Skip to main content

தூள் கிளப்பினரா காளி? - ‘வீர தீர சூரன் 2’ விமர்சனம்

Published on 28/03/2025 | Edited on 28/03/2025
Veera Dheera Sooran part 2 movie review

சேது படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான பல்வேறு கமர்சியல் படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகக் காரணமாக அமைந்தது. கிட்டத்தட்ட உச்ச நட்சத்திர ஸ்டார்களின் வரிசையில் இடம்பெறும் அளவிற்கு அவரது ஸ்டார் அந்தஸ்து உயர்ந்ததற்கு அந்த மாதிரியான படங்களே காரணம். ஆனால் அதன் பிறகு சமீப கால ஆண்டுகளாக விக்ரம் நடிப்பில் அப்படி ஒரு திரைப்படங்கள் வெளிவராமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அதை நீண்ட நாட்களுக்குப் பிறகு பூர்த்தி செய்யும் வகையில் இந்த கால ஜென்-சி ரசிகர்களையும் மனதில் வைத்து அதே சமயம் அவரது ரசிகர்களையும் மனதில் வைத்து வெளியாகி இருக்கும் இந்த ‘வீர தீர சூரன் பாகம் 2’ திரைப்படம் அனைவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா, இல்லையா?

மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கும் ப்ரித்வி மற்றும் அவரது மகன் சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அந்தப் பிரச்சினை எஸ்.பி. ஆபிஸர் எஸ்.ஜே சூர்யா காதுக்கு செல்கிறது. எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் அப்பொழுது அவர்களை போட்டுத் தள்ள வேண்டும் என வெறியோடு சுற்றி கொண்டிருக்கும் எஸ்.ஜே. சூர்யா அவர்கள் மேல் என்கவுண்டர் பிளான் போடுகிறார். எஸ்.ஜே. சூர்யாவிடம் இருந்து தப்பிக்க ப்ரித்வி மற்றும் சுராஜ் ஆகியோர் முன்னாள் ரவுடியான விக்ரமிடம்(காளி) தஞ்சம் அடைகின்றனர். விக்ரம் இவர்களுக்கு உதவி செய்ய களத்தில் குதிக்கிறார். ஏற்கனவே விக்ரமுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் முட்டல் மோதல் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அவரை போட்டுத் தள்ள ப்ரித்வி மற்றும் சுராஜ் ஆகியோர் சூழ்ச்சி செய்து விக்ரமை ஏவி விடுகின்றனர். இந்த மூவரின் சூழ்ச்சியில் இருந்து விக்ரம் தப்பித்தாரா, இல்லையா? யார் யாரை கொலை செய்தனர்? என்பதே வீர தீர சூரன் 2 படத்தின் மீதி கதை.

Veera Dheera Sooran part 2 movie review

ஓர் இரவில் நடக்கும் கதையாக இந்த முழு படத்தையும் உருவாக்கி அதன் மூலம் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார் சேதுபதி, சித்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.யு. அருண்குமார். காலை விடிவதற்குள் திருவிழா முடிவதற்குள் போலீசார் வில்லன்களை என்கவுண்டர் செய்ய வேண்டும். அதேசமயம் வில்லன்கள் முந்தி கொண்டு அந்த போலீசாரை போட்டு தள்ள வேண்டும். இந்த இருவருக்குள்ளும் நடுவில் பலியாடாக விக்ரம் சிக்கி கொள்கிறார். அதிலிருந்து அவர் தப்பித்து மீண்டாரா இல்லையா என்ற ஒற்றை வரி சிறிய கதையை வைத்துக்கொண்டு ஒரே இரவில் நடக்கும் கதையாக இந்த முழு படத்தையும் கொடுத்து படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் விறுவிறுப்பு குறையாத அளவுக்கு அடுத்தடுத்து என்ன நடக்க போகும் என்ற எதிர்பார்ப்பையும் எகிற செய்து சிறப்பான கேங்ஸ்டர் படமாக இப்படத்தை கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.

விக்ரம் ரசிகர்கள் எந்த மாதிரியான படத்தை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ அப்படியான ஒரு படத்தை விக்ரமுக்கு கொடுத்து மீண்டும் பிளாக்பஸ்டர் பாதைக்கு விக்ரமை திருப்பி விட்டிருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இடைவேளை வரை மிக மிக விறுவிறுப்பாக அடுத்தடுத்து என்ன நடக்க போகும் என்ற எதிர்பார்ப்புகள் மத்தியிலே செல்கிறது, அதேபோன்று இரண்டாம் பாதியும் ஆரம்பித்து போகப் போக நீண்ட பிளாஷ்பேக் காட்சிகளால் ஆங்காங்கே சிறியதாக அயற்சி ஏற்பட்டாலும் அதையெல்லாம் சரி செய்து இறுதி கட்ட காட்சிகளில் மீண்டும் விறுவிறுப்பை கூட்டி ஒரு நல்ல கமர்சியல் கேங்ஸ்டர் படம் பார்த்த உணர்வை இந்த வீர தீர சூரன் கொடுத்திருக்கிறார். 

