சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் சந்தானம் பேசுகையில், ”நான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் மற்றும் கெஸ்ட் ரோலில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. நான் அந்த வாய்ப்புகள் எதையும் ஏற்காமல் தனி ட்ராக்கில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், ஆர்யா பாஸ் (எ) பாஸ்கரன் 2 அல்லது வேறு படம் எடுத்தால் நிச்சயம் நான் நடிப்பேன். அந்த அளவிற்கு ஆர்யா எனக்கு உண்மையான நண்பன். நான் காமெடியனாக இருந்தபோதே சைக்கிளிங் பண்ணு, ஸ்விம்மிங் பண்ணு, காமெடியனாக இருந்தாலும் ஹீரோ மாதிரி இருக்கணும் என்று சொல்லி நிறைய அட்வைஸ் பண்ணுவார். பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலும் எனக்கு நிறைய ஸ்பேஸ் கொடுத்தார்.
ஆர்யாவின் எந்தப் படமாக இருந்தாலும் அதற்கு என்னுடைய ஆதரவு இருக்கும். ஏலியன் என்ற புது கான்செப்டில் கேப்டன் படத்தை எடுத்திருக்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இது மாதிரியான படங்கள் ஆர்யா தொடர்ந்து பண்ண வேண்டும். அதற்கு இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். மக்கள் ஆதரவு கொடுங்கள்” எனத் தெரிவித்தார்.
ராஜேஸ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பாஸ் (எ) பாஸ்கரன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதற்கான வேலைகள் நடந்துவரும் நிலையில், தற்போது ஹீரோவாகிவிட்ட சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிப்பாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. அந்த சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது அவரது இந்த மேடைப்பேச்சு.