
கோவிட் காலகட்டத்திற்கு பிறகு மிகவும் பீக்கில் இருந்த ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் காலம் கடக்க கடக்க குறைந்து கொண்டே போனது. நேரடி திரைப்படமாக தியேட்டர்களில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களை கோவிட் காலகட்டத்தில் நேரடியாக ஓட்டிட்டியில் ரிலீஸ் செய்து தமிழ் சினிமா முதல் இந்திய சினிமா வரை அனைத்து சினிமாக்களும் கல்லா கட்டின. தற்பொழுது திரையரங்குகள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியவுடன் ஓடிடி ரிலீஸ் என்பது மிகவும் குறைந்து காணப்பட்ட இந்த சூழலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு நேரடி ஓடிடி ரிலீஸ் படமாக இந்த டெஸ்ட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் முதல் முறையாக இயக்கியிருக்கும் இந்த டெஸ்ட் திரைப்படம் ஓடிடி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா, இல்லையா?
புகழ் பெற்ற இந்திய கிரிக்கெட் ஆக இருக்கும் சித்தார்த் கடந்த இரண்டு வருடங்களாக பார்மின்றி தவித்து வருகிறார். இதனால் அவர் விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற மிகப்பெரிய அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இருந்தும் தான் ஓய்வு பெறாமல் இன்னொரு முறை தன்னை நிரூபிக்கும் நோக்கில் சித்தார்த் இருக்கிறார். அவருக்கான நெருக்கடி அதிகமாகி கொண்டே இருக்கிறது. சித்தார்த்தின் பள்ளி தோழியான நயன்தாரா சித்தார்த்தின் மகன் படிக்கும் பள்ளியில் டீச்சராக பணிபுரிகிறார். குழந்தையின்மை பிரச்சனை காரணமாக ஐவிஎஃப் சிகிச்சை மேற்கொள்ள பணத்தட்டுப்பாட்டில் இருக்கும் அவர் தன் கணவர் மாதவன் வைத்திருக்கும் கேண்டின் மூலம் வரும் வருமானத்தை வைத்து சிகிச்சை பெற்று குழந்தை பெற்று விடலாம் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார். வெளிநாட்டில் இன்ஜினியரிங் படித்துவிட்டு உள்ளூரில் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மாதவன் கேண்டின் நடத்துவதற்காக கடன் வாங்கி அந்த பணத்தை தன்னுடைய ப்ராஜெக்ட்டில் இன்வெஸ்ட் செய்து விடுகிறார். நீராவியில் இயங்கும் படியான கார் இன்ஜின் தயாரிக்கும் அவர் மிகப்பெரிய கடனாளியாக மாறிவிடுகிறார். இதனால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் மிகப் பெரிய நெருக்கடிக்கு நயன்தாரா மாதவன் ஆளாகின்றனர். இதற்கிடையே சென்னையில் நடக்கவிருக்கும் இந்தியா பாகிஸ்தான் இறுதி டெஸ்ட் போட்டியில் தனது கடைசி ஆட்டத்தை விளையாட வேண்டும் என வெறியோடு இருக்கும் சித்தார்த் எப்படியோ ஒரு வழியாக போராடி அந்த மேட்சில் ஆடும் லெவனனில் இடம் பிடிக்கிறார். இந்த நேரத்தில் ஒரு சூதாட்ட கும்பல் அவரை தொடர்பு கொண்டு தாங்கள் சொல்வது போல் அவர் ஆட வேண்டும் என நிர்பந்திக்கிறது. அதை அவர் மறுத்து விடுகிறார். இந்த நேரத்தில் மாதவனுக்கோ பணத்தட்டுப்பாடு பிரச்சனை, நயன்தாராவுக்கு எப்படியாவது மருத்துவமனைக்கு பணம் கட்டி விட்டு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம், இதனால் சித்தார்த்தின் மகனை மாதவன் நயன்தாரா கடத்தி அதன்மூலம் சித்தார்த்தை பாகிஸ்தான் எதிராக இந்தியாவை தோற்க வைக்க சூதாட்ட கும்பலுடன் இணைந்து மாதவன் முயற்சிக்கிறார். இந்த முக்கியமான கட்டத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும் டெஸ்டில் யார் வெற்றி பெற்றார்கள்? இறுதியில் தன் மகனா, நாடா? என்ற கேள்விக்கு சித்தார்த் என்ன விடை கொடுத்தார்? மாதவன் நயன்தாரா சித்தார்த் உடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா, இல்லையா? என்பதே இந்த டெஸ்ட் படத்தின் மீதி கதை.
