
பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் 2018ஆம் ஆண்டு முதல் ‘பி.கே.ரோஸி திரைப்பட விழா’ ஆண்டுதோறும் நடந்து வருகிறது அந்த வகையில் இந்தாண்டு கடந்த 2ஆம் தேதி தொடங்கி நேற்று 6ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. நிறைவு நாள் விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வசந்த பாலன், லெனின் பாரதி, பிரம்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது வசந்த பாலன் பேசுகையில் தனது வெயில் படத்தை குறிப்பிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்டார். அவர் பேசியதாவது, “ரஞ்சித் வருவதற்கு முன்பு சாதி பற்றிய பார்வை தமிழ் சினிமாவில் வேறு ஒன்றாக இருந்தது. வெயில் படத்தில் பன்றி மேய்ப்பவரை வில்லனாக சித்தரித்ததற்கு இந்த மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். ரஞ்சித் தனது கமர்ஷியல் படங்களில் நாம் சித்தரிக்கிற ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு தலித்தாக சிறுபான்மையினராக இருந்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனத்துடன் கையாண்டது முக்கியமான விஷயம். அது இப்போது மொத்த தமிழ் சினிமாவை மாற்றியிருக்கிறது. ஒரு பெரிய படத்தில் சின்னதாகச் சாலையில் வேலை செய்பவர்களைக் குறை சொன்னால் அதைப் பற்றி 10 பேர் ஃபேஸ்புக்கில் எழுதுகிற அளவுக்கு அரசியல் படுத்தப் பட்டிருக்கிறது.
கலையுடைய முக்கியமான வேலை அரசியல். அந்த வேலையை மிகச் சிறப்பாக ரஞ்சித் செய்திருக்கிறார். அவர் ஏற்றிய இந்த அகல் விளக்கு இப்போது அழகாக எரிகிறது. அவர் ரஜினி படம் பண்ணி பெரிய காசு கிடைத்த பிறகு என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் நூலகம் தொடங்கினார். இசைக்கு ஒரு விழா நடத்தினார். அது ஆச்சரியமாக இருந்தது. இதையெல்லாம் பார்க்கும் போது பா.ரஞ்சித்தை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என தோன்றுகிறது” என்றார்.