Skip to main content

“காலம்தோறும் அரசாங்க ஆவணங்கள் உன் பெயரை உச்சரிக்கும்” - வைரமுத்து

Published on 12/02/2025 | Edited on 12/02/2025
vairamuthu about spb road name

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வசித்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகருக்கு ‘எஸ்பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் வைக்க வேண்டும் என அவரது மகன் எஸ்பி.சரண் கடந்த ஆண்டு முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தார். அதை ஏற்ற முதல்வர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு நாளான செப்டம்பர் 25ஆம் தேதி(2024) எஸ்பி.சரண் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவித்தார். அதன்படி நேற்று(11.02.2025) சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள பகுதிக்கு 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை' என பெயர் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சில அமைச்சர்கள், எஸ்.பி.சரண் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக தற்போது வைரமுத்து தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மறைந்த பெரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த தெருவுக்குத் தமிழ்நாடு அரசு அவர் பெயர் சூட்டியிருப்பது கலை உலகத்தைக் களிப்பில் ஆழ்த்துகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைமாண்பை அது காட்டுகிறது. கைதட்டிக்கொண்டே நன்றி சொல்கிறேன். என் இசைச் சகோதரா!

‘காற்றின் தேசம் எங்கும் – எந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் – எந்தன்
ராகம் சென்று ஆளும்’ என்று
பாடிப் பறந்த பறவையே

உன் புகழ்
எத்துணை உலகம் சென்றாலும்
நீ வாழ்ந்த வீதியிலேயே
வரலாறாய் அமைவது
பெருமையினும் பெருமையாகும் 

இனி காலம்தோறும்
அரசாங்க ஆவணங்களும்
பொதுவெளியும்
உன் பெயரை உச்சரிக்கும்

மரணத்தை வெல்லும்
கருவியல்லவோ கலை?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்