Veera Dheera Sooran part 2 movie review

இப்போதுள்ள காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு படத்துக்கு எந்த மாதிரியான காட்சி அமைப்புகள் தேவையோ எந்த மாதிரியான திரைக்கதை அமைப்பு தேவையோ அதை சரிவர சிறப்பாக கொடுத்து படம் பார்க்கும் இளைஞர்கள் முதல் குடும்பம் குடும்பமாக சென்று ரசிக்கும் ரசிகர்கள் வரை அனைவருக்குமான ஒரு படமாக கொடுத்து இப்படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ஸ்டார் இயக்குநர்கள் வரிசையில் இந்த படம் மூலம் இவர் அந்த வரிசையில் இணைந்து இருக்கிறார். கதாபாத்திரத்திற்காக என்ன வேண்டுமானால் செய்யலாம் என எப்பொழுதும் முனைப்புடன் பேய் நடிப்பு நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் இந்தப் படத்தில் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்றிருக்கிறார். நடிப்பு, ஆக்சன் காட்சிகள் என மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கும் விக்ரம் இந்த முறை அவர் வைத்த குறி தப்பவில்லை. அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல தீனி போட்டுள்ளார்.

ஒரு பக்கம் விக்ரம் உயிரைக் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் வெறும் முகபாவனைகள் வசன உச்சரிப்புகள் மூலம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடிப்பு ராட்சசனாக மீண்டும் ஒருமுறை மிளிர்கிறார் எஸ்.ஜே சூர்யா. இவர் தனக்கு கொடுக்கும் கதாபாத்திரம் எந்த வகை கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் எந்த அளவு எக்ஸ்பிரஷன் தேவையோ அந்த அளவு மட்டுமே கொடுத்தாலும் நடிப்பில் ராட்சசன் ஆகவே தெரிகிறார். விக்ரமுக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் விருதுகள் நிச்சயம். அதேபோல் இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி போட்டுக் கொண்டு தானும் ஒரு தேர்ந்த நடிகை என காட்டியிருக்கிறார் நாயகி துஷாரா விஜயன். இவருக்கும் விக்கிரமுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. குடும்பத்துக்குள் ஏற்படும் குழப்பங்களை ஒரு சராசரி பெண் எப்படி சமாளிப்பாரோ அப்படி சமாளித்து இறுதி கட்ட காட்சிகளில் மற்றும் ஆக்சன் காட்சிகளிலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற உணர்வை நடிப்பின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி விருதுக்கு உரிய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Veera Dheera Sooran part 2 movie review

சுராஜ் வெஞ்சரமூடு முழு வில்லன் கதாபாத்திரத்திற்கு நல்ல செலக்சன். துடுக்கான வில்லனாக நடித்திருக்கும் இவர் கிடைக்கின்ற காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்து சிறப்பாக நடித்திருக்கிறார். மலையாளத்தில் பெரிய நடிகராக இருக்கும் இவர் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை தமிழில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். முதல் முறை வில்லனாக வரும் ப்ரித்வி அதற்கு நன்றாக நியாயம் செய்திருக்கிறார். இவர்களுடன் நடிக்கும் பெண் கதாபாத்திரங்கள் அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். குறிப்பாக விக்ரம் உடனேயே பயணிக்கும் நண்பர் கதாபாத்திரமான முக்கிய கதாபாத்திரத்தில் அருண்குமாரின் சகோதரர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இவர் காட்சிக்கு காட்சி தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. 

ஜி.வி. பிரகாஷ் வழக்கம்போல் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். படத்தின் விறுவிறுப்புக்கு இவரது இசையே மிக முக்கிய காரணமாக இருக்கிறது. பாடல்கள் ஓரளவு ஹிட் ரகம் என்றாலும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்சன் காட்சிகளை உலகத்தரம் வாய்ந்ததாக தன் ஒளிப்பதிவு மூலம் உருவாக்கி கவனம் பெற்று இருக்கிறார். 

ஓர் இரவில் நடக்கும் கதையாக இருந்தாலும் திரைக்கதையில் புதுப்புது யுக்திகளை இந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்து அதையும் ரசிக்கும்படி கொடுத்து அதே சமயம் ரசிகர்களுக்கு என்ன வேண்டுமோ அந்த மாதிரியான திரை கதையும் அமைத்து முதல் பாதியில் ஜெட் வேகத்தை கொடுத்து இரண்டாம் பாதியில் ஆங்காங்கே பல்வேறு லாஜிக் மிஸ்டேக்குகள் இடையே சற்றே அயர்ச்சியுடன் படத்தை பயணிக்க வைத்தாலும் இறுதி கட்ட காட்சிகள் மூலம் மீண்டும் விறுவிறுப்பான காட்சிகள் கொடுத்து அனைத்து அயற்சியையும் மறக்கடிக்க செய்து ஒரு நல்ல சூப்பர் ஹிட் கமர்சியல் கேங்ஸ்டர் படம் பார்த்த உணர்வை இந்த வீர தீர சூரன் நமக்கு கொடுத்திருக்கிறார். குறிப்பாக இறுதி கட்ட காட்சிகளில் வரும் தூள் பட ரெஃபரன்ஸ் தியேட்டரை விசில்களால் அதிரச்செய்வது படத்திற்கு கூடுதல் சிறப்பு.


‘வீர தீர சூரன் பாகம் 2’ - சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி!

சார்ந்த செய்திகள்