முதல்முறையாக தயாரிப்பாளர் ஆக இருந்து இயக்குனராக மாறி இருக்கும் சசிகாந்த் ஒரு தேர்ந்த இயக்குனர் போல் இந்த டெஸ்ட் படத்தை இயக்கியிருக்கிறார். குறிப்பாக சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்துக்கொண்டு இந்த அளவு முதிர்ச்சியான ஒரு நடிப்பை வெளிக்கொண்டு வரும்படியான படத்தை கொடுத்து இயக்குனராக கவனம் பெற்று இருக்கிறார். படம் ஆரம்பித்து போகப்போக ஒவ்வொருவரது கதைக்குள் சென்று கதாபாத்திரத்தின் தன்மைகளையும் கதை ஓட்டத்தையும் திரைக்கதை ஆழத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தி அப்படியே கதைக்குள் நம்மை படகில் பயணிக்கும் படி சில பல ஏற்ற இறக்கங்களோடு பயணிக்க செய்கிறார் இயக்குனர் சசிகாந்த். குறிப்பாக படத்தை ஓ டி டி ரசிகர்கள் ரசிக்கும்படி மிகவும் நீளமாகவும் ஸ்லோ அன் ஸ்டெடியாகவும் படத்தை கொடுத்திருக்கிறார். நிதானமான அதே சமயம் ஆழமான காட்சி அமைப்புகள் மூலம் பல இடங்களில் நம்மை ரசிக்க வைத்தாலும் படம் ஏனோ சற்று அயற்சியாகவே நகர்கிறது. கதையில் பல்வேறு திருப்புமுனைகள் இருந்தாலும் ஏனோ கதையின் வேகம் மெதுவாக இருப்பது அவைகளை ரசிக்க வைக்க சற்று ஸ்பீடு பிரேக்கர்களை ஆங்காங்கே போட்டு விடுகின்றது. இருந்தும் கதைக்களம் புதிதாக இருப்பதாலும் படத்தில் நடித்த நட்சத்திரங்கள் நமக்கு ரொம்ப பரிச்சைபட்ட நட்சத்திரங்களாக இருப்பதாலும் படத்துடன் நம்மை சற்று ஒட்ட வைக்கிறது. புதிய கதைக்களமாக கதை இருக்கிறது ஆனால் அது நிதர்சனத்திற்கு நெருக்கமாக இல்லை என்பது படத்திற்கு சற்றே மைனஸ்.
முதன்மை கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் நாயகனாக இருந்தாலும் போகப் போக வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகள் எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். இவரது எதார்த்தம் நடிப்பு அந்த கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. கிரிக்கெட் பிளேயராக வரும் மற்றொரு முதன்மை கதாபாத்திரம் சித்தார்த் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பையே இந்த படத்தில் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். ஒரு கிரிக்கெட் பிளேயருக்கே உண்டான உடல்வாகுடன் படம் முழுவதும் உலா வந்திருக்கிறார். மூன்றாவது முதன்மை பாத்திரத்தில் வரும் நயன்தாரா ஆரம்பத்தில் முதிர்ச்சியான நீ போய் அழகாக வெளிப்படுத்தி போகப் போக செயற்கையான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார். இவர்கள் மூவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்தையும் தாங்கி பிடிக்க உதவி செய்திருக்கின்றனர். முக்கிய பாத்திரத்தில் வரும் காளி வெங்கட் வழக்கம் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். சித்தார்த்தின் மகனாக வரும் சிறுவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. பாடல்கள் அனைத்துமே கதைய ஓட்டத்தின் ஒட்டியே வருவது மனதில் ஒட்ட மறுக்கிறது. வீரஜ் சின் கோஷில் ஒளிப்பதிவில் கிரிக்கெட் மைதானம் சம்பந்தப்பட்ட காட்சிகள் உலக தரம்.
இந்த டி20 காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாக வைத்து கிரிக்கெட் மைதானம் குடும்ப சூழல் கதை என வித்தியாசமான முறையில் கதை சொன்ன இயக்குனர் சசிகாந்த் டி20க்கு இருக்கும் வேகத்தை இந்த டெஸ்ட்டுக்கும் சற்றே கொடுத்து இருந்தால் இன்னமும் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும். குறிப்பாக கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகளை உண்மையில் தொலைக்காட்சியில் பார்க்கும் அளவிற்கு தரமாக காட்சிப்படுத்தி இருப்பது கூடுதல் சிறப்பு.
டெஸ்ட் - நாட் வொர்ஸ்ட்!