக்காக வெளியே வரும் அஜித்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. வெளியே வந்த இடத்தில் தன்மகன் வேறு ஒரு குற்ற வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு செல்கிறார். ஜெயிலுக்கு சென்ற தன் மகனை காப்பாற்ற மீண்டும் டானாக மாறும் அஜித் குற்றவழக்கில் இருந்து தன் மகனை காப்பாற்றினாரா, இல்லையா? உண்மையில் அவர் மகன் குற்றம் செய்தாரா, இல்லையா? குற்றத்துக்கு பின்னணியில் இருக்கும் எதிரிகள் யார்? அவர்களை அஜித் காலி செய்தாரா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

குட் பேட் அக்லி என மூன்று விதமான கேரக்டர்களில் அஜித் தோன்றுகிறார். இந்த மூன்று விதமான கேரக்டர்களிலும் அட்டகாசமாக அமர்க்களப்படுத்தி அசலான ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் காட்டி தியேட்டரில் ரசிகர்களை ஆரவாரத்தில் மிதக்க விட்டிருக்கிறார். முழுக்க முழுக்க மாஸ் திரைப்படமாக அமைந்திருக்கும் இந்த படத்தில் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அஜித்துக்கான பில்டப்புகள் நிறைந்த ஒரு திரைப்படமாக அமைந்திருக்கிறது. படம் முழுக்க பஞ்ச் வசனங்கள், பில்டப் காட்சிகள், அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள், திரும்பிய திசை எல்லாம் மாஸ் காட்சிகள் என திரைக்கதை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படுவேகமாக சென்று முடிகிறது. கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்காமல் கதையை மேலோட்டமாக சொல்லி திரைக்கதைக்கும் படத்தின் மாஸ் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து குறிப்பாக ரசிகர்களுக்கு மட்டுமே இந்த படம் பிடிக்கும் அளவிற்கு முழுக்க முழுக்க அஜித்திசம் நிறைந்த அமர்க்களமான ஒரு படத்தைக் கொடுத்து ரசிகர்களை அதகலப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
படத்தின் முக்கிய அம்சங்களாக பல்வேறு முந்தைய அஜித் பட ரெஃபரன்ஸ்கள் சில விஜய் படம் ரெபரன்ஸ்கள் மற்றும் படம் முழுவதும் பல இடங்களில் படர்ந்து காணப்படும் பழைய இளையராஜா தேவா பாடல்கள் என ரசிகர்களுக்கு விருந்து அளித்திருக்கிறார். இந்த ரெஃபரன்ஸ் மற்றும் பழைய பாடல்கள் வரும் காட்சிகள் எல்லாம் ஓவர் டோஸ் ஆக இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படாதவாறு ரசிக்கும்படியாக அமைந்து தியேட்டர்களில் விசில் சத்தமும் கைத்தட்டல்களும் அதிர்கிறது. குறிப்பாக இடைவேளை காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களுக்கு பெரிய விருந்து. பல இடங்களில் வரும் கூஸ்பம்ப்ஸ் மொமென்ட்டுகள், ரசிகர் மட்டுமல்லாது பார்ப்பவர்களுக்கும் ஏற்பட்டு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பரவசம் கொடுத்திருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் அதிக முக்கியத்துவம் தராமல் இருப்பதை மட்டும் தவிர்த்து விட்டு லாஜிக் பார்க்காமல் வெறும் அஜித் மற்றும் அவரை சுற்றி இருக்கும் மாஸ் காட்சிகளுக்காக இந்த படத்தை பார்க்கும் பட்சத்தில் இது ஒரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறி இருக்கிறது.

