
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டி, கொச்சி என பல்வேறு பகுதிகளில் நடந்தது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை ‘தி ஃபர்ஸ்ட் ஷாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டது படக்குழு. பின்பு இப்படத்தில் இருந்து கடந்த ஆண்டு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டது. அதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டைட்டில் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் மே 1ஆம் தேதி பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் இதுவரை வெளியான முன்னோட்ட வீடியோக்களின் மேக்கிங்கை காமிக்ஸ் வடிவில் படக்குழு வெளியிட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியான நிலையில் சமீபத்தில் இரண்டாவது பாடலாக ‘கனிமா’ பாடல் வெளியாகியிருந்தது. இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்று ரீல்ஸ் மூலம் ட்ரெண்டிங் ஆனது. இந்த நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன்’(THE ONE) லிரிக் வீடியோவுடன் வெளியாகியுள்ளது. இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் சதோஷ் நாராயணன் பாடியுள்ளார். சூர்யா கதாபாத்திரத்தை விளக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. அதை குறிக்கும் வகையில் ஒரு இடத்தில், ‘வீரனாம் கர்ணனுக்கே இவன் அப்பன்’ என்ற வரிகள் விவேக் எழுத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடல் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.