
இயக்குநர் பா.ரஞ்சித், தங்கலான் படத்தை தொடர்ந்து ‘வேட்டுவம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாக முன்பு தெரிவித்தார். இப்படத்தில் கெத்து தினேஷ் கதாநாயகனாக நடிப்பதாக கூறினார். இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக பின்பு தகவல் வெளியான நிலையில் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்குடியில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பா.ரஞ்சித் பாலிவுட்டில் படம் எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர் என அறியப்படும் பல்வங்கர் பலூவின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு நிகழ்சியில் அவர், பல்வங்கர் பலூவை பற்றி வரலாற்று ஆய்வாளர், ராமச்சந்திர குஹா எழுதிய 'எ கார்னெர் ஆப் எ பாரின் பீல்டு' (A Corner of a Foreign Field) புத்தகத்தை தழுவி படமெடுக்க தனக்கு வாய்ப்பு வந்துள்ளதாக பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு இப்படம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் விரைவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த பால்வங்கர் பாலு, புனேவில் மைதான வீரராகத் தனது கரியரைத் தொடங்கி பின்னர் 1896ஆம் ஆண்டு இந்து ஜிம்கானா அணிக்கு விளையாடும் அளவுக்கு உயர்ந்தார். இந்த பயணத்தில் அவர் எதிர்கொண்ட பாகுபாடு, சவால்கள், தோல்விகள் உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட்டின் சமூக வரலாறு ஆகியவற்றை ‘எ கார்னெர் ஆப் எ பாரின் பீல்டு’ புத்தகம் விவரிக்கிறது. இந்த புத்தகத்தை தழுவி பாலிவுட் தயாரிப்பாளர் பிரிதி சின்ஹா படமெடுக்கவுள்ளதாக கடந்த வருடம் தெரிவித்தார். மேலும் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளதாகவும் திக்மான்ஷு துலியா இயக்கவுள்ளதாகவும் அறிவித்தார். ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
முன்னதாக பா.ரஞ்சித் பாலிவுட்டில் பிர்ஸா முண்டா வாழ்க்கை வரலாற்றை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் அது அடுத்தக்கட்டத்திற்கு செல்லவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.