நாயகனாக வரும் அஜித் குமார் வழக்கம்போல் ஒற்றை ஆளாக முழு படத்தையும் தன் தோள் மேல் சுமந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்பு தேவையோ அந்த அளவு நடிப்பை கொடுத்து அதே சமயம் ஆக்சன் காட்சிகளிலும் அதகளப்படுத்தி காதல் காட்சிகளிலும் கலகலப்பாக நடித்து ஒவ்வொரு ஃபிரேமிலும் கைதட்டல், விசில்களை பறக்க விட்டுள்ளார். தனக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் கொடுத்து ரசிகர்களை விடாமுயற்சிக்கு பின் மீண்டும் பரவசப்படுத்தி தியேட்டரில் கொண்டாட்டத்தை உருவாக்கியிருக்கிறார். அஜித்துக்கு சரிசமப் போட்டியாக அர்ஜுன் தாஸ் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தியேட்டரில் விசில்களை பெற்றிருக்கின்றார். ஒவ்வொரு ஃபிரேமிலும் அஜித்துக்கு நிகராக தானும் நக்கல், நையாண்டி என ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கும் அளவுக்கு சிறப்பான நடிப்பை கொடுத்து மீண்டும் ஒருமுறை கவனம் பெற்று இருக்கிறார்.
வெறும் வில்லத்தனம் மட்டுமல்லாமல் கொடூரமான செயல்கள் மற்றும் அடங்கிப் போவது அதே நேரம் ஆட்டி வைப்பது என ஒவ்வொரு பிரேமிலும் ஒவ்வொரு வகையான ஆக்டிங்கை கொடுத்து அஜித்துக்கு நிகரான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருக்கிறார். வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் நாயகி த்ரிஷா. விடாமுயற்சி போல் இந்த படத்திலும் அவருக்கு சில இடங்களில் மட்டுமே வந்து காட்சிகள் முடிவடைந்து விடுகிறது. இருந்தும் தனக்கு கொடுத்த ஸ்பேசில் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். சர்ப்ரைஸ் எலிமெண்டாக வருகிறார் இன்னொரு நாயகி சிம்ரன். இவர் வரும் சில காட்சிகள் கைதட்டல் பெற்றிருக்கிறது. குறிப்பாக வாலி ரெஃபரன்ஸ் மாஸ். நாயகனோடு தோள் கொடுக்கும் தோழனாக வருகிறார் தெலுங்கு நடிகர் சுனில். நண்பராக என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா மற்றும் பிரபு ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.

அஜித்துக்கு மகனாக வரும் நடிகர் மிகவும் பரிதாபமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் பிரியா வாரியர் கவனம் பெற்று இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவர் போடும் நடனம் தியேட்டரில் கைதட்டல்களை அதிகப்படுத்தி இருக்கிறது. அவ்வப்போது வந்து கிச்சு கிச்சு மூட்டி இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. இறுதிக்கட்ட காட்சியில் சர்ப்ரைஸ் எலிமெண்டாக வரும் யோகி பாபு சிறப்பு. மற்றொரு வில்லனாக வந்து செல்கிறார் ஜாக்கி ஷெராப். சியாஜி ஷிண்டே, டார்கி நாகராஜா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் வந்து சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கின்றனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் மாஸ் ரகம். குறிப்பாக பின்னணி இசையை மிகவும் சத்தமாகவும் ஒரு மாஸ் படத்திற்கு என்ன தேவையோ அது போல் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார். மார்க் ஆண்டனியில் எந்த மாதிரியான ஒரு இசையை நாம் கேட்டு ரசித்தோமா அதே போன்ற ஒரு இசையை வேறு ஒரு தளத்தில் இப்படத்தில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக இதனோடு கலந்து வரும் ரீமிக்ஸ் பாடல்களும் படத்துக்கு கூடுதல் சிறப்பு. அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில் அஜித் சம்பந்தப்பட்ட மாஸ் காட்சிகள் மட்டும் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவரது ஒளிப்பதிவு படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது. இவருக்கும் இயக்குநருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருப்பது படத்தின் ஃபிரேமில் நன்றாக தெரிகிறது.

தன் குடும்பத்துக்காக திருந்தி டான் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மீண்டும் அதே குடும்பத்துக்காக டானாக மாறி எதிரிகளை பழிவாங்குவது நாம் ஏற்கனவே பார்த்து பழகிய ஒற்றை வரி கதையாக இருந்தாலும் அதை வைத்துக்கொண்டு அதற்கு புதுவிதமான திரைகதை அமைத்து அந்த திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு கூஸ்பம் மொமென்ட்ஸ், மாஸ் காட்சிகள், மாசான பன்ஞ் வசனங்கள், அதகளப்படுத்தும் அதிரடி சண்டை காட்சிகள் என காட்சிக்கு காட்சி முழுக்க முழுக்க ரசிகர்களுக்கு என்றே வடிவமைப்பு செய்து ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இந்த குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்திருக்கிறார்.
குட் பேட் அக்லி - வெறும் பில்டப் தான்! பட் இட்ஸ் ஓகே!!