![gv prakash speech at neek audio launch](http://image.nakkheeran.in/cdn/farfuture/95jRSPaODQ36BchqJ9aKq2VDHdVk8-haPrcs2-Z6cV0/1739345006/sites/default/files/inline-images/192_19.jpg)
தனுஷ் இயக்கத்தில் புதுமுகம் பவிஷ் நாராயண்(தனுஷின் சகோதரி மகன்), அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷ் இயக்கியது மட்டும் இல்லாமல் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் வருகிற 21ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குநர்கள் செல்வராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஜி.வி. பிரகாஷ் பேசுகையில், “இந்தப் படம் இளமையான கதையம்சம் கொண்ட திரைப்படம் என தனுஷ் கூறியதால், அதற்கேற்றவாறு இளமை ததும்பும் மாற்று இசையை இப்படத்திற்காக உருவாக்கினோம். அவருடன் இணைந்து பயணிப்பது சிறப்பான அனுபவம். அவருடைய இயக்கத்தில் முதன்முறையாக இசையமைத்தது புதிய அனுபவமாக இருந்தது. சமீபகாலமாக நான் இசையமைத்ததில் என்னுடைய பெர்சனல் ஃபேவரட், இந்த ஆல்பம் தான்” என்றார்.
பின்பு, இந்த படத்திற்காகத் தான் எதுவுமே வாங்கவில்லை எனப் படத்தின் தயாரிப்பாளர் ஷ்ரேயஸ் சொன்னதாக கூறிய அவர், கீழே அமர்ந்திருந்த ஷ்ரேயஸை பார்த்து, ஜெயிலர் படம் முடிந்ததும் தயாரிப்பு நிறுவனம் கலைஞர்களை கவனித்தது, அது போல எங்களையும் கவனித்துவிடுங்கள் என கலகலப்பாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.